அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பொது நிகழ்ச்சிகளில் பேசி கோடிகளில் பணத்தை அள்ளி வருகிறார். பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக முதல் முறை பொறுப்பு ஏற்றபோது ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் ஒபாமா 2வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டபோதும் ஹிலாரியே வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த பிப்ரவரியில் ஹிலாரி அந்த பொறுப்பிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஜான் கெர்ரி வெளியுறவு அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
தற்போது ஹிலாரி முக்கிய பேச்சாளராக மாறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் பேச ரூ.1.20 கோடி வரை கட்டணமாக வசூலித்து வருகிறார். கட்டணம் மட்டுமின்றி அவர் வந்து செல்ல தனியாக ஜெட் விமானம் ஏற்பாடு செய்யும் அளவுக்கு கூட செலவு அதிகரிக்கிறது.
ஹிலாரியின் கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டனும் இதேபோல பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றி சம்பாதித்து வருகிறார். அவர் இதன் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.102 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். பெரும்பாலும் அமெரிக்காவுக்கு வெளியே பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார். நைஜீரியாவின் லாகோஸ் பகுதியில் உள்ள நிறுவனத்தில் பேசியபோது அவருக்கு ரூ.4.2 கோடி கொடுக்கப்பட்டது. ஹிலாரி பல ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ளார். வரும் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment