இணையத்தளங்களின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கும் இணையங்களின் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப, சமூக வலையமைப்பு நிறுவனங்கள் இணைந்து குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது.
இந்த அமைப்புத் தொடர்பில் ஒருபுறம் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. ’The Internet Association’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு முதலில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதில் இணையத்தளங்களின் பங்களிப்புக் குறித்து ஆராயவுள்ளது.
இந்த அமைப்பில் கூகுள், யாகூ, பேஸ்புக், அமேசன், ஏஓஎல், இ-பே, எக்ஸ்பீடியா, ஐஏசி, லிங்க்டின், மொன்ஸ்டர், ரொக்ஸ்பேஸ், சேல்ஸ்போர்ஸ், ட்ரிப் எட்வைஸர், சிங்கா ஆகிய நிறுவனங்களின் அங்கத்தவர்கள் பணியாற்றவுள்ளனர்.
இந்த அமைப்பின் தலைவராக மைக்கல் பெக்கர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக இயங்கும் இணையத்தளங்களை அந்நாட்டில் தடை செய்வதற்கும் அதற்கான சட்டவரைவுகளைத் தயார் செய்வதற்குமே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனை முற்றாக மறுத்துள்ள மைக்கல் பெக்கர்மன், இணையங்களின் வளர்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தாக்கங்கள் சாதகமான நிலைப்பாட்டினை அடைவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி இணைய நிறுவனங்களை முடக்குவதற்கு தீவிரவாதிகள் தயாராகலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் கசிந்துள்ளன.
இந்த அமைப்பில் அப்பிள், மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment