இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி என்பதன் தத்துவத்தை நாம் இவ்வாறு விளக்குவதனால் இஸ்லாத்தின் மகிமை பறைசாற்றப்படுகிறது. அதேவேளை இஸ்லாத்தைப் பிழையாகப் புரிந்தவர் அதனை சரியாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பும் ஏற்படுகிறது. எனினும் இந்த விளக்கத்தால் இஸ்லாம் நிலைநாட்டப்பட்டு விடுவதில்லை.
‘இஸ்லாம் ஒரு வணக்க நெறி’ என்பதை விட ‘வாழ்க்கை நெறி’ என்ற புரிதல் முஸ்லிம் சமூகத்திடம் இருப்பது அவசியமே. எனினும் அது ஒரு தத்துவார்த்த விளக்கம் என்பதை நாம் உணர்ந்திருத்தல் வேண்டும்.
இந்தத் தத்துவார்த்த விளக்கம் மனிதர்களில் சிலரைக் கவரவே செய்யும். அவர்களது வாழ்க்கையில் தாக்கத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்துகின்ற ஆற்றல் அதற்குண்டு என்பதை யும் நாம் மறுக்க முடியாது. எந்தவொரு விடயத்தையும் உள்வாங்கி சிந்தித்து ஆராய்ந்து முடிவு செய்பவர்களிடம் இந்த விளக்கம் தாக்கம் செலுத்துகின்றது. அந்தகையவர்கள் முஸ்லிம்களாக இருப்பினும் சரி முஸ்லிமல்லாதவர்களாக இருப்பினும் சரி இஸ்லாம் பற்றிய அறிவுபூர்வமான விளக்கங்கள் அவர்களைக் கவர்கின்றன. இஸ்லாத்தை நேசிக்கவும் அதனை விசுவாசிக்கவும் அதிலே ஆழமாகத் தடம்பதிக்கவும் இந்த விளக்கம் அவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன.
அது மட்டுமல்ல சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களுக்கும் இஸ்லாம் பற்றிய இந்தப் புரிதலும் விளக்கமும் இன்றியமையாததாகும். இந்தப் புரிதலும் விளக்கமும் இல்லாமல் இஸ்லாம் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையோடு அவர்கள் சமூகத்தை வழிநடத்த முற்படுவார்களாயின் பிழையான திசைகளிலேயே அவர்கள் சமூகத்தை வழிநடத்துவார்கள். ஆலிம்கள் தாஇகள் என்போரும் கூட இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி என்ற கோட்பாட்டைத் தெளிவாக விளங்கியிருத்தல் வேண்டும். இஸ்லாத்தை ஒரு வணக்க நெறியாக (வணக்கம் பற்றிய குறுகிய பார்வையில்) அவர்கள் விளங்கிக் கொள்வார்களாயின் அப்போதும் சமூகம் குழப்பத்தில் ஆழ்ந்து போவதைத் தவிர்க்க முடியாது.
தத்துவார்த்த ரீதியாக இஸ்லாம் பற்றிய சரியான புரிதலும் விளக்கமும் எவ்வளவுதான் முன்வைக்கப்பட்டாலும் அது அனைவரையும் கவருவதில்லை. தனி மனிதர்கள் சிலரை சரியான திசையில் அந்த விளக்கம் வழிநடத்தினாலும் சமூகம் அதன் வழமையான திசையிலேயே ஓடிக் கொண்டிருக்கும். தஃவா களத்தில் இருப்பவர்கள் இந்த உண்மையையும் உணர்ந்திருத்தல் வேண்டும்.
அவ்வாறாயின் ‘இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி’ என்பதற்கப்பால் சிந்திக்க வேண்டிய மற்றுமொன்றும் இருக்கிறதா எனும் வினா எழுகிறது.
ஆம் நிச்சயம் இருக்கிறது. இஸ்லாத்தை ஒரு வாழ்க்கை நெறி என்ற அந்தஸ்திலிருந்து ‘வாழ வைக்கும் நெறி’ எனும் தரத்திற்கு நாம் அதனை உயர்த்த வேண்டும். அப்போதுதான் சமூக மாற்றம் தளிர் விடத் துவங்குகிறது.
வாழ வைக்கும் நெறி என்றால் என்ன?
