Search This Blog

Pages

Wednesday, September 26, 2012

ஜனாதிபதி மாளிகையில் கிழக்கு மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்


Eastern-logo-map
கிழக்கு மாகாண அமைச்சர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று மதியம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.  இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம் எஸ் உதுமாலெவ்வை, சுதந்திரக் கட்சி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சு பதவிகளுக்கு மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
எம். எஸ். உதுமாலெவ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
விமலவீர தஸாநாயக்க மீண்டும் கல்வி மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சு பதவிகளுக்கு ஹாபிஸ் நஸீர் அஹமட், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஹாபிஸ் நஸீர் அஹமட்- விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள் அமைச்சராகவும் எம்.ஐ.எம். மன்சூர் – சுகாதார, விளையாட்டு, தொழில் நுட்பக் கல்வி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதேவேளை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் – நிதி திட்டமிடல் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவ்வைபவத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லா உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
adaderana

முஹம்மது நபியை இழிவுபடுத்தும் திரைப்படத்துக்கு இலங்கையில் தடை


Sri Lanka Prophet Film Protest
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் திரைப்படத்தை இலங்கையில் தடைசெய்ய எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளை கண்டிப்பதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் பதில் அமைச்சைர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்திற்கு இழிவு ஏற்படுத்தியுள்ள திரைப்படத்தை இலங்கையில் ஒளிபரப்பாதிருக்க உரியவர்களுக்கு பத்திரிகை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண தேர்தலின் பின்னரான அரசியல்: மெல்லச் சாகும் இனி…


Eastern-logo-map
- சிராஜ் மஷ்ஹூர் -
கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் தொங்கு மாகாண சபை ஒன்றையே விளைவாக்கியுள்ளது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை இன்னொரு கட்சியின் மீது சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது. இதில் சுதந்திரக் கட்சி அம்பாறையில் 3 ஆசனங்களும் திருகோணமலையில் 3 ஆசனங்களுமாக 6 ஆசனங்களைப் பெற்றிருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான தேசிய காங்கிரஸ் அம்பாறையில் பெற்ற 3 ஆசனங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பில் பெற்ற 3 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் பெற்ற ஒரு ஆசனத்தையும் கூட்டினால் மொத்தம் 13 ஆசனங்கள் மாவட்ட மட்டத்தில் ஐ.ம.சு.கூட்டமைப்புக்குக் கிடைத்தது.
சுதந்திரக் கட்சிக்கு 6 ஆசனங்களும் அதன் கூட்டணிக் கட்சிக்கு 7 ஆசனங்களும் என்பதுதான் தேர்தல் முடிவின் சாராம்சம். அத்துடன் அரச தரப்புக்குக் கிடைத்த 2 போனஸ் ஆசனங்களையும் உள்ளடக்கியே 15 ஆசனங்கள் என்ற கணக்கு பெறப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திரக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சி அம்பாறையில் 3 ஆசனங்களும் திருமலையில் ஒரு ஆசனமுமான 4 ஆசனங்களைப் பெற்றது. மொத்தமுள்ள 37 ஆசனங்களில், போனஸ் ஆசனங்கள் 2 ஐக் கழித்துப் பார்த்தால், தேர்தல் மூலம் பெறப்பட்ட 35 ஆசனங்களில் 10 ஆசனங்களே தேசியக் கட்சிகளுக்கு (சுதந்திரக் கட்சி + ஐ.தே.க.) கிடைத்துள்ளன. இது மாகாண சபை ஆசனங்களில் ஏறத்தாழ 30 வீதமாகும்.
ஏறத்தாழ 70 வீதமான ஆசனங்களை, பிராந்திய அல்லது சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளே பெற்றிருந்தன. இதில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி திருமலையில் பெற்ற ஒரு ஆசனத்தைக் கழித்துப் பார்த்தால் 35 ஆசனங்களில் 24 ஆசனங்களை பிராந்திய அல்லது சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளே பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ரீதியாக அடையாளப்படுத்தினால் 15 முஸ்லிம்களும் 12 தமிழர்களும் 8 சிங்களவர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐ.தே.க. சார்பாக ஒரு முஸ்லிமும், சுதந்திரக் கட்சி சார்பாக ஒரு முஸ்லிமும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ளனர். இவ்விரு கட்சிகள் சார்பாகவும் எந்தவொரு தமிழரும் அங்கத்தவராகத் தெரிவுசெய்யப்படவில்லை.
அரச தரப்பில் கூட்டணி அமைத்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஒரு ஆசனத்தைப் பெற்றிருந்தது. மீதமாகவுள்ள 11 தமிழர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டணியாகும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அல்லாத பலர் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எல்லாத் தரப்பிலும் முஸ்லிம் அங்கத்தவர்கள் தெரிவாகியுள்ளமை சுவாரஸ்யமான விடயமாகும். மு.கா. சார்பாக 7 அங்கத்தவர்களும், தேசிய காங்கிரஸ் சார்பாக 3 அங்கத்தவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக 3 அங்கத்தவர்களும் ஐ.தே.க. சார்பாக ஒருவரும், சுதந்திரக் கட்சி சார்பாக ஒருவரும் இவ்வாறு தெரிவாகியுள்ளனர். மு.கா.வும் அதிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகளும் சேர்ந்து 13 அங்கத்தவர்களைப் பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது.
கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள், பல்லினத் தன்மையை துலாம்பரமாக எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளதோடு, இனப் பிளவை ஆழமாக வெளிப்படுத்தியுமுள்ளன. எந்தக் கட்சியும், எந்த இனமும் தனித்து செயல்பட முடியாத, பரஸ்பரம் இன்னொன்றில் தங்கி நின்று முடிவை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகியுள்ளது. இது முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுதான்.
கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளனர் என்பதை உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகியுள்ள புதிய தொகை மதிப்பு புள்ளிவிபரங்கள் உறுதிப் படுத்தியுள்ளன. கடந்த காலங்களில் கிழக்கில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தனர்.
சனத்தொகை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை இத்தேர்தல் முடிவுகள் நன்கு பிரதிபலிக்கின்றன. இலங்கையில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கான அதிக சாத்தியமுள்ள ஒரே மாகாணமாக கிழக்கே உள்ளது. இந்த வகையில் இம்முறை எப்பாடுபட்டேனும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எதிர்பார்ப்பும் மிகைத்திருந்தன.
