Search This Blog

Pages

Wednesday, January 12, 2011

அம்பாறை மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட நலன்புரி நிலையங்கள் வீடு இடிந்து வீழ்ந்து ஒருவர் பலி




தொடர்ந்து பெய்துவரும் பெருமழை காரணமாக கிழக்கு மாகாணம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக இம்மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் குடியிருப்புகள்

நீரில் மூழ்கியுள்ளதுடன், பெரும்பாலான வீதிகள் போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு பல அடிக்கு நீர் தேங்கி நிற்பதுடன், பஸ் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 3,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,70 இற்கு மேற்பட்ட நலன்புரி முகாம்களில் 25,000 க்கும்’ மேற்பட்டோர்  தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகங்களூடாக சமைத்த உணவுகளும் வழங்கப்படுகின்றன. மருதமுனை,நீலாவணை,பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது,நாவிதன்வெளி, சம்மாந்துறை,காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று,  இறக்காமம், ஆலையடிவேம்பு, திருக்கோவில், கோமாரி, பொத்துவில் ஆகிய கரையோரப் பிரதேசங்களில் ஒரு இலட்சத்துக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீதிகளும் மதகுகளும் உடைப்பெடுத்ததனால் பல்வேறு வீதிகள் சேதமாகியுள்ளதுடன் உள்ளூர்,வெளியூர் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. கல்முனை, அம்பாறை,வீதியில் மாவடிப்பள்ளிக்கருகில் பிரதான வீதியில் 3 அடிக்கு மேல் நீர் பரவியதால் போக்குவரத்துத் தடைப்பட்டதுடன், அக்கரைப்பற்றுபொத்துவில் வீதிகளில் பாலங்களுக்கு மேலாக நீர் பரவியதனால் அங்கும் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment