Search This Blog

Pages

Thursday, December 2, 2010

நகரம்


திருந்தி வாழ துடிக்கும் ரவுடி கதை.. நகரம்.
குற்ற செயலில் கைதாகி ஜெயிலில் இருக்கும் சுந்தர்சியை நண்பனாக இருக்கும் போலீஸ் அதிகாரி போஸ்வெங்கட் வெளிக்கொண்டு வருகிறார்.

விடுதலைக்கு பின் ரவுடிசத்தை விட்டு திருந்தி வாழ விரும்புகிறார். அதற்கேற்ப அழகான அனுயாவை சந்திக்க காதல். அவரை மணைந்து குடும்பம் குழந்தை என இருக்க கனவு காண்கிறார்.

ஆனால் விதி விளையாடுகிறது. போஸ் வெங்கட் சமூக விரோத காரியங்களில் ஈடுபடுகிறார். சுந்தர்சியிடம் நல்லன் போல் நடித்து கெட்ட காரியங்களுக்கு பயன்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் நண்பன் சுயரூபம் தெரிகிறது. அவரை விட்டு விலக முயல்கையில் ஆபத்து சூழ்கிறது. அதிலிருந்து தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்... 

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள படம். வழக்கமான தாதா பாணி கதையில் இருந்து வித்தியாசப்படுத்தி காமெடி, காதல், ஆக்ஷன் என விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார். நடிப்பிலும் மெருகு. வாழத்துடிக்கும் ரவுடியின் உணர்வுகள் முகவெட்டில் கச்சிதமாய் பிரதிபலிக்கிறது.

குளிருக்கு ஸ்வெட்டர் கொடுத்து அனுயாவிடம் காதல் வயப்படுவது அழகு. துறைமுகத்தில் போஸ் வெங்கட்டின் கடத்தல் பொருள் ஏஜென்சியில் வேலைக்கு சேர்ந்த பின் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. சாமி சிலையை தன்னை வைத்து கடத்துவதை கண்டுபதறுவது உதறல்.

ஓட்டலில் இருந்து போதைப் பொருளை போஸ் வெங்கட் கடத்துவதும் அதற்கு உரிமையாளரான தாதா சீனிவாசனை சுந்தர்சியை வைத்து சமாதானம் செய்வது போல் அழைத்து தீர்த்து கட்டுவதும் பரபர.

கோடீஸ்வரருக்கு சின்ன வீடாக இருக்கும் பெண்ணின் மகளாக வரும் அனுயா அழகிலும் அனுதாபத்திலும் அள்ளுகிறார். சுந்தர் சியிடம் காதல் வயப்படுவது... அவர் ரவுடி என அறிந்ததும் நொறுங்குவது தாயை வைத்திருப்பவர் தன்னையும் ஆசைக்கு அழைக்கையில் துடிப்பது என அழுத்தம் பதிக்கிறார்.

வடிவேலு காமெடி தோரணம் கட்டுகிறார். அனுயாவை காதலிக்க நிர்ப்பந்திக்கும் தாதாக்களிடம் மாட்டி விழிப்பது. அனுயாவின் நாய்க்குட்டிக்கு பிராந்தி கொடுத்து அவஸ்தை படுவது போஸ்டர் அடித்து நூறாவது திருட்டில் இறங்கி போலீசில் மாட்டுவது வயிற்றை புண்ணாக்கும் சிரிப்பு வெடிகள்.

ரவுடி மீதான அனுயாவின் திடீர் காதல் ஒட்டவில்லை. தமன் பின்னணி இசையும் செல்லத்துரை ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

No comments:

Post a Comment