Search This Blog

Pages

Tuesday, September 18, 2012

முதலமைச்சர் பதவி சுழற்சிமுறையில் மத்திய அரசில் அமைச்சு பதவிகளை கோரவில்லை: ஹக்கீம்


Sri-Lankan-Minister-of-Justice-Rauff-Hakeem-speaks-during-a-press-conference-in-Colombo-on-April-30-2012-PHOTO-AFP
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய அரசில் எந்த அமைச்சு பதவிகளையும் கோரவில்லை அது மட்டுமன்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியானது சுழற்சிமுறையில் வகிக்கப்படவுள்ளது.இதற்கமைய, இரண்டரை வருடங்களின் பின்னர் இப்பதவி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் அமைச்சு பதவிகள் கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானது என அவர் குறிப்பிட்டார்.
‘முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக அரசாங்கத்திலிருந்து கொண்டு குரல் கொடுப்போம். தற்போதைய சூழலில் முஸ்லிம் சமூகத்திற்கு நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் மிக விரைவில் அமுல்படுத்தப்படும்’ என அவர் தெரிவித்தார்.
‘அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழ்இ முஸ்லிம் மற்றும் சிங்கள ஆகிய மக்களிற்கு சிறந்த சேவையை ஆற்றுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாடுபடும். இதனால் எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாமல் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்’ என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது எனவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு அமைச்சு பதவிகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அமைச்சு பதவி கிடைக்காமல் விடுபடும் மூன்றாவது மாவட்டத்திற்கு தேவையான அரசியல் அந்தஸ்து கட்சியினால் பலப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த இரண்டு அமைச்சு பதவிகளும் கட்சியின் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
எனினும்இ எந்த அமைச்சு பதவியை பெறுவது மற்றும் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரைவில் தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
‘கிழக்கு மாகாண ஆட்சியை அமைத்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தினோம். இதன் பின்னரே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது’ என அவர் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றமடைந்திருக்கலாம். எனினும் எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சினேகபூர்வமாக செயற்படும் என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment