Search This Blog

Pages

Monday, February 7, 2011

தெளிவு - பாரதியார் - கவிதை


எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்கமுண்டோ?

உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே,
எத்தனை கோடி யிடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிதுமுண்டோ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தேவ னுரைத்தனனே; - மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்
கச்சமு முண்டோடா? - மனமே!
தேன் மடை யிங்குத் திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!

No comments:

Post a Comment