Search This Blog

Pages

Thursday, December 2, 2010

உத்தமபுத்திரன்


புத்திரன் காதலுக்காகக் குடும்பமே ஒன்று சேர்ந்து போடும் நாடகமே... உத்தமபுத்திரன்!
தனுஷ், நண்பர்களின் காதலுக்காக உதவுபவர். நண்பனுக்காக மணப் பெண்ணைத் தூக்கும்போது, மாற்றி ஜெனிலியாவைத் தூக்கி வந்துவிடுகிறார். ஜெனிலியாவின் சொத்துக்காகத் தன் மகனுக்குத் திருமணம் செய்ய இருந்த அடாவடி ஆசிஷ் வித்யார்த்தியும் அவரது தம்பியும் தனுஷைத் தேடுகிறார்கள். திருமணத்தில் இஷ்டம் இல்லாத ஜெனிலியா, தனுஷைக் காதலிக்க ஆரம்பிக் கிறார். தனுஷின் பெரியப்பா பாக்யராஜிடம் நல்ல பெயரும் வாங்கிவிடுகிறார். இப்போது தனுஷ் முறை. வித்யார்த்தியின் ஆடிட்டரான விவேக்கைப் பிடித்து வீட்டுக்குள் நுழைகிறார். அங்கே அமெரிக்க வாழ் பணக்காரராக என்ட்ரி கொடுக்கிறது பாக்யராஜ் அண்ட் கோ. வித்யார்த்தி அண்ட் கோவின் பண ஆசையையே பகடைக் காய் ஆக்கி தனுஷ் - ஜெனிலியாவைச் சேர்த்துவைக்க முயற்சிக்கிறார்கள். முயற்சி வெற்றி பெற்றதா என்பது க்ளைமாக்ஸ்.
தெலுங்கு ஹிட் 'ரெடி'யை ஆரத் தழுவி இருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர். ஒரு மெகா சீரியல் கதையை இரண்டு மணி நேரத்தில் அடக்கிச் சொன்னதற்கே இயக்குநரைப் பாராட்டலாம். மெகா சீரியல்போலவே தியேட்டரில் ஸ்க்ரீனுக்கு வெளியே இருப்பவர்களுக்கு இணையாக ஸ்க்ரீனிலும் கும்பல் கும்மியடிக்கிறது.
அன்பால், காதலால் மற்றவர்களைக் கவர்கிற ஹீரோவாக தனுஷ். அவருக்கும் நமக்கும் இது நன்றாகவே பழக்கப்பட்ட கேரக்டர். அதனாலேயே எந்தச் சிரமமும் இல்லாமல் நடித்திருக்கிறார். நாமும் எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் பார்க்க முடிகிறது. இன்னும் அழகாக... ஜெனிலியா. துள்ளல் பேச்சும், பல்பு சிரிப்புமாக கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் ஜெனி.
அப்பா கேரக்டரில் வரும் பாக்யராஜ் அன்பான அப்பா, அமெரிக்கப் பணக்காரர் என இரண்டு கேரக்டரிலும் அசத்துகிறார். கடைசியில், ஆசிஷ் அண்ட் கோவிடம் மன்னிப்பு கேட்கும்போது... அத்தனை நெகிழ்ச்சியான நடிப்பு. டிராமா ரூட்டில் போகும் கதையை சுவாரஸ்யப்படுத்துவது விவேக்கின் காமெடிதான். இல்லாத ஒரு வாஷிங்டன் வெற்றிவேல் பற்றி விவேக் கொடுக்கும் பில்ட்-அப்பை, இவர்தான் அவர் என்று பாக்யராஜை தனுஷ் அறிமுகப்படுத்தும் இடத்தில் விவேக்கின் எக்ஸ்பிரஷன்கள் தியேட்டரை அதிர வைக்கின்றன.
படம் நெடுக வரும் இயக்குநரின் வசனங்கள் சின்ன ஆச்சர்யத்தோடு கவனிக்கவைக்கின்றன. 'கல்யாணம் பண்ணிட்டு சம்மதம் வாங்க வரலை... சம்மதம் வாங்கிட்டு கல்யாணம் பண்ண வந்திருக் கோம்' என்பது ஒரு பருக்கை உதாரணம்.
அவ்வளவு அதிரடியான அண்ணன் - தம்பிக்கள் 'நடந்தது எல்லாம் நாடகம்' என்று தெரிந்ததும் கொடுக்கிற ரியாக்ஷன், அவர்களை காமெடி பீஸ் ஆக்கிவிடுகிறதே?
'பொண்டாட்டி சாப்பிட்டாளான்னு கேட்குறவன்தான் நல்ல புருஷன்' என்பது மாதிரி படம் முழுக்க வரும் நாடகத்தனமான காட்சிகள் பார்ப்பது சினிமாவா... சீரியலா என்கிற குழப்பம் தருகிறதே பிரதர்? இன்னொரு பக்கம் யாருக்கு யார் என்ன வேணும் என்கிற உறவுக் குழப்பம் வேறு!
பாலசுப்பிரமணியெத்தின் கேமரா வீட்டுக்குள்ளேயே வலம் வந்தாலும், அத்தனை கேரக்டர்களையும் அழகோடு காட்டுகிறது. விஜய் ஆண்டனியின் டிரேட் மார்க் இசை.
சீரியல் செட்டப்... இருந்தாலும் ரசிக்கலாம்!

No comments:

Post a Comment