ஏற்கனவே ‘வாழ்க்கை நெறி’ என்பதற்கான விளக்கத்தைப் பார்த்தோம். ‘வாழ வைக்கும் நெறி’ என்பது அதனைவிட வேறுபட்டதாகும்.
இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி என்பது பற்றித் தெரியுமோ தெரியாதோ மனிதர்கள் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். அவர்களது முதற் பிரச்சினை அவர்களது வாழ்க்கையாகும். அவர்களது வாழ்க்கை சோதனைகளும் போராட்டங்களும் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. வாழ்க்கைச் சுமைகள் பல்வேறு வடிவங்களில் அவர்களை அழுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில்… தாஇகள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகப் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களோ அவர்களை வாழவைக்கும் நெறியொன்றை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
‘வாழவைக்கும் நெறி’ என்பது அவர்களை உலகிலும் வாழவைத்து மறுமையிலும் அவர்களை வாழவைக்கும் நெறியாகும். அதாவதுஇ அவர்களது மறுமைப் பிரச்சினைகளையும் தீர்த்து உலகப் பிரச்சினைகளையும் தீர்க்கும் நெறியாகும்.
மக்கள் இஸ்லாத்தை செவிமடுக்கும்போது அவர்களுக்கு இந்த உண்மை விளங்க வேண்டும். அதாவது உலகிலும் மறுமையிலும் தங்களது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து தங்களை வாழவைக்கும் நெறி யொன்றின்பால் நாம் அழைக்கப்படுகிறோம் என்பது அவர்களுக்கு விளங்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்கள் இஸ்லாத்தின்பால் வருவார்கள். தங்களது இம்மைப் பிரச்சினைகளை அலட்டிக் கொள்ளாமல் மறுமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறும் ஒரு நெறியின்பால் அவர்கள் அழைக்கப்பட்டால் அதிகமானவர்கள் அக்கறையோடு அதனை நோக்க மாட்டார்கள்.
குர்ஆனும் வாழ்க்கை நெறியின் பக்கம் வாருங்கள் என்று கூறாமல் வாழ வைக்கும் நெறியின்பால்தான் அழைப்பு விடுகிறது. எட்டாம் அத்தியாயம் 24வது வசனம் ஈமான் கொண்டவர்களை நோக்கி பின்வருமாறு அழைப்பு விடுக்கிறது:
‘ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களை வாழ வைக்கும் ஒன்றின்பால் அழைத்தால் அவ்வழைப்புக்குப் பதில் கூறுங்கள்’.
இந்த வசனத்தின் ஆழமான பொருளை விளங்கிக் கொள்ள இறுதித் தூதர் அனுப்பப்பட்ட அரபு சமூகத்தின் அன்றைய நிலையை நாம் ஒருமுறை மீட்டிப் பார்க்க வேண்டும்.
அது ஒரு பாலைவனம். இயற்கை வளங்கள் எதுவும் அங்கில்லை. அங்கு வாழ்ந்த மக்கள் உயர்ந்தவர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் வேறுபடுத்தப்பட்டிருந்தார்கள். ஒரு புறத்தில் வறுமை மற்றொரு புறத்தில் அறியாமை. இவற்றோடு அடிமைத்துவம் அநீதி என்பவற்றின் அரசாட்சி ஒழுக்க வீழ்ச்சி பொருளாதார சீர்கேடுகள் என்பன அங்கு தாராளம். பசி பிணிகளால் வாழும் மக்களை அரவணைக்க அங்கு எந்த ஏற்பாடும் இல்லை. குலப் பெருமையும் வரட்டு கௌரவங்களும் அவர்களை சின்னாபின்னப்படுத்தி இரத்தம் சிந்தும் போர்க்குணம் கொண்டவர்களாக அவர்களை மாற்றியிருந்தன.
இந்நிலையில் அம்மக்களை அல்லாஹ்வின் தூதர் வாழவைக்கும் நெறியொன்றின்பால் அழைக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? இந்தளவு பிரச்சினைகளையும் கிடப்பில் போட்டுவிட்டு அவர்கள் மக்களை மறுமையின் வெற்றி நோக்கி மட்டும் அழைக்கவில்லை அல்லது இவை அனைத்தும் அழிந்து போகும் அற்பமான உலகின் சோதனைகள் ஈமான் கொண்டவர்கள் இவற்றை சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொள்ளவுமில்லை. அல்லது மனிதர்கள் ஈமான் கொண்டு தொழுது நோன்பு நோற்றால் மட்டும் போதும். அல்லாஹ் இவற்றைத் தானாக மாற்றித் தருவான் என்று கூறவுமில்லை.
