Search This Blog

Pages

Friday, September 20, 2013

இளைஞர்களே முன்வாருங்கள் திருமணம் செய்ய: அழைக்கிறார் முஹம்மது அஷ்ரப்

ashraff-
(எஸ்.அஷ்ரப்கான்)
வர்த்தகமும் வளங்களும் விருத்திபெற்று விளங்கும் கல்முனை மாநகரில் தன்னிறைவு கண்ட செல்வச் சிமான்கள் பலர் இருந்திட்ட போதிலும், வயது வந்த ஏழைக்குமர்களின் தொகையும், அவர்களை கரை சேர்க்க முடியாதா?என்ற ஏக்கத்தில் வாழும் ஏழைப் பெற்றோரின் தொகையும் அதிகரித்து வரும் நிலையில் இப்பிரதேச வள்ளல்கள் மனம் வைக்காததால் பிரஸ்தாப மக்களது அழுகுரல்  மௌன கீதமாய் எங்கும் ஒலிக்கிறது. இந்த அழுகுரல் வெளியுலகத்திற்கு கொண்டுவரப்படாமல் இருப்பது கண்டு மனவேதனை அடைகின்றேன்.
இவ்வாறு சமூக சிந்தனையோடு துணிவாக குரல்கொடுத்து வெளியுலகிற்கு தன்னை ஒரு சமூக சேவகனாக வெளிக்காட்டவும், பெருமையற்ற இறை திருப்தியையும், மறுமைப் பயனையும் மட்டுமே பிரதியுபகாரமாகக் கொண்டு ஏழைப்பெண்களின் திருமண விடயத்தில் தன்னாலான உதவிகளைச் செய்து, செயலாற்ற முன்வந்திருக்கும் கல்முனையைச் சேர்ந்த ஒருவர்தான் முஹம்மது அஷ்ரப் என்ற விசேட தேவையுடைய இளைஞனாகும்.
இவர் பற்றிய சுய விபரத்தை நாம் தருவதுடன், எமது சமூகத்தின் ஏனைய இளைஞர்கள் இவரை முன்மாதிரியாகக் கொண்டு செயலாற்ற முன்வர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
கல்முனையில் பிறந்த  முஹம்மது அஷ்ரப்.  இவர் விசேட தேவையுடையவராக இருக்கிறார். இவரது நற்குணங்களில் ஒன்று தொழில் செய்ய முடியாது விட்டாலும், யாரிடமும் யாசகம் கேட்காமல் கல்முனை வர்த்தக பிரதேசத்தில் போக்குவரத்து பயணிகளிடம் உணவுப்பண்டங்களை விற்பனை செய்து அதனுாடாக தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
இவர் திருமணம் முடித்தவர். தனது மனைவியிடம் எதனையும் எதிர்பார்க்காமல் தன் தாயினுடைய குடிசை வீட்டில் மனைவியை வைத்து இஸ்லாம் சொன்ன முன்மாதிரியான வாழ்க்கை வாழ்வது அனைவரையும் வியக்க வைக்கிறது.
ஏழைப் பெண்களின் திருமணம் செய்து வைப்பதற்காக  மணமகனாக இவர் நல்லுள்ளம் கொண்ட இளைஞர்களை தேடுகிறார்.
ashraff-
இவரை இது விடயமாக நாம் சிறிது நேர்கண்டோம். அவர் பின்வருமாறு கூறுகின்றார்;
ஏழைகளை இன்முகத்துடன் பொறுப்பேற்று திருமணம் செய்து கொள்வதில் எம் சமூகத்து இளைஞர்கள் அருகியே காணப்படுகின்றனர். ஏழையாகப் பிறந்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழைப் பெண்களையே திருமணமும் முடித்து எமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த முஹம்மது நபியின் (ஸல்) அவர்களின் வழிமுறையை நாம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
கட்டிய சிறு வீட்டை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பெற்றோர்கள் திணறுவதையும், இதனால் வயதேறிச் செல்லும் முஸ்லிம் யுவதிகளின் கண்ணீரும் கவலையும் எமது பிரதேசத்தை ஆட்கொண்டிருப்பதால் நோய்கள், நிம்மதியின்மை, பொருளாதார நெருக்கடி என்ற பல்வேறு கோணங்களில் எமக்கு சோதனைகள் வந்த வருகின்றது.
இதனை மறந்த நிலையில் வெள்ளைப் பெண்களையும் வேன், கார், பங்களாவையும் தேடி அலையும் இளைஞர் பட்டாளம் நாளைய தீர்ப்பு நாளை நினைத்துப்பார்க்க வேண்டும். கழிப்பறை இருக்கும் இடம்தெரியாத அளவு பிரமாண்டமான இல்லத்தை இலவசமாகப் பெற்று சொகுசு வாழ்ககை நடாத்தும் சகோதரர்கள் கப்றின் நெருக்கம் நிறைந்த காரிருளில் என்ன செய்யப்போகின்றார்கள்.
ஏழைகளோடு பேசத்தயங்கும் உங்களுடன் நாளை கியாமத் நாளில் அல்லாஹ் பேசமாட்டான் என்பததைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த முயற்சியில் என்னுடன் இணைந்து சமூகத்திற்கு சேவையாற்ற என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு
முஹம்மது அஷ்ரப்
76-4, சின்னத்தம்பி வீதி
கல்முனை-03

No comments:

Post a Comment