பல நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும், வன்முறைகளையும் ஏற்படுத்திவிட்ட திரைப்படத்தை யு-டியூப்பில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது அமெரிக்க கோர்ட். இந்த திரைப்படத்தில் நடித்த நடிகையே, சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யு-டியூப்பில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.
யு-டியூப்பில் இருப்பது, இந்த திழரப்படத்தின் 14 நிமிட ட்ரெயிலர்தான். அதற்கே உலகின் பல பகுதிகளிலும் அமெரிக்காவுக்கு எதிராக பற்றி எரிந்தது. இதுவரை 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஒரு அமெரிக்க தூதர் உட்பட!
போராட்டங்கள் இன்னமும் முடியவில்லை.
Innocence of Muslims என்ற இந்த திரைப்படத்தின் ட்ரெயிலரில் தோன்றும் நடிகை சின்டி லீ கார்சியா, லாலஸ் ஏஞ்சலஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த லாலஸ் ஏஞ்சலஸ் சுப்பீரியர் கோர்ட் நீதிபதி லுயிஸ் லவின், “ஒரு நடிகையாக இவருக்கும், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அல்லது இயக்குநருக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் எதையும் கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே, குறிப்பிட்ட திரைப்படத்தை யு-டியூப்பில் தடை செய்ய உத்தரவிட முடியாது” என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நடிகை சின்டி கார்சியா தொடர்ந்த வழக்கு வெற்றி பெற்று, திரைப்பட ட்ரெயிலர் யு-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டால், தற்போது அமெரிக்காவுக்கு எதிரைக நடைபெறும் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த தீர்ப்பு அந்த சாத்தியத்தை இல்லாது செய்துவிட்டது.
நடிகை சின்டி லீ கார்சியா, “இந்த திரைப்படத்தின் நிஜ ஸ்கிரிப்ட் எனக்கு காண்பிக்கப்படவில்லை. அதில் ஒலிக்கும் குரல்கூட என்னுடைய குரல் கிடையாது. வேறு யாரையோ வைத்து டப்பிங் பேச வைத்திருக்கிறார்கள்.
திரைப்படத்தில் எனது காரெக்டர், ஜார்ஜ் என்பவரின் மனைவி என்றுதான் கூறியிருந்தார்கள். ஆனால், இப்போது நபிகள் நாயகத்தின் மனைவி என்று மாற்றியிருக்கிறார்கள்.
என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட திரைப்பட ட்ரெயிலரை, யு-டியூப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
“எந்தவித மாற்றங்களும் செய்யக்கூடாது என்ற ஒப்பந்தம் எதையும் இவர் செய்து கொண்டிருக்கவில்லை” என்று கூறி, வழக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment