துருக்கி – சிரியாவுக்கு இடையில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிரிய இராணுவம் துருக்கி எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடத்திய மோட்டார் தாக்குதலில் துருக்கியின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து துருக்கி இராணுவம் சிரியா மீது தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சிரிய இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சிரிய எல்லைகள் மீது துருக்கி தாக்குதல்களை ஆரம்பித்திருப் பதாக துருக்கி அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டது. துருக்கி, சிரியாவின் டல் அல் அல்யாத் எல்லைப் பகுதி மீது நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
துருக்கி எல்லையோர நகரான அக்ககிள் நகர் மீது சிரியா நடத்திய ஷெல் தாக்குதலில் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் கொல்லப்பட்டனர். அதேபோன்று ஒரு துருக்கி பாதுகாப்பு அதிகாரியும் காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்தே துருக்கி, சிரியா மீது எறிகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 18 மாதங்களாக சிரியாவில் நிலவும் பதற்ற நிலையில் சிரியா பல முறை துருக்கி எல்லை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் துருக்கி பதில் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதனையொட்டி எல்லையோரத்தில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு விலகி இருக்குமாறு துருக்கி அரசு அறிவுறுத்தியுள்ளதோடு 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாதுகாப்புச் சபையும் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து ஆலோசிக்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோன்று துருக்கி அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பும் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் சிரியாவின் செயலுக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளதோடு துருக்கிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் பரிந்துரைக்கு அமைய நேற்று முன்தினம் இரவு நேட்டோ இந்த அவசர கூட்டத்தை நடத்தியது.
நேட்டோ விதியின் 4 ஆவது அதிகாரத்தின் கீழ் நடத்தப்படும் இந்த அவசர கூட்டம் அரிதாக இடம்பெறு வதாகும். தமது அங்கத்துவ நாடொன்றின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போதே நேட்டோ இவ்வாறான கூட்டத்தை நடத்துவது வழக்கம்.
எனினும் இந்த கூட்டத்தின் போது நேட்டோவின் 5 ஆவது அதிகாரத்திற்கமைய தமது அங்கத்துவ நாடொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அனைத்து அங்கத்துவ நாடுகளும் இணைந்து பதில் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதில் லிபியா போன்று நேட்டோ சிரியாவில் தலையிடாது என குறிப்பிட்ட நேட்டோ செயலாளர் நாயகம் அன்டர்ஸ் பொக் ரஸ்முஸன், துருக்கியின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கையை எடுக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
எனினும் எல்லை தாண்டிய படை நடவடிக்கை குறித்து துருக்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். சிரியாவின் தாக்குதலைத் தொடர்ந்து துருக்கி அரசு பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில் சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற துருக்கி வாக்கொடுப்பை நடத்தியது.இதில் பெரும்பான்மை அடிப்படையில் அனுமதியும் கிடைக்கப்பெற்றது.
“கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி தொடக்கம் சிரிய அரபு குடியரசின் இராணுவம் எமது எச்சரிக்கைகள் மற்றும் இராஜதந்திர தொடர்புகளையும் மீறி எமது எல்லைகளில் அத்துமீறி செயற்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியு ள்ளது” என்று துருக்கி அமைச்சரவை கோரியுள்ளது.
சிரியாவின் எல்லை மீறிய செயலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு துருக்கி, பாதுகாப்புச் சபையை கோரியுள்ளது.
இது குறித்து துருக்கி பிரதமர் ரிசம் தய்யிப் எர்டோகன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வெறுக்கத்தக்க தாக்குதலுக்கு எல்லையோரத்தில் இருக்கும் எமது ஆயுதப்படை பதிலளிக்கும். சிரிய அரசின் எமது தேசிய பாதுகாப்புக்கு எதிராக இவ்வாறான அத்துமீறிய செயலை துருக்கி சும்மா விட்டுவிடாது” என்று குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த எல்லை தாண்டிய தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என சிரிய அரசு கூறியுள்ளது.
இது குறித்து சிரிய ஊடகத்துறை அமைச்சர் இம்ரான் சொவாபி வெளியிட்டுள்ள அறிக் கையில், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் எமது நட்பு துருக்கி நாட்டவர் களிடம் சிரியா சார்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சிரியாவில் அரச படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான உக்கிர மோதல்கள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அசாத்தின் இராணுவம் பலத்த பின்னடைவை சந்தித்துள்ள இந்த நிலையில் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு மீதான கிளா்ச்சிப்படையின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் முக்கிய உறுப்பினா் ஒருவரை கொலை செய்த கிளா்ச்சிப்படை நேற்று லெபனானிலுள்ள அவர்களின் ஆயுத கிடங்கு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் ஹிஸ்புல்லாஹ் அமைப்பினை சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்பாக உள்ள நிலையில் இப்போது இந்த பிரச்சினை ஆரம்பித்துள்ளது.தன்னை பாதுகாத்துக்கொள்ள நட்பு நாடுகளை அழைப்பதற்கு தகுந்த காரணமே சிரியாவிற்கு தேவைப்படுவது.அது இப்போது நிறைவேறியுள்ளது.
சிரியா மீது ஏனைய நாடுகள் போர் தொடுத்ததால் நேரடியாக எங்கள் இராணுவம் களமிறங்கும் என்று ஈரான் அறிவித்துள்ள நிலையிலேயே இப்போது துருக்கி போர் தொடுத்துள்ளது. அப்படியாயின் ஈரான் துருக்கியை போர்க்களத்தில் சந்திக்குமா ? ஈரானிய ஏவுகனைகளுக்கு துருக்கி இலக்கானால் நேட்டோ உருப்பு நாட்டின் மீதான தாக்குதலை பார்த்துக் கொண்டிருக்குமா ? நேட்டோ நட்பு நாட்டின் மீது போர் தொடுப்பதை ரஷ்யா மற்றும் சீனா அனுமதிக்குமா ? இவ்வாறு உலகம் முழுவதும் பரவ உள்ள யுத்தத்தில் இஸ்லாமிய புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றிய பிராந்திய நாடுகளின் பங்கு எவ்வாறு இருக்கப்போகிள்றது ? நிச்சயமாக அவை இஸ்ரேல் ஆதரவான மோற்கு நாடுகளுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை அப்படியாயின் இவர்களின் ஆதரவு ?
எது எவ்வாறு இருப்பினும் சிரியா மீதான அந்நியநாடுகளின் தாக்குதல் உலகுக்கு ஆபத்தானது
No comments:
Post a Comment