Search This Blog

Pages

Thursday, December 2, 2010

மைனா


எதார்த்தம் என்ற வட்டத்திற்குள் உருவாகியிருக்கும் ஒரு காதல் படம்தான் மைனா.
இயக்குநர் பிரபு சாலமனுக்கு புதிய களம் என்றாலும், நுணுக்கமாக திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு இறுக்கமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.
படிப்பு வராததால் இளம்வயதிலே வேலைக்குப் போகும் நாயகன் விதார்த், ஆதரவு இல்லாமல் இருக்கும் நாயகி அமலாவுக்கும், அவருடைய அம்மாவுக்கும் ஆதரவாக இருக்கிறார். இதனால் இளம்வயதில் இருந்தே ஒன்றாக வளரும் இவர்களுக்கிடையே காதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் அமலாவை அவருடைய அம்மா வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் விதார்த், அமலாவின் அம்மாவை அடித்து உதைக்க, காவல்துறையிடம் புகார் போகிறது. விதார்த்தும் 15 நாட்கள் காவலில் அடைக்கப்படுகிறார்.
விதார்த் இல்லாத இந்த சூழ்நிலையில் அமலாவுக்கு திருமணம் ஏற்பாடு நடைபெறுகிறது. இதை அறிந்த விதார்த் சிறையில் இருந்து தப்பித்து மறுபடியும் அமலாவின் அம்மாவிடம் தகராறு செய்கிறார். சிறையில் இருந்து தப்பித்த விதார்த்தை மறுபடியும் போலீஸ் கைது செய்ய, அமலாவும் உடன் செல்கிறார். இப்படி ஆரம்பமாகிறது இவர்களுடைய காதல் பயணம்.
இந்த பயணத்தின்போது வாழ்க்கையை பற்றிய சந்தோஷமான கனவுகானும் இந்த காதல் ஜோடிகள் நிஜத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றன. இறுதியில் அனைத்தும் கைகூடிவரும் நிலையில் இவர்களூடைய வாழ்க்கையுடன் இவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் சோகமாவதுதான் மைனாவின் சோகமான முடிவு.
காடும் காடு சார்ந்த இடமும் தான் கதைகளம். இப்படியும் ஒரு கிராமம் தமிழகத்தில் இருக்கிறதா? என்று ஆச்சரியப்பட வைக்கும் லொக்கேஷன். காதலுக்காக காட்டுமிராண்டித்தனமாக போராடும் இளைஞனின் வாழ்க்கையை சரியான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
நாயகன் விதார்த் சுருளி என்ற கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. இயக்குநர் சொல்லியதை அப்படியே செய்திருக்கிறார். இவரைப் போலதான் நடிகை அமலா பாலும். சில இடங்களில் இவர் கண்களிலே தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் அமலாவை காட்டிலும் விதார்த்துக்குத்தான் நடிக்க வாய்ப்புகள் அதிகம். அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு சபாஷ் வாங்கியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் சேது, தம்பி ராமையா ஆகியோரது நடிப்பும் அபாராம். தம்பி ராமையா காமெடி, குணச்சித்திரம் என இரண்டு வேடங்களையும் வச்சனை இல்லாமல் செய்திருக்கிறார். அதேபோல நாயகனின் அப்பா, நாயகியின் அம்மா போன்ற கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றது.
டி.இமானின் இசைக்கு கிடைத்த சவாலாகவே இப்படம் அமைந்திருக்கிறது. அவரும் சாதித்துதான் காட்டியிருக்கிறார். படம் ஆரம்பம் முதலே இமானின் இசையும் ஒவ்வொரு காட்யிலும் ஒரு கதாபாத்திரமாகவே அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தனது பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு புதிய இசையை கொடுத்திருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் கவனம் செலுத்தி ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமரா காற்று நுழையாத பகுதிகளில் கூட நுழைந்திருக்கிறது. காடுகளின் ஆக்ரோஷத்தையும், அழகையும் ஒருசேர காண்பித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. பேருந்து விபத்து காட்சியில் படத்தொகுப்பாளர் எல்.கே.வி.தாஸின் பணியும் பாராட்டும் விதத்தில் உள்ளது.
பார்த்த கதையாக பட்டாலும், திரைக்கதையில் திருப்புமுனைகளை வைத்து சரியான பாதையில் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். அதுவும் பேருந்து விபத்து காட்சியில் ஏதோ ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப்படம் பார்த்த ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் சில லாஜிக் மீரல்கள் படத்தில் இருந்தாலும், சில இடங்களில் சீட் நுணியில் நம்மை அமரவைத்திருக்கும் இயக்குநர் பிரபு சாலமனை பாராட்டியாக வேண்டும்.
மைனா – காதல் பயணம்

No comments:

Post a Comment