Search This Blog

Pages

Monday, April 25, 2011

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் - பாரதியின் கவிதை

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)
(My fav stanza)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)


4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5. புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திரந் தேகேட் டிருப்போம். (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டேறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்
எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)

7. விழையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலத்தைக் கேளா திழுப்பான்;
இளயாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மக்தே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்: - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

No comments:

Post a Comment