வாழ வைக்கும் நெறியின்பால் அவர்கள் விடுத்த அழைப்பு இதுவல்ல. அவர்கள் அனைவரையும் அழைத்தது உலக மறுமைப் பிரச்சினைகள் அனைத்தையும் வெற்றி கொள்ளும் ஒரு கொள்கையின்பாலாகும். நபியவர்கள் கூறினார்கள்.
‘லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள்.’ வெற்றி பெறுவீர்கள்.
அண்ணலார் அழைப்பு விடுத்த அந்த வெற்றி பொதுவானது. அது உலகத்தில் பிரச்சினைகளை வெற்றி கொண்டு மறுமையின் பிரச்சினைகளையும் வெற்றி கொள்வதற்கான அழைப்பாகும். ‘லா இலாஹ இல்லல் லாஹ்’வின் பொருளை அறிந்தவர்கள் அதில் பொதிந்திருக்கும் வெற்றியின் இரகசியத்தை உணர்வார்கள். ‘லா இலாஹ இல்லல்லாஹ்’வின் பொருளை இங்கு தத்து வார்த்தமாக விளக்குவதை விட அந்தக் கொள்கையை நிலைநாட்டிய நபிகளாரின் வரலாற்றை ஒரு முறை மேலோட்டமாக மீட்டிப் பார்த்தாலே போதுமானது. அவர்களது வரலாறு உலக மறுமைப் பிரச்சினைகளை வெற்றி கொண்ட வரலாறாக அன்றி வேறெதுவாக இருக்க முடியும்?
கொலைவெறி தாண்டவமாடிய அன்றைய அரபுச் சூழலில் ‘சன்ஆவிலிருந்து ஹழ்ரமௌத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு அச்சங்களின்றி இரவு பகலாகத் தனியே பயணிப்பாள்’ என்று கூறுமளவு பிரச்சினைகளைத் தீர்த்த ஒரு நபியைத்தான் நாம் வரலாற்றில் காணுகிறோம். அது மட்டுமா? ‘அரபு மண்ணில் நான் வணங்கப்படுவேன் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்து விட்டான்’ என்று கூறுமளவு பிரச்சினை களற்ற ஓர் அமைதித் தேசமாக அரபுத் தேசத்தை அண்ணலார் மாற்றியமைத்தார்கள்.
ஆக ‘வாழ வைக்கும் நெறி’ இஸ்லாம் என்பதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிரூபித் துக் காட்டினார்கள். அந்த நிரூபணம் முன்னேற்றமடைந்த போதெல்லாம் மக்கள் இஸ்லாத்தை நோக்கி முன்பிருந்ததை விட அதிகமாக முன்னேறினார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உலகில் ஆற்ற இருக்கும் பணி பற்றி முன்கூட்டியே அல்லாஹ் அல்குர்ஆனில் பிரஸ்தாபித்திருந்தான். ஸூர துல் அஃராபின் 157வது வசனம் அண்ணலாரின் பணியை விவரிக்கிறது.
‘அவர்கள் நன்மையை ஏவுவார்கள் தீமையைத் தடுப்பார்கள். நல்லவற்றை ஹலாலாக்குவார்கள் தீயவற்றை ஹராமாக்குவார்கள். மக்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் சுமைகளையும் அவர்கள் மீதிருக்கும் (அடிமைத்தள) விலங்குகளையும் அகற்றுவார்கள்…’
வாழவைக்கும் அண்ணலாரது பணியே இவ்வாறு அல்லாஹ்வால் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. நபிகளார் மட்டுமல்ல அவருக்கு முற்பட்ட கால நபிமார்களும்கூட மக்களை வாழவைக்கும் அழைப்பையே விடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்திலும் உலகின் எந்தப் பிரச்சினை அவர்களது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்குத் தடையாக இருந்ததோ அந்தப் பிரச்சினையிலிருந்து அந்த சமூகத்தை விடுவிப்பது அந்தந்த நபிமார்களின் பொறுப்பாக இருந்திருக்கிறது.
ஸூரதுஷ் ஷுஅராவைப் படித்துப் பாருங்கள். நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) பிர்அவ்னின் அடக்குமுறை ஆட்சியிலிருந்து பனூ இஸ்ரவேலர்களை விடுவிப்பதற்காக நடத்திய போராட்டம் நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மூட நம்பிக்கைகளிலிருந்து தனது சமூகத்தைப் பாதுகாக்க நடத்திய போராட்டம் நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற வர்க்க வேறுபாடுகளை அகற்றுவதற்காக நடத்திய போராட்டம் ஹூது ஸாலிஹ் (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோர் சமூகத்தின் மேல் மட்டத்தையும் கீழ்மட்டத்தையும் பீடித்திருந்த ஆடம்பர மோகத்திற்கெதிராக நடத்திய போராட்டம் நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) பாதாளத்தை நோக்கி அந்த சமூகத்தைக் கொண்டு சென்ற பயங்கரமான ஒழுக்கச் சரிவுக்கெதிராக நடத்திய போராட்டம் நபி ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) பொருளாதார நடைமுறைகளில் காணப்பட்ட சீர்கேடுகளுக் கெதிராக நடத்திய போராட்டம்…
இவை அனைத்தும் உணர்த்துவது என்ன?
நபிமார்கள் அல்லாஹ்வின் பக்கமும் மறுமையின் பக்கமும் மக்களை அழைத்தார்கள். அதேவேளை உலகிலும் மக்களின் வாழ்க்கையை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அவலங்களிலிருந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களை வாழவைக்கும் போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள்.
இஸ்லாம் ‘வாழும் நெறி’ மடடுமல்ல அது உலகை ‘வாழவைக்கும் நெறி’ என்பதை ஒவ்வொரு நபியும் உலகில் நிரூபித்திருக்கிறார்கள். இதுதான் நபிமார்கள் உலகில் செய்த பணி.
ஆனால் இன்று இந்நிலை மாறுபட்டிருக்கிறது. இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாகக் காட்டப்படுகிறது. ஒரு வணக்க நெறியாக சம்பிரதாய நெறியாகக் காட்டப் படுவதை விட இது சிறந்ததே. எனினும் வாழவைக்கும் நெறியாக அது மாற்றப்படவில்லை. அதனால் அவலங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அழைப்பும் பணிகளும் தொடருகின்றன.
இன்றைய அவலங்களை சிறிது நோக்குங்கள்.
சொகுசையும் கவர்ச்சியையும் இலக்காகக் கொண்ட வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம்.
சேவை மனப்பாங்கற்ற உத்தியோகம்.
ஒழுங்கும் கட்டுப்பாடும் கேள்விக்குறியாகும் நிர்வாகம்.
காதிக்கோட்டில் காத்துக் கிடக்கும் குடும்ப வாழ்வு.
நீதியும் அர்ப்பணமும் அற்ற தலைமைகள்.
பண்பாடு அறியாமல் வளரும் அடுத்த சந்ததி.
மேற்கத்தேய சிந்தனையில் குளிர் காயும் இளைஞர்இயுவதிகள்.
சொத்துப் பங்கீட்டைப் புறக்கணித்து சீதனத்தை சட்டமாக்கியுள்ள திருமணம்.
பாதாள உலகம் என்ற பெயரில் பலிக்கடாவாகும் அப்பாவித்தனம்.
விகிதாசாரத்தைத் தாண்டிச் செல்லும் குற்றச் செயல்.
இரத்தத்தை உறைய வைக்கும் ஒழுக்கச் சீர்கேடு.
வட்டியும் ஏமாற்றும் கட்டாயமாக்கப்பட்ட வியாபரம்.
ஆணையும் பெண்ணையும் தொற்றியிருக்கும் வெளிநாட்டு மோகம்…
இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு ‘இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி’என்று எவ்வளவு காலம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்?
இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறிதான் சந்தேகமில்லை. எனினும் அது வாழவைக்கும் நெறியாக தன்னைத்தானே மாற்றிக் கொள்வதில் தாஇகளும் தஃவா அமைப்புகளும் தான் அதனை வாழ வைக்கும் நெறியாக மாற்ற வேண்டும். அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால் இஸ்லாத்தின் மகிமையை உலகம் நிச்சயம் புரிந்து கொள்ளும்.
jazakumullah - usthazhajjulakbar.org