உலகம் முழுவதும் சுமார் 3.9 கோடி மக்கள் பார்வைத் திறன் இன்றித் தவிக்கிறார்கள். பாதியளவு பார்வைக் குறைபாட்டோடு சுமார் 24.6 கோடி பேர் அவதிப்படுகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒளியைக் காட்டும் விதமாகத்தான் செயற்கை கண்களை உருவாக்கும் முயற்சி வெகு காலமாக நடந்து வருகிறது. அந்த முயற்சியின் முக்கிய மைல் கல்லாக, தற்போது ஆஸ்திரேலியாவில் முதல் செயற்கைக் கண்கள் ரெடியாகிவிட்டன.
ஒரு பெண்ணுக்கு அவை பொருத்தப்பட்டுள்ளன. 20 வருடங்களாக பார்வையின்றித் தவிக்கும் அந்தப் பெண்ணின் பெயர் டயான்னி ஆஷ்வர்த். தற்போது பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை கண்கள் மூலம் சின்ன ஒளிக்கீற்றை தான் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார் டயான்னி. அறிவியல் உலகில் இது மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.
காரணம், முழுக்க முழுக்க செயற்கையாக கருவிகளை வடிவமைப்பது எளிது. மனித நரம்புகளோடும் மூளையோடும் தொடர்பு ஏற்படுத்தக் கூடிய செயற்கைக் கருவிகள் சிந்தித்துப் பார்க்கவே கடினமானவை. அதனால் தான் இதுநாள் வரை அமெரிக்கா உட்பல பல நாடுகளில் விஞ்ஞானிகளின் கனவு ப்ராஜக்ட்டாக இருந்து வந்தது இந்த செயற்கை கண். கடைசியாக இதை சாதித்துக் காட்டியிருக்கிறது ஆஸ்திரேலிய அரசின் பயோனிக் விஷன் எனும் ஆராய்ச்சிக் கிளை. மனித விழித்திரைக்குள் பொருத்தப்படும் இந்த நுண்ணிய கருவி, 24 எலக்ட்ரோடுகளால் ஆனது. சின்னஞ்சிறு கேமரா மூலம் ஒளிக்காட்சியைப் பெறும் இந்தக் கருவி, அந்த மின் காந்த சமிக்ஞைகளை நரம்பு சமிக்ஞைகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. சாதாரணமாக நம் கண்களில் நடக்கும் இந்தச் செயலை செயற்கையாக நடத்திக் காட்டியிருப்பதுதான் இந்தக் கருவியின் சிறப்பு. ‘‘இது ஒரு துவக்கம்தான்.
ஒரு சின்ன ஒளிக்கீற்றைத்தான் இப்போதைக்கு டயான்னியால் பார்க்க முடிந்திருக்கிறது. இன்னும் துல்லியமானதாகவும் பொருத்துவதற்கு எளிமையான கருவியாகவும் இதனை உருவாக்க வேண்டும்’’ என்கிறார் பயோனிக் விஷன் அமைப் பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேவிட் பென்னிங்டன். அடுத்த ஆண்டில் இன்னும் சக்தி வாய்ந்ததாக, அதாவது 1024 எலக்ட்ரோடுகள் கொண்ட செயற்கைக் கண்களை உருவாக்கி பரிசோதிக்கப் போகிறார்களாம். ‘‘அப்படி தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையும்போதும் கூட பார்வையற்ற ஒருவருக்கு கறுப்பு – வெள்ளை பார்வையைத்தான் கொடுக்க முடியும். அதன் மூலம் அவர் யார் உதவியும் நாடாமல் நடமாட முடியும். அதுவே பெரிய வெற்றிதான்!’’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். இயற்கை போகிற போக்கில் படைக்கும் விஷயத்தை உருவாக்குவதற்கு மனிதன் எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment