Search This Blog

Pages

Monday, May 2, 2011

பாகிஸ்தானின் இறையாண்மையை மீறி விட்டது அமெரிக்கா: பர்வேஸ் முஷாரப்

பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து, பாகிஸ்தான் அரசுக்குக் கூட தெரிவிக்காமல் பின்லேடனை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் இறையாண்மையை மீறி விட்டது அமெரிக்கா.
முன்னாள் பாகிஸ்தான் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப், தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இதுதொடர்பாக சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஒசாமா பின் லேடன் வீழ்த்தப்பட்டது வரவேற்புக்குரியது. தீவிரவாதத்திற்குக் கிடைத்துள்ள பெரிய அடி என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம், பாகிஸ்தான் மண்ணுக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் அரசுக்குக் கூட தெரிவிக்காமல் பின்லேடன் வேட்டையை அமெரிக்கா மேற்கொண்டது அத்துமீறிய செயல். பாகிஸ்தான் இறையாண்மையை மீறிய செயலாகும். பாகிஸ்தானுக்குள் அமெரிக்கப் படைகள் வருகின்றன, தாக்குதல் நடத்துகின்றன, திரும்புகின்றன. இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது சரியல்ல.
பாகிஸ்தான் அரசையும் இதில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அந்நிய படையினர் பாகிஸ்தான் மண்ணுக்குள் அத்துமீறி நுழைவதை பாகிஸ்தான் மக்கள் விரும்ப மாட்டார்கள். பாகிஸ்தான் எல்லையை மீறி அமெரிக்கப் படையினர் வந்திருக்கக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபடும் போது ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும். நம்பிக்கை தான் இங்கு அவசியம், முக்கியம். ஆனால் பாகிஸ்தான் அரசை நம்பாமல் அமெரிக்கப் படையினர் செயல்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இது மோசமானது.
பின்லேடன் அப்போத்தாபாத்தில் தங்கியிருந்த போது அவருக்கு பாகிஸ்தான் அரசுத் தரப்பில் சிலர் உதவியதாக கூறப்படுவது தவறானதாகும். அதற்கான வாய்ப்பே இல்லை. அதேபோல பாகிஸ்தான் தரப்பிலும் உளவுப் பிரிவினர் தவறு ஏதும் செய்யவில்லை.அமெரிக்க உளவுப்படையினரிடம் உள்ள வசதிகள் பாகிஸ்தானிடம் இல்லை. இதுதான் பின்லேடன் குறித்த தகவலை முன்கூட்டியே பெற முடியாமல் போனதற்குக் காரணம். பின்லேடனின் மரணம் பாகிஸ்தான் மக்களுக்கும், உலக மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை என்றார் முஷாரப்.

No comments:

Post a Comment