பிராந்திய, சர்வதேச அழுத்தங்கள் கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கான சாத்தியப்பாடுகளை மட்டுப்படுத்தியிருந்தன. எனினும், இறுதி நேரத்தில் மு.கா. ஆளும் கூட்டணியிலிருந்து பிரிந்து, தேர்தலை எதிர் கொண்டதன் மூலம் சில புதிய அழுத்தங்கள் உருவாகின. அதன் விளைவாக, அரச தரப்பிலிருந்து முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், நடப்பிலுள்ள மாகாண சபை முறையில் முதலமைச்சர் என்பது ஒரு அலங்காரப் பதவியாகவே உள்ளது.  முதலமைச்சர், மாகாண ஆளுனரின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் ஒருவராகவே நடைமுறையில் உள்ளார். மாகாண சபைகளுக்குப் போதிய அதிகாரங்கள் இல்லை. 13 ஆம் திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அதிகாரங்களையும் (குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களை) இல்லாமல் செய்வதற்கான முனைப்புகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
போதிய நிதி அதிகாரமோ அரசியல் அதிகாரமோ இல்லாத இந்த மாகாண சபையில், முதலமைச்சரோ அமைச்சர்களோ எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி பரவலாக உள்ளது. இந்த வகையில்தான் மேலெழுந்தவாரியாக அதிக கவனம் கொடுக்கப்பட்ட இந்த விவகாரங்கள், நடை முறையில் எவ்வித பெறுமானமும் அற்றதாக உள்ளன.
குறியீட்டு ரீதியாக முஸ்லிம்களது அரசியல் வலுவை இது மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. தேர்தல் முடிவுகள் எல்லாத் தரப்பினரும் மு.கா.வை திருப்திப்படுத்த வேண்டிய அரசியல் சூழலை ஏற்படுத்தியது. மு.கா.வும் தான் திருப்திப்பட்டுக் கொள்ளும் வகையில் பல கோரிக்கைகளை முன்வைத் திருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
கட்சிகளும் தனிநபர்களும் திருப்திப்படுவது எந்த வகையில்? தமது தனிப்பட்ட விருப்பு- வெறுப்புகள், ஆசா பாசங்களுக்குள் இவர்கள் அமுங்கிவிட்டனர். தேர்தல் களத்தில் அனல் பறக்க எழுப்பப்பட்ட விடயங்கள், தேர்தலுக்குப் பிந்திய பேரம் பேசலில் மருந்துக்கும் இல்லை. தேர்தலுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மத சுதந்திரம், கலாச்சார உரிமை என்ற பதங்களுக்குப் பதிலாக தேர்தலுக்குப் பின்னர் அமைச்சுக்கள், தூதுவர்கள் என்ற சொற்களே அதிகம் பேசப்பட்டன.
பேரம் பேசும் அரசியல் இன்று பொது நலன்களுக்குப் பயன்படாமல், சுயநலத் தேவைகளுக்கே  இரையாகியுள்ளது. மு.கா.வுக்குக் கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்ற மனநிலை பரவலாக உள்ளது.
கடந்த கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பே அதிகாரத்தைக் கொண்டிருந்தது. எனினும், அதில் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவமே தூக்கலாக இருந்தது. ஏனைய மாகாண சபைகளில் சாதிக்க முடிந்த விடயங்கள் சிலவற்றை இங்கு அரசால் சாதிக்க முடியாமல் போனது. இதற்கு நாடு, நகர சட்டமூலம் நல்ல சான்றாகும். முன்னைய முதலமைச்சர் அரச கூட்டணியில் அங்கம் வகித்தாலும், சுதந்திரக் கட்சியை சேர்ந்தவரல்ல. இதுவும் அவ்வப்போது அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தது.
இம்முறை சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரே முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது அரசின் ரிமோட் கொன்றோலால் இயக்கப்படும் பொம்மை முதலமைச்சரை உருவாக்கவே வழிவகுக்கும். ஏனைய மாகாணங்களில் இதுவே இடம்பெறுகிறது. எனினும், பெருந்தொகையான சிறுபான்மை சமூகப் பிரதி நிதிகள் அங்கம் வகிப்பது ஓரளவுக்கு இந்த அரசியல் இறுக்கங்களில் தளர்வுகளைக் கொண்டு வரலாம்.
கிழக்கு மாகாண சபையின் அரசியல் நகர்வுகள், எப்போதும் இயல்பாகவே நகரும் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக வெவ்வேறு சமூகங்களிலிருந்து வரும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய தவிர்க்க இயலாத நிலமை அதற்குள்ளது. ஒருவகையில் இலங்கையின் வேறு எந்த மாகாணங்களிலும் காணமுடியாத பல திருப்பங்களை, இது சந்திக்கக் கூடும். ஒருதலைப்பட்சமான அரசியல் முடிவுகளைத் திணிக்க முயலும் எவரும், பலமுனை நெருக்கடிகளை எதிர்கொள்ளவே செய்வர்.
கிழக்கு மாகாணத்தின் உள்ளக சமூக கட்டமைப்பே தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்திருக்கிறது. தேசிய அரசியல் கட்சிகள் இங்கு பலவீனப்பட்டுள்ளன. சமூகம் சார்ந்த பிராந்திய அரசியல் கட்சிகளே செல்வாக்குப் பெற்றுள்ளன.
மாகாண சபைகளுக்கு அரசியல் அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்பதற்கான சோதனைக் களமாக கிழக்கு மாகாண சபை நிச்சயம் இருக்கும். அத்துடன் பல்லின சமூக சூழலில், அதிகாரப் பகிர்வுக்கான நடைமுறைச் சாத்தியம், சாத்திமின்மை குறித்த பரிசோதனை முயற்சியாகவும் இது இருக்கக் கூடும்.
இதற்கு சாதகமான பதில்கள் கிடைக்கும் என்ற பெரிய எதிர் பார்ப்புகள் இல்லை. மெல்லச் சாகும் இனி… என்பதே யதார்த்தம்போல் தெரிகிறது.

செயற்கைக் கண்கள் ரெடி


Tamil-Daily-News-Paper_1097834111
உலகம் முழுவதும் சுமார் 3.9 கோடி மக்கள் பார்வைத் திறன் இன்றித் தவிக்கிறார்கள். பாதியளவு பார்வைக் குறைபாட்டோடு சுமார் 24.6 கோடி பேர் அவதிப்படுகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒளியைக் காட்டும் விதமாகத்தான் செயற்கை கண்களை உருவாக்கும் முயற்சி வெகு காலமாக நடந்து வருகிறது. அந்த முயற்சியின் முக்கிய மைல் கல்லாக, தற்போது ஆஸ்திரேலியாவில் முதல் செயற்கைக் கண்கள் ரெடியாகிவிட்டன.
ஒரு பெண்ணுக்கு அவை பொருத்தப்பட்டுள்ளன. 20 வருடங்களாக பார்வையின்றித் தவிக்கும் அந்தப் பெண்ணின் பெயர் டயான்னி ஆஷ்வர்த். தற்போது பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை கண்கள் மூலம் சின்ன ஒளிக்கீற்றை தான் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார் டயான்னி. அறிவியல் உலகில் இது மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.
காரணம், முழுக்க முழுக்க செயற்கையாக கருவிகளை வடிவமைப்பது எளிது. மனித நரம்புகளோடும் மூளையோடும் தொடர்பு ஏற்படுத்தக் கூடிய செயற்கைக் கருவிகள் சிந்தித்துப் பார்க்கவே கடினமானவை. அதனால் தான் இதுநாள் வரை அமெரிக்கா உட்பல பல நாடுகளில் விஞ்ஞானிகளின் கனவு ப்ராஜக்ட்டாக இருந்து வந்தது இந்த செயற்கை கண். கடைசியாக இதை சாதித்துக் காட்டியிருக்கிறது ஆஸ்திரேலிய அரசின் பயோனிக் விஷன் எனும் ஆராய்ச்சிக் கிளை. மனித விழித்திரைக்குள் பொருத்தப்படும் இந்த நுண்ணிய கருவி, 24 எலக்ட்ரோடுகளால் ஆனது. சின்னஞ்சிறு கேமரா மூலம் ஒளிக்காட்சியைப் பெறும் இந்தக் கருவி, அந்த மின் காந்த சமிக்ஞைகளை நரம்பு சமிக்ஞைகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. சாதாரணமாக நம் கண்களில் நடக்கும் இந்தச் செயலை செயற்கையாக நடத்திக் காட்டியிருப்பதுதான் இந்தக் கருவியின் சிறப்பு. ‘‘இது ஒரு துவக்கம்தான்.
ஒரு சின்ன ஒளிக்கீற்றைத்தான் இப்போதைக்கு டயான்னியால் பார்க்க முடிந்திருக்கிறது. இன்னும் துல்லியமானதாகவும் பொருத்துவதற்கு எளிமையான கருவியாகவும் இதனை உருவாக்க வேண்டும்’’ என்கிறார் பயோனிக் விஷன் அமைப் பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேவிட் பென்னிங்டன். அடுத்த ஆண்டில் இன்னும் சக்தி வாய்ந்ததாக, அதாவது 1024 எலக்ட்ரோடுகள் கொண்ட செயற்கைக் கண்களை உருவாக்கி பரிசோதிக்கப் போகிறார்களாம். ‘‘அப்படி தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையும்போதும் கூட பார்வையற்ற ஒருவருக்கு கறுப்பு – வெள்ளை பார்வையைத்தான் கொடுக்க முடியும். அதன் மூலம் அவர் யார் உதவியும் நாடாமல் நடமாட முடியும். அதுவே பெரிய வெற்றிதான்!’’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். இயற்கை போகிற போக்கில் படைக்கும் விஷயத்தை உருவாக்குவதற்கு மனிதன் எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது.

கடும் எதிர்ப்பு நிலவுவதால் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை


Tamil-Daily-News-Paper_67177546025
நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், பாகிஸ்தானுக்கு தேவை இல்லாமல் இப்போதைக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களை அரசு எச்சரித்துள்ளது.
நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. யு டியூபில் அதன் காட்சிகள் வெளியானதால் உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்காவை கண்டித்தும் பாகிஸ்தானில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. வன்முறையின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சிலர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், பாகிஸ்தானுக்கு அத்தியாவசிய தேவை இல்லாமல் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என்று தன் நாட்டு மக்களை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கூறுகையில், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தி இருந்தாலும், அங்கு நிலவும் போராட்டத்தை பயன்படுத்தி கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் வீரர்களை போல வேடமிட்டு அமெரிக்கர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே, பாகிஸ்தான் பயணத்தை தள்ளி வைத்துக் கொள்வது நல்லது என்று தெரிவித்துள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்தும் முன்னணி இணையங்களின் கூட்டிணைவு


fonts_used_in_logos_of_popular_websites
இணையத்தளங்களின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கும் இணையங்களின் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப, சமூக வலையமைப்பு நிறுவனங்கள் இணைந்து குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது.
இந்த அமைப்புத் தொடர்பில் ஒருபுறம் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. ’The Internet Association’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு முதலில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதில் இணையத்தளங்களின் பங்களிப்புக் குறித்து ஆராயவுள்ளது.
இந்த அமைப்பில் கூகுள், யாகூ, பேஸ்புக், அமேசன், ஏஓஎல், இ-பே, எக்ஸ்பீடியா, ஐஏசி, லிங்க்டின், மொன்ஸ்டர், ரொக்ஸ்பேஸ், சேல்ஸ்போர்ஸ், ட்ரிப் எட்வைஸர், சிங்கா ஆகிய நிறுவனங்களின் அங்கத்தவர்கள் பணியாற்றவுள்ளனர்.
இந்த அமைப்பின் தலைவராக மைக்கல் பெக்கர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக இயங்கும் இணையத்தளங்களை அந்நாட்டில் தடை செய்வதற்கும் அதற்கான சட்டவரைவுகளைத் தயார் செய்வதற்குமே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனை முற்றாக மறுத்துள்ள மைக்கல் பெக்கர்மன், இணையங்களின் வளர்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தாக்கங்கள் சாதகமான நிலைப்பாட்டினை அடைவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி இணைய நிறுவனங்களை முடக்குவதற்கு தீவிரவாதிகள் தயாராகலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் கசிந்துள்ளன.
இந்த அமைப்பில் அப்பிள், மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

விரிவுரையாளர் பகிஷ;கரிப்பில் இணைகிறது பேராதனை மருத்துவபீட ஆசிரியர் சங்கம்


lectures canceled
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மேற்கொள்ளும் பகிஷ்கரிப்புக்கு ஆதரவளிக்கும் முகமாக அடுத்த வாரத்திலிருந்து தாம் கல்விசார் பணியிலிருந்து வாபஸ்பெறப் போவதாக பேராதனை பல்கலைக்கழக, மருத்துவ பீட பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சுமார் 75 விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் தமது பணியை நிறுத்திக்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கத் தவறியமை குறித்து தமது ஏமாற்றத்தை வெளிய்பபடுத்துவதற்காக பேராதனை மருத்துவ பீடம் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக பேராதனை மருத்துவபீட ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மூன்று மாத காலமாக பகிஷக்கரிப்பு மேற்கொண்டு வருகிறது. ஆனால் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என பேராதனை மருத்துவபீட ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜயந்த ராஜரட்ன கூறினார்.

சமகால இஸ்லாமிய பிரச்சினைகள் குறித்து ஸாகிர் நாயிக் – ஹக்கீம் கலந்துரையாடல்


Dr.Zakir Naik meet rauf kakeem
TM:நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி அமெரிக்காவில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் வெளியிடப்படும் கேலிச்சித்திரங்கள் என்பன பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமென்றும், வெளிநாட்டு தூதுவராலயங்கள் ஊடாக பலத்த கண்டனங்களைத் தெரிவிக்க முடியும் என்றும், குறிப்பாக மத்திய கிழக்கு வளைகுடா நாடுகள் சம்மந்தப்பட்ட மேற்குலக நாடுகளின் உற்பத்திப்பொருட்களுக்கெதிராக தத்தமது நாடுகளில் தடைவிதிக்க முடியும் என்றும் டாக்டர் ஸாகிர் நாயிக், இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
உலக புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஸாகிர் நாயிக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து நீண்ட நேரம் சமகால இஸ்லாமிய உலகம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறினார்.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் கிழக்குமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் சவூதி அரேபியா, மிற்சுபிசி கம்பனியின் உரிமையாளரான தனவந்தர் அப்துல் ரப் அல்-இஷாயி, ஜனாதிபதியின் இணைப்பாளர் காதர் மசூர் மெளலானாவும் அமைச்சரின் இல்லத்தில் அப்பொழுது பிரசன்னமாகி இருந்தனர்.
இந்திய, இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டையும், சன்மார்க்க, சமூக நலன்களையும் மய்யப்படுத்தியதாக இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது. இலங்கையில் 800 இற்கு மேற்பட்ட அரசாங்க முஸ்லிம் பாடசாலைகள் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தென் இந்தியாவின் கரையோர பிரதேசங்களில் இருந்து இலங்கைக்கு வந்த இஸ்லாமிய அறிஞர்கள் இங்கு அரபு மொழி வளர்சிக்காக பெரும் பங்களிப்பு செய்ததோடு, நாட்டின் பல பகுதிகளிலும் பள்ளிவாசல்களையும் நிறுவ உதவியதாகவும் அமைச்சர் கூறினார்.
தமது நிறுவனத்தினூடாக மும்பாயிலும் ஏனைய இடங்களிலும் நடாத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கற்றுத்தேறும் மாணவர்கள் மதீனா பல்கலைக்கழகம், உம்முல் குரா கல்வி நிறுவனம் போன்றவற்றில் உயர் கல்வி பெற்று வருவது பற்றியும், சமய பிரசாரத்தில் அவர்கள் அயராது ஈடுபட்டு பணியாற்றுவது பற்றியும் டாக்டர் ஸாகிர் நாயிக் கூறினார்.
இலங்கை அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செலுத்திவரும் செல்வாக்கு பற்றியும், இலங்கையில் தஃவா பணியில் தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தெளஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புக்கள் ஆற்றிவரும் பணிகள் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் சிலாகித்துக் கூறினார்.

Friday, September 21, 2012

Innocence of Muslim திரைப்பட நடிகையின் படத்தை தடை செய்ய கோரிய வழக்கு டிஸ்மிஸ்


google not agree to block innocence muslim
பல நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும், வன்முறைகளையும் ஏற்படுத்திவிட்ட திரைப்படத்தை யு-டியூப்பில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது அமெரிக்க கோர்ட். இந்த திரைப்படத்தில் நடித்த நடிகையே, சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யு-டியூப்பில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.
யு-டியூப்பில் இருப்பது, இந்த திழரப்படத்தின் 14 நிமிட ட்ரெயிலர்தான். அதற்கே உலகின் பல பகுதிகளிலும் அமெரிக்காவுக்கு எதிராக பற்றி எரிந்தது. இதுவரை 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஒரு அமெரிக்க தூதர் உட்பட!
போராட்டங்கள் இன்னமும் முடியவில்லை.
Innocence of Muslims என்ற இந்த திரைப்படத்தின் ட்ரெயிலரில் தோன்றும் நடிகை சின்டி லீ கார்சியா, லாலஸ் ஏஞ்சலஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த லாலஸ் ஏஞ்சலஸ் சுப்பீரியர் கோர்ட் நீதிபதி லுயிஸ் லவின், “ஒரு நடிகையாக இவருக்கும், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அல்லது இயக்குநருக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் எதையும் கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே, குறிப்பிட்ட திரைப்படத்தை யு-டியூப்பில் தடை செய்ய உத்தரவிட முடியாது” என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நடிகை சின்டி கார்சியா தொடர்ந்த வழக்கு வெற்றி பெற்று, திரைப்பட ட்ரெயிலர் யு-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டால், தற்போது அமெரிக்காவுக்கு எதிரைக நடைபெறும் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த தீர்ப்பு அந்த சாத்தியத்தை இல்லாது செய்துவிட்டது.
நடிகை சின்டி லீ கார்சியா, “இந்த திரைப்படத்தின் நிஜ ஸ்கிரிப்ட் எனக்கு காண்பிக்கப்படவில்லை. அதில் ஒலிக்கும் குரல்கூட என்னுடைய குரல் கிடையாது. வேறு யாரையோ வைத்து டப்பிங் பேச வைத்திருக்கிறார்கள்.
திரைப்படத்தில் எனது காரெக்டர், ஜார்ஜ் என்பவரின் மனைவி என்றுதான் கூறியிருந்தார்கள். ஆனால், இப்போது நபிகள் நாயகத்தின் மனைவி என்று மாற்றியிருக்கிறார்கள்.
என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட திரைப்பட ட்ரெயிலரை, யு-டியூப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
“எந்தவித மாற்றங்களும் செய்யக்கூடாது என்ற ஒப்பந்தம் எதையும் இவர் செய்து கொண்டிருக்கவில்லை” என்று கூறி, வழக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது.

ஈரான் மிது போர் தொடுத்தால்! ; இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


20120304-iran
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமானால், அரபு நாடுகளுடன் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமென அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரானின் அணு சக்தி திட்டத்தை முடக்க, இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், அவ்வாறு தாக்குதல் நடக்குமானால், எகிப்து, ஜோர்டன் ஆகிய அரபு நாடுகளுடன் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தங்கள் ரத்தாகிவிடும் ஆபத்துள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது என இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
அவர் கூறியதாக அந்நாட்டின் செய்தித்தாளில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் திரைப்படம் குறித்த பிரச்னையில் அரபு நாடுகள் முழுவதும் வன்முறை வெடித்திருக்கிறது. இந்த வன்முறையை அந்த நாடுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அனைத்து அரபு நாடுகளும்- முஸ்லிம்களும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இஸ்ரேல் நேரிடக் கூடிய எதிர்ப்புக்கு, நபிகளுக்கு எதிரான படத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு ஒரு முன்னோட்டம்தான்.
எகிப்து, ஜோர்டன் ஆகிய இரு நாடுகளுடன் மட்டும்தான் இஸ்ரேல் ஒப்பந்தங்கள் ஏற்டுத்தியுள்ளது.
அவையும் ரத்தாக வாய்ப்புள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக அந்த இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதை அமெரிக்கா விரும்புகிறது. ஆயினும் அந்நாட்டின் மீது எப்போது ராணுவ நடவடிக்கை எடுப்பது என்பதில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்து வருகிறது.