Search This Blog

Pages

Wednesday, September 26, 2012

கிழக்கு மாகாண தேர்தலின் பின்னரான அரசியல்: மெல்லச் சாகும் இனி…


Eastern-logo-map
- சிராஜ் மஷ்ஹூர் -
கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் தொங்கு மாகாண சபை ஒன்றையே விளைவாக்கியுள்ளது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை இன்னொரு கட்சியின் மீது சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது. இதில் சுதந்திரக் கட்சி அம்பாறையில் 3 ஆசனங்களும் திருகோணமலையில் 3 ஆசனங்களுமாக 6 ஆசனங்களைப் பெற்றிருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான தேசிய காங்கிரஸ் அம்பாறையில் பெற்ற 3 ஆசனங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பில் பெற்ற 3 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் பெற்ற ஒரு ஆசனத்தையும் கூட்டினால் மொத்தம் 13 ஆசனங்கள் மாவட்ட மட்டத்தில் ஐ.ம.சு.கூட்டமைப்புக்குக் கிடைத்தது.
சுதந்திரக் கட்சிக்கு 6 ஆசனங்களும் அதன் கூட்டணிக் கட்சிக்கு 7 ஆசனங்களும் என்பதுதான் தேர்தல் முடிவின் சாராம்சம். அத்துடன் அரச தரப்புக்குக் கிடைத்த 2 போனஸ் ஆசனங்களையும் உள்ளடக்கியே 15 ஆசனங்கள் என்ற கணக்கு பெறப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திரக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சி அம்பாறையில் 3 ஆசனங்களும் திருமலையில் ஒரு ஆசனமுமான 4 ஆசனங்களைப் பெற்றது. மொத்தமுள்ள 37 ஆசனங்களில், போனஸ் ஆசனங்கள் 2 ஐக் கழித்துப் பார்த்தால், தேர்தல் மூலம் பெறப்பட்ட 35 ஆசனங்களில் 10 ஆசனங்களே தேசியக் கட்சிகளுக்கு (சுதந்திரக் கட்சி + ஐ.தே.க.) கிடைத்துள்ளன. இது மாகாண சபை ஆசனங்களில் ஏறத்தாழ 30 வீதமாகும்.
ஏறத்தாழ 70 வீதமான ஆசனங்களை, பிராந்திய அல்லது சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளே பெற்றிருந்தன. இதில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி திருமலையில் பெற்ற ஒரு ஆசனத்தைக் கழித்துப் பார்த்தால் 35 ஆசனங்களில் 24 ஆசனங்களை பிராந்திய அல்லது சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளே பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ரீதியாக அடையாளப்படுத்தினால் 15 முஸ்லிம்களும் 12 தமிழர்களும் 8 சிங்களவர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐ.தே.க. சார்பாக ஒரு முஸ்லிமும், சுதந்திரக் கட்சி சார்பாக ஒரு முஸ்லிமும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ளனர். இவ்விரு கட்சிகள் சார்பாகவும் எந்தவொரு தமிழரும் அங்கத்தவராகத் தெரிவுசெய்யப்படவில்லை.
அரச தரப்பில் கூட்டணி அமைத்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஒரு ஆசனத்தைப் பெற்றிருந்தது. மீதமாகவுள்ள 11 தமிழர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டணியாகும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அல்லாத பலர் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எல்லாத் தரப்பிலும் முஸ்லிம் அங்கத்தவர்கள் தெரிவாகியுள்ளமை சுவாரஸ்யமான விடயமாகும். மு.கா. சார்பாக 7 அங்கத்தவர்களும், தேசிய காங்கிரஸ் சார்பாக 3 அங்கத்தவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக 3 அங்கத்தவர்களும் ஐ.தே.க. சார்பாக ஒருவரும், சுதந்திரக் கட்சி சார்பாக ஒருவரும் இவ்வாறு தெரிவாகியுள்ளனர். மு.கா.வும் அதிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகளும் சேர்ந்து 13 அங்கத்தவர்களைப் பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது.
கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள், பல்லினத் தன்மையை துலாம்பரமாக எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளதோடு, இனப் பிளவை ஆழமாக வெளிப்படுத்தியுமுள்ளன. எந்தக் கட்சியும், எந்த இனமும் தனித்து செயல்பட முடியாத, பரஸ்பரம் இன்னொன்றில் தங்கி நின்று முடிவை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகியுள்ளது. இது முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுதான்.
கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளனர் என்பதை உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகியுள்ள புதிய தொகை மதிப்பு புள்ளிவிபரங்கள் உறுதிப் படுத்தியுள்ளன. கடந்த காலங்களில் கிழக்கில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தனர்.
சனத்தொகை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை இத்தேர்தல் முடிவுகள் நன்கு பிரதிபலிக்கின்றன. இலங்கையில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கான அதிக சாத்தியமுள்ள ஒரே மாகாணமாக கிழக்கே உள்ளது. இந்த வகையில் இம்முறை எப்பாடுபட்டேனும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எதிர்பார்ப்பும் மிகைத்திருந்தன.
பிராந்திய, சர்வதேச அழுத்தங்கள் கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கான சாத்தியப்பாடுகளை மட்டுப்படுத்தியிருந்தன. எனினும், இறுதி நேரத்தில் மு.கா. ஆளும் கூட்டணியிலிருந்து பிரிந்து, தேர்தலை எதிர் கொண்டதன் மூலம் சில புதிய அழுத்தங்கள் உருவாகின. அதன் விளைவாக, அரச தரப்பிலிருந்து முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், நடப்பிலுள்ள மாகாண சபை முறையில் முதலமைச்சர் என்பது ஒரு அலங்காரப் பதவியாகவே உள்ளது.  முதலமைச்சர், மாகாண ஆளுனரின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் ஒருவராகவே நடைமுறையில் உள்ளார். மாகாண சபைகளுக்குப் போதிய அதிகாரங்கள் இல்லை. 13 ஆம் திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அதிகாரங்களையும் (குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களை) இல்லாமல் செய்வதற்கான முனைப்புகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
போதிய நிதி அதிகாரமோ அரசியல் அதிகாரமோ இல்லாத இந்த மாகாண சபையில், முதலமைச்சரோ அமைச்சர்களோ எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி பரவலாக உள்ளது. இந்த வகையில்தான் மேலெழுந்தவாரியாக அதிக கவனம் கொடுக்கப்பட்ட இந்த விவகாரங்கள், நடை முறையில் எவ்வித பெறுமானமும் அற்றதாக உள்ளன.
குறியீட்டு ரீதியாக முஸ்லிம்களது அரசியல் வலுவை இது மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. தேர்தல் முடிவுகள் எல்லாத் தரப்பினரும் மு.கா.வை திருப்திப்படுத்த வேண்டிய அரசியல் சூழலை ஏற்படுத்தியது. மு.கா.வும் தான் திருப்திப்பட்டுக் கொள்ளும் வகையில் பல கோரிக்கைகளை முன்வைத் திருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
கட்சிகளும் தனிநபர்களும் திருப்திப்படுவது எந்த வகையில்? தமது தனிப்பட்ட விருப்பு- வெறுப்புகள், ஆசா பாசங்களுக்குள் இவர்கள் அமுங்கிவிட்டனர். தேர்தல் களத்தில் அனல் பறக்க எழுப்பப்பட்ட விடயங்கள், தேர்தலுக்குப் பிந்திய பேரம் பேசலில் மருந்துக்கும் இல்லை. தேர்தலுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மத சுதந்திரம், கலாச்சார உரிமை என்ற பதங்களுக்குப் பதிலாக தேர்தலுக்குப் பின்னர் அமைச்சுக்கள், தூதுவர்கள் என்ற சொற்களே அதிகம் பேசப்பட்டன.
பேரம் பேசும் அரசியல் இன்று பொது நலன்களுக்குப் பயன்படாமல், சுயநலத் தேவைகளுக்கே  இரையாகியுள்ளது. மு.கா.வுக்குக் கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்ற மனநிலை பரவலாக உள்ளது.
கடந்த கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பே அதிகாரத்தைக் கொண்டிருந்தது. எனினும், அதில் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவமே தூக்கலாக இருந்தது. ஏனைய மாகாண சபைகளில் சாதிக்க முடிந்த விடயங்கள் சிலவற்றை இங்கு அரசால் சாதிக்க முடியாமல் போனது. இதற்கு நாடு, நகர சட்டமூலம் நல்ல சான்றாகும். முன்னைய முதலமைச்சர் அரச கூட்டணியில் அங்கம் வகித்தாலும், சுதந்திரக் கட்சியை சேர்ந்தவரல்ல. இதுவும் அவ்வப்போது அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தது.
இம்முறை சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரே முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது அரசின் ரிமோட் கொன்றோலால் இயக்கப்படும் பொம்மை முதலமைச்சரை உருவாக்கவே வழிவகுக்கும். ஏனைய மாகாணங்களில் இதுவே இடம்பெறுகிறது. எனினும், பெருந்தொகையான சிறுபான்மை சமூகப் பிரதி நிதிகள் அங்கம் வகிப்பது ஓரளவுக்கு இந்த அரசியல் இறுக்கங்களில் தளர்வுகளைக் கொண்டு வரலாம்.
கிழக்கு மாகாண சபையின் அரசியல் நகர்வுகள், எப்போதும் இயல்பாகவே நகரும் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக வெவ்வேறு சமூகங்களிலிருந்து வரும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய தவிர்க்க இயலாத நிலமை அதற்குள்ளது. ஒருவகையில் இலங்கையின் வேறு எந்த மாகாணங்களிலும் காணமுடியாத பல திருப்பங்களை, இது சந்திக்கக் கூடும். ஒருதலைப்பட்சமான அரசியல் முடிவுகளைத் திணிக்க முயலும் எவரும், பலமுனை நெருக்கடிகளை எதிர்கொள்ளவே செய்வர்.
கிழக்கு மாகாணத்தின் உள்ளக சமூக கட்டமைப்பே தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்திருக்கிறது. தேசிய அரசியல் கட்சிகள் இங்கு பலவீனப்பட்டுள்ளன. சமூகம் சார்ந்த பிராந்திய அரசியல் கட்சிகளே செல்வாக்குப் பெற்றுள்ளன.
மாகாண சபைகளுக்கு அரசியல் அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்பதற்கான சோதனைக் களமாக கிழக்கு மாகாண சபை நிச்சயம் இருக்கும். அத்துடன் பல்லின சமூக சூழலில், அதிகாரப் பகிர்வுக்கான நடைமுறைச் சாத்தியம், சாத்திமின்மை குறித்த பரிசோதனை முயற்சியாகவும் இது இருக்கக் கூடும்.
இதற்கு சாதகமான பதில்கள் கிடைக்கும் என்ற பெரிய எதிர் பார்ப்புகள் இல்லை. மெல்லச் சாகும் இனி… என்பதே யதார்த்தம்போல் தெரிகிறது.

No comments:

Post a Comment