Search This Blog

Pages

Wednesday, December 18, 2013

டீன்-ஏஜ் பிள்ளைகளை பெற்றோர் எவ்வாறு வழிநடத்தல்!


Muslim teenage boys laughing at the seashore , Galle Fort , Sri Lanka
டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லையா? நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படின்னா இதை படிங்க. 
1. அன்பாக இருங்கள்:
உங்கள் குழந்தை பிறந்த போது, அதன் மீது எவ்வளவு அக்கறையும், பாசமும் காட்டினீர்களோ, அதே அளவு, இந்த பருவத்திலும் காட்ட வேண்டும். இது, அவர்களின் முக்கியமான பருவம்.
டீன்-ஏஜ் பருவம் என்பது நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள்ளாக குழம்பி தவிக்கும் பருவம். அன்பாக இருப்பது மட்டுமின்றி, தோழமையுடனும் பழகுங்கள். அப்போது தான், அவர்களது வீண் பயம், குழப்பம் போன்றவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முன் வருவர். ஏனெனில், இது, மன உளைச்சலுடனும், சோர்வுடனும் காணப்படும் பருவம்.
2. கட்டாயப்படுத்தாதீர்கள்:
உங்கள் பிள்ளைகள், நீங்கள் கூறுவதுபடி தான் செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். உதாரணமாக, “இந்த உணவை தான் நீ சாப்பிட வேண்டும், இன்றைக்கு இந்த டிரஸ் தான் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற, அவர்களது சிறு சிறு விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். அவர்கள் உணர்ச்சிகளுக்கும், விருப்பங்களுக்கும் இடம் கொடுங்கள். இதற்கு, முதலில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
3. சந்தேகப்படாதீர்கள்:
இந்த பருவத்தில் உள்ள அனைவருமே பொதுவாக, தங்கள் அழகு குறித்து கவலைப்படுவர். அதிலும், பெண்களை கேட்கவே வேண்டாம். எனவே, கண்ணாடி முன் நிற்கும் உங்கள் பெண்ணை, அனாவசியமாக திட்டாதீர்கள். சந்தேகக் கண் கொண்டு அவர்களைப் பார்க்காதீர்கள். இப்படி நீங்கள் நடந்து கொள்ளும் போது, அது அவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும். எனவே, உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்.
4. கோபப்படாதீர்கள்:
குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை அவர்களிடம் அன்பாக இருங்கள். இந்த பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம், கோபப்பட்டு உங்களால் எதையும் சாதிக்க முடியாது. அன்பால் மட்டுமே அவர்களை திருத்த முடியும். நீங்கள் கோபப்பட்டால், அவர்கள் டென்ஷன் ஆவர்.
உதாரணத்திற்கு, அவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதை நிறுத்துங்கள். இப்படி செய்வதால், அவர்களுக்கு, உங்கள் மீது மட்டுமின்றி, படிப்பின் மீதும் வெறுப்பு வரும். எனவே, நீங்கள் அவர்கள் படிப்பிற்காக ஆகும் செலவு பற்றியும், படிப்பின் அவசியத்தைப் பற்றியும் அன்பாக எடுத்துக் கூறுங்கள்.
5. உற்று நோக்குங்கள்:
உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை அவர்கள் அறியாதவாறு கண்காணியுங்கள். சிலர், இந்த பருவத்தின் போது, சரியாக சாப்பிட மாட்டார்கள்; தூங்க மாட்டார்கள். இது, டீன்-ஏஜ் வயதுள்ள அனைவரிடமும் காணப்படும் பொதுவான விஷயம். இதுகுறித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாலும், பிரச்சனை அளவுக்கு அதிகமாக போகும் போது, அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.

சுவாசப் பரிசோதனை மூலம் நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடித்து விடலாம்


pjt1p07_0
சிறு சுவாசப் பரிசோதனை மூலம் நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடித்து விடலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி பீட்டர் ஜே. மஸ்ஸோன் தெரிவித்தார்.
புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் சாதாரணமாக மூச்சு விடும்போது ஒரு வகை ரசாயனம் வெளியேறுவதாக உணரப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அமெரிக்காவில் உள்ள கிளவ்லேண்ட் நுரையீரல் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமைய இயக்குநரான பீட்டர் ஜே. மஸ்ஸோன் கூறுகையில், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் ஒருவித ரசாயன தொடர்புள்ள சதை வளர்ச்சியை தூண்டுகின்றன. தற்போது சுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் மேற்கொண்டுள்ள புற்றுநோய் ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

நட்பு நாட்டு தலைவர்களின் டெலிபோன் பேச்சு ஒட்டுகேட்பு நிறுத்தி வைக்க ஒபாமா உத்தரவு


ce39ce95-16be-463c-9a83-ccbe863dc3e1_S_secvpf
அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டு கேட்பதை நிறுத்திவைக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பா உளவு நிறுவனங்கள் திரட்டிய தகவல்களை என்எஸ்ஏவுடன் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏவின் முன்னாள் அதிகாரி ஸ்நோடென்  வெளியிட்ட தகவலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கெல் உள்பட 32 நாடுகளின் தலைவர்களின் டெலிபோன் பேச்சுகளை என்எஸ்ஏ ஒட்டு கேட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அமெரிக்கா விளக்கம் அளிக்க வேண்டும் என ஜெர்மனி வலியுறுத்தி வருகிறது.
இதனால் இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒபாமாவுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என என்எஸ்ஏ விளக்கம் அளித்தது. உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்களின் டெலிபோன் ஒட்டு கேட்ட விவகாரம் தற்போது அமெரிக்காவிற்கு இக்கட்டை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதுகுறித்து வெள்ளை மாளிகையில் உயர் மட்ட அதிகாரிகள் தலைமையிலான பரிசீலனை கூட்டம் நடைபெற்றது. அப்போது என்எஸ்ஏவின் இயக்குனர் கெயித் அலெக்சாண்டர் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளின் பொதுமக்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவையாகும். மாறாக, ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் தான் என்எஸ்ஏவுடன் ராணுவ ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொண்டன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி டயானே கூறுகையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள், அமெரிக்க குடிமக்கள் உள்ளிட்டோரின் டெலிபோன் பேச்சுகளை ஒட்டு கேட்பதை நிறுத்தி வைக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். டெலிபோன் ஒட்டு கேட்பதை தடை செய்துவது குறித்து விரைவில் அதிபர் ஒபாமா அறவிப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலாவை கொல்ல சதி செய்த நான்கு பேருக்கு 35 ஆண்டு சிறை


Evening-Tamil-News-Paper_77568781376
ஆப்பிரிக்காவின் விடுதலைக்காக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை அமைத்து போராடியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக வெள்ளையர்கள் அவ ரை 20 ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைத்தனர். உலக நாடுகளின் நெருக்கடிக்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் அவர் 1994ல் அதிபரானார். 90களிலும், 2000மாவது ஆண்டுகளிலும் அவரை கொல்லவும், அவரது ஆட்சியை கவிழ்க்கவும் போய்ரிமாக் என்ற வெள்ளையர் விவசாய முன்னணி என்ற அமைப்பு சதி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழும்பின. இதற்காக அந்த அமைப்பு பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையும் அரங்கேற்றியது. இதற்கு அந்த அமைப்பினர் பொறுப்பேற்பதாகவும் அறிவித்தனர்.
அந்த கால கட்டத்தில் ஒருமுறை மண்டேலா லிம்போபோ மாகாணத்தில் உள்ள பள்ளியை பார்வையிட காரில் சென்ற போது, அவர் செல்லும் வழியில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து கொல்ல முயற்சி நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்பாக அந்த சதி முறியடிக்கப்பட்டு, மண்டேலா அந்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். இந்த கொலை முயற்சி தொடர்பாகவும் அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த அமைப்பைச் சேர்ந்த 20 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நடை பெற்ற இந்த வழக்கில் நேற்று ஜோகன்னஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் மண்டேலாவின் ஆட்சியை கவிழ்க்க சதி மற்றும் அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 4 வெள்ளையர்களுக்கு தலா 35 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஏபென் ஜோர்டான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள போதே இரண்டு பேர் இறந்து விட்டனர். இந்த வழக்கில் பத்து ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர்களை, அவர்கள் ஏற்கனவே விசாரணையின் போதே சிறை தண்டனையை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

துப்பாக்கி குண்டில் இருந்து உயிரை காப்பாற்றிய கையடக்கத் தொலைபேசி


d4deb447-7607-4f19-a3a3-c0fad6cd0549_S_secvpf
அமெரிக்காவில் உள்ள ஓர்லண்டோவின் நகரில் வின்டர் கார்டன் பகுதி உள்ளது. இங்கு ‘கியாஸ்’ அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் அங்கு ஒரு கொள்ளையன் புகுந்தான்.
முதலில் தனக்கு உதவி செய்யும்படி கேட்ட அவன் திடீரென தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கி காட்டி பணப் பெட்டியை திறக்கும்படி மிரட்டினான்.
அதற்கு அந்த ஊழியர் மறுத்து விட்டார். எனவே, அவருடன் இருந்த மற்றொரு ஊழியரையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினான். அவரும் பெட்டியை திறக்க மறுக்கவே ஆத்திரம் அடைந்த அவன் ஊழியரின் மார்பில் துப்பாக்கியால் சுட்டான். பின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
கொள்ளையன் சுட்டத்தில் ஊழியரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஏனெனில் இவர் தனது சட்டைப் பையில் கையடக்கத் தொலைபேசி வைத்திருந்தார்.
இதனால் கொள்ளையனின் துப்பாக்கி குண்டு ஊழியரின் மார்பை துளைக்காமல் செல்போன் தடுத்துவிட்டது. அந்த செல்போன் முன்பகுதி மட்டும் உடைந்து சேதம் அடைந்தது.
இந்த விவரம் உடனடியாக ஊழியருக்கு தெரியவில்லை. வின்டர் கார்டன் போலீசாரின் விசாரணையின் போது தான் தெரிய வந்தது.

ஆசிரியர் கற்பித்த வாழ்க்கைப் பாடம்


1384393_658508490849220_1751133110_n
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.
அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள்.
அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள். அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன.
மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.
அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.
உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.
மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.
அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.
பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”
”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது.
உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”
“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”
“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”
அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.
ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

ஹெட்போனில் பாட்டு கேட்பவர்களுக்கு காது பிரச்சனை ஆபத்து


15974599-man-silhouette-with-headphone-and-sound-waves
ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு காது பிரச்சனை ஆபத்து ஏற்படும் என்று நியூயார்க் நகர சுகாதார துறை நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.நியூயார்க் நகர சுகாதார துறை 18 வயது முதல் 44 வயது வரை நடத்திய ஆய்வில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு அதிகமாக காது பிரச்சனை ஏற்படும் ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளது. தினமும் குறைந்த அளவு சத்தத்தில் பாட்டு கேட்பதோடு அடிக்கடி ஒய்வு கொடுக்க வேண்டும் என்கிறார் நிபுணர்கள்.

உலகின் முதல் மிதக்கும் அணு உலை


img1130713002_1_1
உலகின் முதன் முறையாக மிதக்கும் அணு உலையை ரஷ்யாவின் பிரபல நிறுவனம் தயாரிக்க உள்ளது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் வருகிற 2016ம் ஆண்டில் 6வது சர்வதேச கப்பல் கண்காட்சி நடைபெறுகிறது.
அதையொட்டி ரஷ்யாவில் மிகப் பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான பில்டிங் பிளாண்ட் அதிசயிக்கத்தக்க வகையில் ஒரு பிரமாண்டமான அணு உலை கப்பலை தயாரிக்கிறது.
இந்த கப்பலில் அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் அக்கப்பல் நிறுத்தப்படும் நகரங்களில் மின்வசதியை அளிக்க முடியும்.
இதன் மூலம் இது உலகிலேயே முதலாவது மிதக்கும் அணு உலை என்ற சிறப்பை இக்கப்பல் பெறுகிறது.

பொது நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு ஹிலாரி வசூலிக்கும் தொகை ரூ.1.20 கோடி


Tamil-Daily-News_90671503544
அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பொது நிகழ்ச்சிகளில் பேசி கோடிகளில் பணத்தை அள்ளி வருகிறார். பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக முதல் முறை பொறுப்பு ஏற்றபோது ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் ஒபாமா 2வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டபோதும் ஹிலாரியே வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த பிப்ரவரியில் ஹிலாரி அந்த பொறுப்பிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஜான் கெர்ரி வெளியுறவு அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
தற்போது ஹிலாரி முக்கிய பேச்சாளராக மாறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் பேச ரூ.1.20 கோடி வரை கட்டணமாக வசூலித்து வருகிறார். கட்டணம் மட்டுமின்றி அவர் வந்து செல்ல தனியாக ஜெட் விமானம் ஏற்பாடு செய்யும் அளவுக்கு கூட செலவு அதிகரிக்கிறது.
ஹிலாரியின் கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டனும் இதேபோல பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றி சம்பாதித்து வருகிறார். அவர் இதன் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.102 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். பெரும்பாலும் அமெரிக்காவுக்கு வெளியே பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார். நைஜீரியாவின் லாகோஸ் பகுதியில் உள்ள நிறுவனத்தில் பேசியபோது அவருக்கு ரூ.4.2 கோடி கொடுக்கப்பட்டது. ஹிலாரி பல ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ளார். வரும் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.