Search This Blog

Pages

Sunday, September 16, 2012

கிழக்கின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் யார்..? நஸீர் அஹமதா? ஜெமீலா?


9099
-செயிட் ஆஷிப்-
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் அமர்வது உறுதியாகி விட்டது. அதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரே அந்த முதலாவது முஸ்லிம் முதலைச்சர் என்கின்ற அந்தஸ்த்தை பெறவிருக்கிறார் என்பது மற்றொரு உறுதியான செய்தியாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அரச இயந்திரங்களை முழுமையாக எதிர்த்து ஏழு ஆசனங்களை வென்றெடுத்து கிழக்கின் ஆட்சியை தீர்மாணிக்கு சக்தியாக உருவெடுத்துள்ளது.
ஆகையினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கில் ஆட்சி அமைக்க வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரசின் தயவின்றி அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் முதலமைச்சர் பதவியை மு.கா.வுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு கிடைக்கவிருக்கின்ற முதலாவது முஸ்லிம் முதலைச்சர் என்கின்ற அந்தஸ்த்தை பெறப் போகின்ற அந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் யார் என்பது குறித்த வாதங்கள் மு.கா.போராளிகளிடம் மட்டுமல்லாமல் அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் சந்து பொந்துகளிலும் இடம்பெற்று வருகின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏழு உறுப்பினர்களுள் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் கட்சியில் அண்மையில் மீண்டும் இணைந்து பிரதித் தலைவர் பதவியில் அமர்ந்துள்ள ஹாபிஸ் நசீர் அஹமத் ஆகிய இருவரின் பெயர்களே முதலமைச்சர் பதவிக்கு பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.
இவர்களுள் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல் கிழக்கு மாகாண சபைக்கு இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் நூறு வீதம் விசுவாசமானவர் என்று கருதப்படுபவர்.
தனது மாணவப் பருவத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற ஜெமீல் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தை ஸ்தாபிப்பதில் முன்னின்று பாடுபட்ட ஒருவர் என்று எல்லோராலும் அறியப்பட்டவர்.
1990 களில் கிழக்கு மாகாணத்தில் யுத்தம் தலைவிரித்தாடிய போது கிழக்குப் பல்கலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த முஸ்லிம் மானவர்களின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறிய போது ஜெமீல் தனது தலைமையில் இயங்கிய மாணவர் சம்மேளனத்தின் மூலம் மாணவர்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கிப் போராடியதன் விளைவாகவே மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அதனை வெற்றி கொண்டார்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட பல்கலையின் அபிவிருத்தியிலும் ஜெமீலின் பங்களிப்பு நூறு வீதம் இருந்துள்ளது. அப்போது தலைவர் அஷ்ரப் அவர்கள் பல்கலை அபிவிருத்தி தொடர்பான தனது பிரதிநிதியாக ஜெமீலையே நியமித்திருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்ட தக்கதாகும்.
அன்று சாதாராண ஒரு மாணவனாக இருந்து கொண்டே பலகலை ஒன்றை ஸ்தாபிப்பதிலும் அதனை ஒரு தேசிய பல்கலைக் கழகமாக கட்டி எழுப்புவதிலும் இவர் வகித்த பாத்திரத்தை நோக்குகின்ற போது இவரது ஆற்றலும் ஆளுமையும் வெளிப்படுகிறது.
அது போன்று ரவூப் ஹக்கீம் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றத்தில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு ஜெமீல் பக்க துணையாக இருந்து வருகின்றார். குறிப்பாக கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராக பணியாற்றும் இவர் மாவட்டம் தோறும் இளைஞர் அணிகளை உருவாக்கி கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பை செய்து வருகின்றார்.
இவ்வாறான ஒருவரே அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றியீட்டியுள்ளார். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னர் மாகான சபை உறுப்பினர்களாக பதவி வகித்த பலருள் மீண்டும் வெற்றியீட்டியுள்ள ஒரேயொரு உறுப்பினர் ஜெமீல் மாத்திரமே. ஏனைய வெற்றியீட்டியுள்ள உறுப்பினர்கள் மாகாண சபைக்கு புது முகங்களாவர். அதனால் மாகாண சபை நிர்வாகம் தொடர்பான முழுமையான அறிவும் அனுபவும் இவரிடம் மாத்திரமே இருக்கும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
அத்துடன் மாவட்டத்தின் பல பாகங்களிலும் பரவலாக வாக்குகளைப் பெற்ற ஒருவராகவும் இவர் திகழ்கின்றார். அது தவிர இவரது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை மேயர் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் இவரைத் தோற்கடிப்பதற்கு திட்டமிட்டு எதிராக செயற்பட்ட போதிலும் இப்பிரதேச மக்கள் இவரை முழுமையாக விரும்பி ஆதரித்துள்ளனர்.
பொதுவாக மாவட்டம் பூராவும் அந்த கும்பல் ஜெமீலின் செல்வாக்கை உடைப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. காரணம் இவர் கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் விசுவாசமுள்ள ஒரு போராளி என்பதை மாவட்டத்திலுள்ள கட்சி ஆதரவாளர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். கடந்த காலங்களில் இவரது செயற்பாடுகள் அவ்வாறே அமைந்திருந்தன. இதனால் தான் இரண்டாவது அதி கூடிய விருப்பு வாக்குகளை (22357) பெற்று இவர் சாதனை படைத்துள்ளார்.
அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றியீட்டி இருப்பதாலும் இம்மாவட்டத்தில் இருந்து நான்கு உறுப்பினர்கள் தெரிவாகி இருப்பதாலும் முதலமைச்சர் பதவியானது அம்பாறை மாவட்டத்திற்கே வழங்கப்பட வேண்டும் என்கின்ற கோஷம் போராளிகள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிலும் கூட கல்முனைத் தொகுதி என்பது கிழக்கின் முக வெற்றிலை என்றும் முஸ்லிம் மாகாணத்தின் தலை நகரம் என்றும் முஸ்லிம் காங்கிரசின் இதயம் என்றும் மறைந்த தலைவரால் அடிக்கடி பிரகடனம் செய்யப்பட்டு வந்துள்ள ஓர் இடம் என்பது அனைவரும் அறிந்துள்ள உண்மையாகும்.
அதேவேளை ஜெமீல் என்கிற ஆளுமையின் பிறப்பிடம் கல்முனைத் தொகுதியில் சாய்ந்தமருது பிரதேசமானது ஒவ்வொரு தேர்தலிலும் தொண்ணூறு வீதம் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து வருகின்ற ஒரு முக்கிய பிரதேசமாகும்.
ரவூப் ஹக்கீமின் தலைமையத்துவத்தை உறுதிப்படுத்திய மண்ணும் இந்த சாய்ந்தமருது பிரதேசமேயாகும். இதனை சகல சந்தர்ப்பங்களிலும் ஞாபகப்படுத்தி பிரஸ்தாபிக்கின்ற மு.கா.தலைவர் ஹக்கீம் இம்முறையும் சாய்ந்தமருதில் இடம்பெற்ற இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்ளத் தவறவில்லை.
அது தவிர ஜெமீலின் வெற்றியையும் கிழக்கின் தலைமைத்துவம் இந்த மண்ணில் இருந்தே உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் தலைவர் ஹக்கீம் அந்தக் கூட்டத்தில் சூசகமாக சொன்னதை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஆகையினால் தலைவர் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற அந்தஸ்த்தை இவருக்கு வழங்கி அழகு பார்க்கவே வாய்ப்பு அதிகம் இருக்கிறது எனலாம்.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 11401 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ள அக்கட்சியின் பிரதித் தலைவரான ஹாபிஸ் நசீர் அஹமதின் பெயரும் முதலமைச்சர் பதவிக்கு பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.
கட்சியின் ஆரம்ப கால போராளியான இவர் அதன் சர்வதேச விவகாரப் பணிப்பாளராக இருந்து மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து கட்சியை சர்வதேச மட்டத்தில் அறிமுகப்படுத்துவதிலும் நிதி மூலங்களைத் தேடி கட்சியை வளர்த்தெடுப்பதிலும் இவரது பங்களிப்பு அளப்பரியதாக இருந்து வந்துள்ளது.
ஆனால் அவ்வாறு இருந்த போதிலும் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஹாபிஸ் நசீர் அஹமதின் நடவடிக்கைகள் கட்சியை பலவீனப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன. இதனால் இவரை நம்பி கிழக்கின் அமானிதத்தை மு.கா.தலைமைத்துவம் இவரிடம் ஒப்படைக்குமா என்பது சந்தேகமே.
ஏனெனில் ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை ஏற்றத்தில் இருந்து அவருக்கு பெரும் நெருக்கடி கொடுத்து நீதிமன்றத்தில் பல வழக்குகளை அரங்கேற்றிய பெருமை ஹாபிஸ் நசீர் அஹமதையே சாரும்.
பேரியல் அஷ்ரப் இணைத் தலைவராக இருந்த போது அவர் பக்கம் நின்று ரவூப் ஹக்கீமை வீழ்த்துவதற்கு சந்திரிகா அரசின் முழுப் பங்களிப்புடன் காய் நகர்த்தி தோல்வி கண்ட ஹாபிஸ் நசீர் அஹமத், ரவூப் ஹக்கீம் ஏக தலைவராக தேர்வான பின்னர் அவருக்கு பக்க பலமாக இருந்த அமைச்சர் அதாவுல்லாவை விலை பேசி கட்சியை உடைப்பதற்கு பல கோடிகளை செலவழித்து பாரிய சதித் திட்டமொன்றை தீட்டி அதனை வெற்றிகரமாக அரங்கேற்றினார்.
அன்று ரவூப் ஹக்கீம் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த போது கட்சியின் உச்ச பீட உறுப்பினர்கள் 23 பேரில் 12 பேரை அதாவுல்லா தலைமையில் பிரித்தெடுத்து ஹக்கீமை தலைமைப் பதவியில் இருந்து அகற்றுவதாக பிரகடனம் செய்து ஹாபிஸ் தன்னை நீதிமன்றில் நிறுத்திய வரலாற்றை ஹக்கீம் ஒரு போதும் மறக்க மாட்டார்.
அன்று ஹக்கீம் தலைமைப் பதவியைக் காப்பாற்றிக் கொண்ட போதிலும் கட்சிப் பிளவை தடுத்து நிறுத்த முடியவில்லை. இன்று அதாவுல்லா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் சவால் மிக்க ஒரு போட்டித் தலைவராக திகழ்கின்றார் என்றால் அதற்கான முழுப் பொறுப்பும் சகோதரர் ஹாபிஸ் நசீர் அஹமதையே சாரும்.
அண்மையில் இவர் முஸ்லிம் காங்கிரசில் இணைந்தது கூட நிபந்தனையின் அடிப்படையிலேயே என்பது எவருக்கும் தெரியாமல் இல்லை. தாருஸ்ஸலாமை விட்டுக் கொடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் பதவியையும் எதிர் காலத்தில் ஒரு தேசியப்பட்டியல் எம்.பி.யாக தன்னை நியமிக்க வேண்டும் என்றும் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றின் மூலமே கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார் என்பதும் சந்திக்கு வராத ரகசியமல்ல.
சகோதரர் ஹாபிஸ் நசீர் அஹமத் மு.கா.வை பல துண்டுகளாக்கிய வரலாற்றுக் கதைகள் நிறையவே உள்ளன. ஆனால் அவற்றை இங்கு அலசி ஆராய்வது நோக்கமல்ல, இன்றைய அரசியல் சூழலில் கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் நம்பிக்கையான ஒருவரா? அல்லது முதலமைச்சர் பதவியுடன் கட்சி தலைமைத்துவத்தையும் கைப்பற்ற முனைந்து கட்சியை இன்னொரு உடைவுக்கு உட்படுத்தும் ஒருவரா? என்றும் எழுகின்ற ஒரு சந்தேகத்திற்கு விடை காண முற்படுவதே இதன் நோக்கமாகும்.
உண்மையில் ஜெமீல், நசீர் அஹமத் ஆகிய இருவரில் கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் நூறு வீதம் விசுவாசம் நிறைந்தவர் யார்? இவர்களுள் முதலமைச்சர் எனும் முஸ்லிம் சமூகத்தின் அமானிதத்தை பாதுகாப்பதற்கு ஓரளவாவது பொருத்தமுடைய – நம்பிக்கைக்குரிய நபர் யார் என்பதை மு.கா. தலைமைத்துவம் சமூக நலன்களைக் கருத்திற் கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்பதே போராளிகளின் பலமான அபிப்பிராயமாகும்.

No comments:

Post a Comment