தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் பொய் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளார்.
2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை(ஏ.டி.எஸ்) கைது செய்த யுனானி மருத்துவரான சல்மான் ஃபார்ஸி இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
மலேகான் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஏ.டி.எஸ் சல்மானை கைது செய்தது. பாகிஸ்தானில் இருந்து வந்த போராளிகளுக்கு உதவினார் என்றும், ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை கடத்தியதாகவும் இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால்,தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளது வெட்டவெளிச்சமானதை தொடர்ந்து ஐந்து வருட கொடுமையான சிறைக்கு பிறகு 2011-ஆம் ஆண்டு சல்மான் உள்ளிட்ட அப்பாவி இளைஞர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
ஒரு வருடமாக யுனானி ப்ராக்டீஸ் நடத்திய பணத்தைக் கொண்டு ஜஸ்டிஸ் லீகல் வாய்ஸ் என்ற அமைப்பை சல்மான் துவக்கியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக தீவிரவாத வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனக்கு சட்டத்தைக் குறித்து எதுவும் தெரியாது என்று சல்மான் கூறுகிறார். இதுபோல பல்வேறு சம்பவங்களை தன்னை சுற்றிலும் கண்ட சல்மான் சட்டத்தைக் குறித்து படிக்கத் துவங்கினார். அப்பகுதியில் பல்வேறு வழக்கறிஞர்களின் உதவியையும் இவ்வமைப்புக்காக அவர் உறுதிச் செய்துள்ளார்.
பொய் வழக்குகளில் சிக்கும் அனைத்து சமூகத்தைச் சார்ந்த நபர்களுக்கும் உதவி அளிப்போம் என்று சல்மான் கூறுகிறார். தற்போது தனது யுனானி க்ளீனிக்கிலேயே இவ்வமைப்பின் அலுவலகத்தையும் அமைத்துள்ளார் அவர்.
சிறைகளில் உள்ள சூழல்களைக் குறித்து எந்த அமைப்பும் கவனத்தில் கொள்ளவில்லை என்று சல்மான் கூறுகிறார். சிறை கையேட்டில் கூறப்பட்டுள்ள காரியங்கள் கூட அங்கு நடப்பதில்லை.அதிலும் குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டவர் நிரபராதியாக இருக்கும்போது சூழல் பயங்கரமாகும். தன்னை இவ்வழக்கில் இருந்து முற்றிலும் விடுவித்த பிறகு தனக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சல்மான் தெரிவித்தார்.
ஏ.டி.எஸ் கைது செய்த பிறகு சல்மானும், இதர எட்டுபேரும் ஐந்து ஆண்டுகள் மும்பையில் பிரபல ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment