Search This Blog

Pages

Monday, September 17, 2012

பல்கலை தொழிற்சங்க சம்மேளனத்தின் கோரிக்கைகள் சுயநலமானவை:திஸாநாயக்க


sb
தேசிய வருமானத்தில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை 6 சதவீதமாக அதிகரிக்குமாறு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து உண்மை நிலை இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.
தற்போது இந்த பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளது.
சம்பளத்தை 20 சதவீதம் அதிகரித்தல், வீட்டில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு வந்து கல்வி போதிக்கும் பேராசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் அவர்களின் வீட்டு வாடகையைச் செலுத்துதல், இந்தப் பேராசிரியர், விரிவுரையாளர்களின் தொலைபேசிக் கட்டணத்தையும் அரசாங்கமே செலுத்த வேண்டும். இவர்களின் இரண்டு பிள்ளைகளுக்கு தனியார் பாடசாலையில் கல்வி கற்பதற்கான செலவையும் அரசாங்கமே கொடுக்க வேண்டும், இவற்றுடன் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இவைதான் இந்தப் பேராசிரியர், விரிவுரையாளர் தொழிற்சங்கத்தின் பிரதான கோரிக்கைகள் ஆகும்.
இவ்விதம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியிருக்கும் பேராசிரியர்கள் விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் தொழிற்சங்கம் கேட்கும் இந்த கோரிக்கைகள் பற்றி சமீபத்தில்தான் தெரிந்து கொண்டுள்ளார்கள்.
பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக இவ்விதம் நியாயமற்ற கோரிக்கைகளை விடுத்திருப்பது பற்றி பெரும்பாலான பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் வெட்கப்பட்டு தலை குனிந்திருப்பதாக உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திரு க்கிறார்.
தற்போது வேலைநிறுத்த த்தில் ஈடுபட்டு வரும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் விடுத்துள்ள கோரிக்கைகள் உலகின் எந்த ஒரு நாட்டின் பல்கலைக்கழகத்திலும் நடைமுறையில் இல்லாத கோரிக்கைகளாக இருக்கின்றன என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவிக்கின்றார்.
தங்கள் வீட்டில் இருந்து கடமைக்கு வரும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தங்கள் வீட்டு வாடகையைக் கேட்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒரு கோரிக்கையாக அமைந்திருக்கின்றது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இத்துடன் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு எதிராகப் பேசும் இவர்கள் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்கு தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக செலவுத் தொகையையும் வழங்க வேண்டும் என்று கேட்டிருப்பது உண்மையிலேயே கிண்டலுக்குரிய ஒரு விடயம் என்றும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்தப் பேராசிரியர்கள் இவ்விதம் கல்விக்கு 6 சத வீதம் செலவீனத்தை ஒதுக்க வேண்டும் என்று நாட்டுக்கு நல்லவர்களைப் போன்று காட்டிக்கொண்டாலும் உண்மையிலேயே இது அவர்களின் சுயநல நோக்கத்துடன் தெரிவிக்கும் கோரிக்கை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நியாயமற்ற கோரிக்கை குறித்து இன்று பெரும்பாலான பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் வெட்கப்படுகின்றார்கள் என்றும் அவர் சொன்னார். இத்தகைய கோரிக்கைகளை விடுத்ததன் மூலம் தங்கள் தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தர்கள் தங்களை அகெளரவப்படுத்தியிருக்கின்றார்கள் என்றும் பெரும்பாலான பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் கவலை தெரிவித்திருக்கின்றார்கள்.
நாட்டின் தற்போதைய தேசிய உற்பத்தியில் இருந்து 14.02 சதவீதம் வருமானமாக அரசுக்குக் கிடைக்கின்றது. அரசாங்கம் கல்வித்துறைக்கு மாத்திரம் வருடாந்தம் 1.87 சதவீத நிதியை ஒதுக்குகின்றது.
இந்த தொகையை 6 சதவீதமாக அதிகரிக்குமாறு பல்கலைக்கழக பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் கேட்கிறார்கள். அரசாங்கம் தனது வருமானத்தின் ஒரு பகுதியை அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துக்காகவும், ஓய்வூதியக் கொடுப்பனவுக்காகவும் பொதுமக்களுக்கான தர்மப்பணம் மற்றும் சமுர்த்திக் கொடுப்பனவும், சலுகை விலையில் உரப்பசளையும் கொடுப்பதற்காகவும் செலவிடுகின்றது.
இவற்றுடன் மக்களுக்கான வாழ்வாதார செயற்பாடுகளுக்காக 6.7 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்களின் கோரிக்கைக்கு அமைய கல்விக்கு 6 சதவீதத்தை ஒதுக்கினால் அமைச்சுக்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோரின் காரியாலயங்களுக்கும் ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் மிஞ்சுவது 1.5 சதவீத வருமானமே ஆகும். இந்தத் தொகை அரசாங்கத்தின் ஏனைய செயற்பாடுகளுக்கு எந்தவிதத்திலும் ஏற்புடையதாக இருக்காது.
ஆயினும் கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், பொதுநிர்வாகம், விஞ்ஞான தொழில்நுட்பம், கடற்றொழில், சமூக சேவைகள், பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் கல்வி கற்கைநெறிகளுக்கும் அரசாங்கம் நிதியை ஒதுக்கீடு செய்கின்றது என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகள் கல்விக்கு கூடுதலான தொகையை ஒதுக்கீடு செய்கின்றன என்று பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் கூறுகின்ற போதிலும் அந்நாடுகளை விட இலங்கை கூடுதலான தொகையை கல்விக்காக செலவிட்டு வருகின்றது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் தொழிற்சங்கத்தின் முக்கிய தலைவர்கள் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று விடுக்கும் கோரிக்கைகள் நியாயமற்றதாக இருக்கின்ற அதேவேளையில் அது எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற முடியாத ஒரு கோரிக்கை என்பதை மற்றப் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் சொன்னார்.
சில அரசியல் கட்சிகளும் அரச சார்பற்ற அமைப்புக்களும் எங்கள் நாட்டின் பல்கலைக்கழக கல்வியை சீர்குலைப்பதற்கு முயற்சிகளை செய்து வருவதாகவும் இதுபற்றி ஆய்வு நடத்தும் போது உண்மை புலனாகி இருக்கின்றது என்றும் அமைச்சர் சொன்னார்.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பீடத்தினரையும் பல்கலைக்கழக மாணவர்களையும் இந்த வேலைநிறுத்தத்தில் சேர்த்துக்கொண்டு பல்கலைக்கழக கல்வியை சீர்குலைப்பதற்கு இந்த அரசியல் கட்சிகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் சதி செய்து வருவதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment