இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (ஹி.661728, கி.பி. 12631327) இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பேராற்றலும் செயற்திறனும் பின் விளைவுச் செறிவும் பெற்ற மனிதர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றார்.
இவர் பிறந்த காலம் இஸ்லாமிய உலகைப் பொறுத்த வரை தொயின்பியின் வார்த்தையில் குறிப்பிடுவதாயின் அரசுச் சமுதாயம் சின்னாபின்னப்பட்டிருந்த ஒரு காலமாகும்.
இமாம் இப்னு தைமிய்யாவின் காலம் சில விடயங்களில் இமாம் அஹ்மதின் காலத்தை ஒத்திருந்தது. ஆயினும், இமாம் அஹ்மதின் காலத்தைப் போலன்றி இவர் காலத்தில் அறிவியல் இயக்கம் தேக்க நிலையை அடைந்திருந்தது.
பிக்ஹுத் துறையானது மாசடைந்து அதன் தூய்மையை இழந்திருந்தது. முன்னைய இமாம்களதும் அவர்களின் மாணவர்களினதும் ஆக்கங்களை மனனமிட்டுப் பதிய வைத்துக் கொள்வதே சமூக முதன்மையைப் பெறுவதற்குரிய ஒரு தகைமையாகக் கருதப்பட்டது. அத்துடன் புதிய பிரச்சினைகளின் தீர்வுக்கு சட்ட மூலாதாரங்களை ஆதாரங்களாகக் குறித்துக் காட்டும் மரபு நீங்கி இமாம்களின் நூல்களையும் பத்வாக்களையும் ஆதாரமாகக் காட்டும் புதிய மரபு ஒன்றும் உருவாகியிருந்தது.
இதைத் தொடர்ந்து குறித்த ஓர் இமாமை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனைப் பாங்கும் வளர்ந்தது. இதன்வழி, குறித்த நான்கு இமாம்களுக்குப் பின் இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டு விட்டது என்ற கருத்தோட்டமும் வலுப் பெற்றது. சுய சிந்தனாவழி, இஜ்திஹாத் என்பன புறக்கணிக்கப்பட்டு, மத்ஹபுகளை, அதன் இமாம்களை ஆராய்வின்றிப் பின்பற்றும் பண்பு வளர்ச்சி கண்டது. இப்பண்பே தக்லீத் எனப்படுகின்றது.
அறிவியல் ரீதியாகவும் இருவரது காலமும் வேறுபட்டு அமைந்தன. இமாம் அஹ்மதின் காலத்திலோ அப்பாஸிய கிலாபத் சில கலீபாக்கள் முஃதஸிலாக் கொள்கைச் சார்புடையோராக இருந்தபோதிலும் பலமிக்கதாகக் காணப்பட்டது. ஆனால், இப்னு தைமிய்யாவின் காலத்தில் இந்நிலை இருக்கவில்லை. அப்பாஸிய கிலாபத்தின் ஸ்திரநிலை குன்றியிருந்தது. அவர்களிடமிருந்த ஆட்சி, அதிகாரம், பொருளாதார வளம் என்பவற்றை முஸ்லிம் சிற்றரசுகள் அபகரித்திருந்தன.
ஆன்மிகத் தலைவர் என்ற நிலையில் மட்டுமே கலீபாவை சிற்றரசர்கள் அங்கீகரித்திருந்தனர். முஸ்லிம் ஸ்பெய்ன் அமீர்கள் அப்பாஸிய கலீபாவை ஆன்மிகத் தலைவராகவும் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்கள் தம் சுயமான ஆட்சியைக் கொண்டு நடத்தினர். இவ்வாறு அப்பாஸிய கிலாபத் ஐக்கியம் குறைந்து பலமிழந்து இருந்தபோது மேற்கேயிருந்து மேற்கொள்ளப்பட்ட சிலுவைப் படையெடுப்பினாலும் கிழக்கேயிருந்து வந்த மங்கோலியப் படையெடுப்பினாலும் இஸ்லாமிய அரசு மேலும் பலவீனமுற்றது.
இமாம் அஹ்மதின் காலம் முதல் முஸ்லிம் சமூகத்தினுள் செல்வாக்குச் செலுத்திய கிரேக்க, பாரசீக சிந்தனைகள் இமாம் இப்னு தைமிய்யாவின் காலத்தில் மேலும் வலுவடைந்தன. அவற்றினால் தோன்றிய சிந்தனா ரீதியிலான முரண்பாடுகள் மேலும் வளர்ச்சியடைந்தன. அரசியல் ரிதியாகத் தோன்றிய ஷீஆக்கள் இக்காலத்தில் சிந்தனா ரீதியான இயக்கமாக வளர்ச்சி கண்டனர்.
சுருக்கமாகச் சொல்வதாயின், இப்னு தைமிய்யாவின் காலம் என்பது முஸ்லிம் சமூகத்தின் அகீதா உயிரோட்டம் இழந்தும் நடத்தைகளில் ஊழல் மலிந்தும் தீமைகள் பரவியும் சிந்தனை தேக்கமடைந்தும் இஜ்திஹாத் செயல் இழந்தும் மக்கள் கருத்து முரண்பட்டு பல குழுக்களாகப் பிளவுபட்டும் இருந்த ஒரு காலமாகும்.
இப்பின்னணியில் தன் காலத்து சவால்களை சரியாக இனங்கண்ட இமாம் இப்னு தைமிய்யா, அவற்றுக்கு தூய இஸ்லாமிய வழிமுறையில் நின்று முகங்கொடுத்ததைக் காண முடிகின்றது. தன் காலத்து அறிவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இஜ்திஹாதையும் அரசியற் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ஜிஹாதையும் இவர் முன்வைத்தார். அரசியல் மட்டத்தில் ஜிஹாதும் அறிவு மட்டத்தில் இஜ்திஹாதும் முஸ்லிம் சமூக புனர்நிர்மாணத்திற்கான அவரது இயக்கத்தின் தூண்டற் சக்திகளாக அமைந்தன.
இமாம் இப்னு தைமிய்யாவும் இஜ்திஹாதும்
ஆரம்ப தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழியில் இமாம் அஹ்மதின் முறைமையில் நின்று இஜ்திஹாதின் அவசியத்தை வலியுறுத்திய இமாம் இப்னு தைமிய்யா, தூய இஸ்லாமிய அடிப்படைகளை வகுத்தும் எதிர்வாத சிந்தனையை விளக்கியும் சமகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்தும் செயற்பட்டதை அவதானிக்க முடிகின்றது. இவரது ஷமஜ்முஅதுல் பதாவா அல்குப்ரா| எனும் சட்டத் தீர்ப்புகளின் தொகுப்பை நோக்குகின்றபோது அன்றைய சன்மார்க்க வாழ்வியல் பிரச்சினைகளுக்கு அவர் தூய இஸ்லாமிய வழிமுறையில் இஜ்திஹாதின் துணையுடன் எவ்வாறு தீர்வுகளை முன்வைத்தார் என்பதனை அறிய முடியும்.
இஜ்திஹாதின் மூலம் தூய இஸ்லாமிய சிந்தனைக்கு புத்துயிர் அளித்தல் வேண்டும். போலிகளற்ற, இஸ்லாத்திற்கு அந்நியமான எத்தகைய இடைச் செருகலும் அற்ற தூய இஸ்லாமிய அடிப்படைகளில் மீண்டும் இஸ்லாமிய சமூகம் கட்டியெழுப்பப்படல் வேண்டும் என்பது இமாம் இப்னு தைமிய்யாவின் இலட்சியமாக இருந்தது.
சமூகப் புனரமைப்பிற்கு இவரது இரண்டாம் பெரும் ஆயுதமாக ஜிஹாத் அமைந்தது. தாத்தாரிய மன்னர் காஸான் ஷாம் பிரதேசத்தைத் தாக்கியபோது அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி கைதிகளை விடுவிக்க இமாம் இப்னு தைமிய்யா ஆவன செய்தார். இவ்வாறு சமாதான வழியில் எதிரிகளை அணுகி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்தார். எனினும், தாத்தாரியர் டமஸ்கஸ் கோட்டையை தமக்குக் கையளிக்குமாறு வேண்டியபோது அவர்களின் அநீதிகளையும் அராஜகங்களையும் கண்டு இனியும் சமாதான வழிமுறை வெற்றியளிக்காது என்பதை உணர்ந்த இப்னு தைமிய்யா, எந்நிலையிலும் கோட்டை கையளிக்கப்படலாகாது என்பதில் உறுதியாக நின்றார். தானே ஒவ்வோர் இரவும் கோட்டை மதிலைச் சுற்றி வந்ததுடன் மக்களுக்கு அல்குர்ஆனின் ஜிஹாத் பற்றிய வசனங்களை ஓதிக் காண்பித்து ஸ்திரமாக நின்று போராட்டத்தைத் தொடர அவர்களைத் தூண்டினார்.
மறுபக்கத்தில் தாத்தாரியர்களின் தொடர்ந்தேர்ச்சியான தாக்குதலின் காரணமாக இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நாடு பலவீனமுற்றிருந்த நிலையில் ஆட்சியாளர்கள் தீமைகளை ஒழிப்பதிலும் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதிலும் பராமுகமாக இருப்பதைக் கண்ட இமாம் இப்னு தைமிய்யா, தன்னோடு இருந்தவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று நன்மையை நிறைவேற்றும் நோக்குடன் செயற்படலானார். இதனால் மதுபான விற்பனை நிலையங்கள் தகர்க்கப்பட்டன. குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் சிந்தனா ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் சதிகளில் ஈடுபட்ட பாதினிகள், இஸ்மாஈலிகள் போன்றNhரை முறியடிக்கும் பணியிலும் இமாமவர்கள் முனைப்புடன் செயற்பட்டார்.
அறியாமை, மூடக் கொள்கைகள், நூதன அனுஷ்டானங்கள், இணைவைத்தற் செயற்பாடுகள் முதலானவற்றை எதிர்ப்பதில் இமாம் இப்னு தைமிய்யாவுக்கு இணையானவர் எவரையும் வரலாற்றில் காண்பது அரிது.
சுருக்கமாகக் கூறுவதாயின், இமாம் இப்னு தைமிய்யாவின் போராட்டம் தூய இஸ்லாமியக் கோட்பாட்டிற்கூடாக இஸ்லாத்திற்கு அந்நியமான எத்தகைய இடைச் செருகலுமற்ற தூய இஸ்லாமிய அடிப்படைகளில் மீண்டும் இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு முயற்சியாகும்.
இமாம் இப்னு தைமிய்யாவின் நிலைப்பாடுகள்
தூய இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு புத்துயிர் அளிக்கும் நோக்குடன் பிற, அந்நிய கொள்கைகளிலிருந்து பெறப்பட்ட விதிகளைப் புறக்கணித்து அல்குர்ஆனிய அளவுகோளை மேம்படுத்தும் முகமாக இமாம் இப்னு தைமிய்யா முப்பெரும் விதிகளை வகுத்து முன்வைத்தார். அவையாவன:
• அல்அக்ல் அஸ்ஸரஹ் எனும் சீரான பகுத்தறிவு, அந்நக்ல் அஸ்ஸஹீஹ் எனும் நம்பகமான (குர்ஆன், சுன்னா ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்பட்ட) சட்ட வசனத்துடன் முரண்படுவதற்கில்லை.
• கிரேக்க தத்துவத்திலிருந்து பெறப்பட்ட சொற்பிரயோகங்களையும் எண்ணக்கருக்களையும் முஸ்லிம் தத்துவவியலாளர்கள் பயன்படுத்துவது ஆட்சேபனைக்குரியதாகும்.
• அரிஸ்டோட்டிலின் அளவையியல் கோட்பாடுகள் பிழையானவையும் மறுக்கத்தக்கவையும் அவசியமற்றதுமாகும்.
இம்மூன்று விதிகளும் கீழே சற்று விரிவாக விளக்கப்படுகின்றன.
முதல் விதிக்கூடாக இமாம் இப்னு தைமிய்யா சன்மார்க்கத்தின் மூலாதாரங்களிலிருந்து பெறப்பட்ட நம்பகமான சட்ட வசனங்கள், சீரான பகுத்தறிவு உறுதி செய்யும் தெளிவான அறிவுடன் முரண்பட மாட்டாது என்ற கருத்தை முன்வைத்தார். அவ்வாறு முரண்பாடு ஏதும் ஏற்பட்டால் இரண்டில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏதோ தவறிருக்கின்றது என்றே கொள்ள வேண்டும் என்றும் அவர் கருதினார்.
முதகல்லிம்களும் பிற தத்துவவியலாளர்களும் பயன்படுத்தி வந்த கிரேக்க கலைச் சொற்பிரயோகங்களை நிராகரிப்பது இவரது மற்றுமொரு நிலைப்பாடாகும். அவசியமான கலைச் சொற்கள் அனைத்தும் அல்குர்ஆனிலிருந்தே பெறப்படல் வேண்டும். அந்நிய கொள்கை, கோட்பாடுகளிலிருந்து வழிகாட்டல்களைப் பெறுவது முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். ஒரு மொழியிலிருந்து மற்றnhரு மொழிக்கு ஒரு பிரயோகத்தைப் பெயர்க்கும்போது மொழிகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகளின் காரணமாக நுணுக்கமான விடயங்களில் கருத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதே இமாமவர்களின் இந்நிலைப்பாட்டிற்கான நியாயமாகும்.
அரிஸ்டோட்டிலின் அளவையியல் கோட்பாடுகளை நிராகரித்தமை இவரது இன்னுமொரு நிலைப்பாடாகும். உலகில் நீண்ட காலம் எல்லோராலும் ஏற்று நம்பப்பட்டு வந்த அரிஸ்டோட்டிலிய அளவையியலை விமர்சித்த இவர், அதற்கு மாற்றீடாக அல்குர்ஆன், அஸ்ஸுன்னா இரண்டினதும் ஒளியில் ஒரு புதுத் தர்க்கவியலை முன்வைப்பதில் வெற்றி கண்டார்.
இமாம் இப்னு தைமியா வாழ்க்கைச் சுருக்கம்
தகியுத்தீன் அஹ்மத் இப்னு அப்தில் ஹலீம் இப்னு அப்திஸ் ஸலாம் என்பது இவரது முழுப் பெயராகும். இவர் ஹிஜ்ரி 661இல் (கி.பி. 1263) டமஸ்கஸுக்கு அருகிலுள்ள ஹர்ரான் எனும் ஊரில் பிறந்தார். மன்னன் ஹூலாகுவின் மங்கோலியப் படை பக்தாதைத் தாக்கி சூறையாடி சுமார் ஐந்து வருடங்களில் இப்னு தைமியாவின் பிறப்பு இடம்பெற்றது. தாத்தாரிய மங்கோலியரின் அச்சுறுத்தல் காரணமாக இவரது இளமைப் பருவத்திலேயே இவரது தந்தை இவரை டமஸ்கஸுக்கு அழைத்து வந்தார். இங்கு ஹதீஸ், பிக்ஹு முதலான கலைகளை ஆழமாகக் கற்றார். குறிப்பாக, இமாம் அஹ்மதின் சிந்தனைகளை ஆர்வத்துடன் பயின்றார். பதினேழு வயது முதலே கல்விப் போதனை, சட்டத் தீர்ப்பு வழங்கல், நூல் எழுதுதல் முதலானவற்றில் ஈடுபடலானார்.
ஹிஜ்ரி 1282இல் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து ஹன்பலி மத்ஹப் பிக்ஹுத் துறை இமாமாகப் பதவியேற்றார். முப்பது வயதில் ஷமுஹ்யுஸ்ஸுன்னா| (ஸுன்னாவுக்குப் புத்துயிரளிப்பவர்), ஷஇமாமுல் முஜ்தஹிதீன்| (முஜ்தஹிதிகளின் தலைவர்) முதலான பட்டங்களைப் பெற்றார்.
தாத்தாரியர்களின் தாக்குதல்களுக்கு முன்னால் இஸ்லாமிய அரசின் பலவீனத்தைக் கண்டு மனம் வெதும்பிய இமாம் இப்னு தைமிய்யா, மக்களை ஜிஹாதுக்காக அணிதிரட்டுவதற்காக கெய்ரோவுக்குச் சென்றார்.
மறுபக்கம் இவரது பல சன்மார்க்க நிலைப்பாடுகள் அன்றைய உலமாக்களின் அங்கீகாரத்தைப் பெறத் தவறின. இதனால் இவருக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்ந்து கருத்து மோதல்கள் நிலவின. குறிப்பாக, ஸூபிகளுடன் இவர் கடுமையாக முரண்பட்டார். இவரது இத்தகைய நிலைப்பாடுகள் காரணமாக டமஸ்கஸ், கெய்ரோ, அலெக்ஸாந்திரியா உட்பட மற்றும் பல இடங்களில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்னு தைமிய்யா ஒரு பன்னூல் ஆசிரியர், சிறையில் இருந்த காலத்திலும் இவர் எழுதினார். பேனாவும் மையும் இவருக்கு வழங்குவது தடை செய்யப்பட்டபோது கரித் துண்டுகளைப் பயன்படுத்தி எழுதினார்.
இவர் எழுதிய நூல்கள் 300 பாகங்களைக் கொண்டிருக்கும் என கைருத்தீன் அஸ்ஸர்காவி குறிப்பிடுகின்றார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவை:
01. மின்ஹாஜுஸ் ஸுன்னா
02. அத்தவஸ்ஸுல் வல்வஸீலா
03. அஸ்ஸியாஸது ஷரஇய்யது பீ ஸிலாஹிர் ராஈ வர் ரஇய்யா
04. அர்ரத்து அலல் மின்தகைன்
05. அல்புர்கான் பைன அவ்லியாஇர் ரஹ்மான் வஅவ்லியாஇஷ் ஷைத்தான்
06. உபூதிய்யா
07. இவரது சட்டத் தீர்ப்புக்கள், சிற்றேடுகள் தொகுக்கப்பட்டு ஷமஜ்மூஅது ரஸாஇல் வல்மஸாஇல்| எனும் பெயரில் பல பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
இறுதியாக நபிமார்கள், ஸாலிஹீன்களின் கப்றுகளைத் தரிசிக்கும் நோக்கத்துடன் புனிதப் பயணம் மேற்கொள்வது கூடாது என்று இவர் தனது கைப்பட வழங்கிய தீர்ப்பையடுத்து அன்றைய உலமாக்கள் கிளர்ந்து எழவே ஹிஜ்ரி 726 (கி.பி.1327)ஆம் ஆண்டு சிறையிலேயே மரணமானார், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவரது ஜனாஸாவில் முழு டமஸ்கஸ் வாசிகளும் கலந்து கொண்டனர். ஆச்சரியம் என்னவென்றால், இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் ஜனாஸா ஸூபிய்யாக்களின் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகும். மேலும் இமாம் இப்னு தைமிய்யா இறுதிவரை திருமணம் முடிக்காமலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.