Search This Blog

Pages

Monday, February 7, 2011

புதுமனை புகுவிழா


தமிழ்த்தாயைக் கண்டேன்
தேய்பிறையாய் இருந்தாள் அவள்,
குருதி சொட்டச் சொட்ட
குமுறிக் கொண்டிருந்தாள்.

ஏன் என்றேன்,
அழுதுகொண்டே சொன்னாள்...
'இனி தமிழ்க் குழந்தைகளுக்குத்
தமிழ்ப் பாலூட்ட ஒரு
முலைதான் மிச்சமிருக்கிறது' என்று.

இதோ அற்பனே
இடுகாட்டின் காவலனே
எழுதிக்கொள் உனது
புதுமனை புகுவிழா
அழைப்பிதழை பின்வருமாறு...

தமிழ் இனத்தின்
தலைகளையும்
எலும்புகளையும்
அஸ்திவாரமாய் இட்டிருக்கிறோம்!
அவர்கள் சதை கொண்டும்
குருதி கொண்டும்
கட்டியிருக்கிறோம் கோட்டைகளை!
இருபதடி ஆழத்தில்
குடிநீர் கிடைக்கும் - அதில்
குருதி கொஞ்சம் கலந்திருக்கும்!

மரண ஓலங்கள்
நாதசுவரமாகவும்,
தமிழினத் தோலில்
தவிலும் வாசிக்கப்படும்,
வீணைகளுக்கு குழந்தையின்
நரம்பிட்டிருக்கிறோம்,
தாய்மார்களின் முலைகளைக் கொண்டு
மெத்தையிட்டிருக்கிறோம்,
பிஞ்சுக் குழந்தையின்
விரல்கள் தோரணங்களாயிருக்கின்றன,
சுதந்திரம் கேட்டவர்களின்
சங்கு வாசற்கதவினில் அலங்காரமாய்...

வாருங்கள்
வந்து ஆசி கூறிப் போங்கள்.

வழி மறந்தால்
பருந்துகளையும்
பிணந்தின்னி கழுகுகளையும்
பின் தொடர்ந்து வாருங்கள்...

No comments:

Post a Comment