Search This Blog

Pages

Wednesday, September 26, 2012

பரவும் புதிய வகை சுவாசநோய் : சார்ஸ் வைரஸை ஒத்தது


new sars_virus
2003-இல் உலகின் பலபாகங்களிலும் பரவி நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்படக் காரணமான சார்ஸ் வைரஸ் நோயை ஒத்த புதிய சுவாசநோய் ஒன்றை பிரிட்டனில் சிகிச்சையளிக்கப்படும் நபர் ஒருவரிடமிருந்து மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கட்டாரிலிருந்து விமான-ஆம்பியூலன்ஸ் மூலம் லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்ட 49 வயது ஆண் ஒருவரிடம் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இதேவிதமான சுவாசத்தைப் பாதிக்கின்ற வைரஸொன்று சவூதி அரேபியாவில் உள்ள ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டது, அதன்பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த புதிய வைரஸால் என்ன வகையான ஆபத்து உண்டாகலாம் என்று நிபுணர்கள் ஆராய்ந்துவருகிறார்கள்.
இந்த தகவலின் பின்னர், உலக சுகாதார ஸ்தாபனமும் இதுவரை எந்தவிதமான வெளிநாட்டுப் பயணக் கட்டுப்பாட்டுகளையும் விதிக்கவில்லை.
இதேவேளை, உலகில் 2 பேரிடம் இந்த வைரஸ் இதுவரை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தில் சுவாசநோய்கள் சம்பந்தப்பட்ட பிரிவுக்குத் தலைவராக உள்ள பேராசிரியர் ஜோன் வொட்சன் கூறினார்.
சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்காக இந்த நோய் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த வைரஸ் ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றுவதற்கான குறிப்பான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்களுக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இப்போதைக்கும் எவ்விதமான ஆலோசனைகளும் கூறுவதற்கில்லை என்றும் பேராசிரியர் ஜோன் வொட்சன் மேலும் சுட்டிக்காட்டினார்.
இப்போதைக்கு இந்த புதிய வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக கவலைப்படத் தேவையில்லை என்றும் மிக சாதூரியமான தொழிநுட்ப சோதனை முறையைக் கொண்டுதான் அந்த வைரஸ் கூட கண்டறியப்பட்டிருக்கலாம் என்றும் லண்டன் இம்பிரியல் கல்லூரியின் சுவாசத் தொற்று ஆய்வுமையத்தின் இயக்குநர் பீட்டர் ஓப்பன்சோவ் தெரிவித்தார்.
பொதுவாக சுவாசப் பாதையை தாக்கி, சாதாரண தடிமனையும் சார்ஸ் எனப்படுகின்ற கடுமையான திடீர் சுவாசநோயையும் ஏற்படுத்துகின்ற ஒருவகை வைரஸை உள்ளடக்கிய பெரிய வைரஸ் குடும்பத்தைகொரோனாவைரஸ் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
இப்படியாக இதற்கு முன்னர் மனிதர்களிடத்தில் கண்டறியப்பட்டுள்ள வைரஸுகளிலும் பார்க்க இந்த புதிய வைரஸ் வித்தியாசப்படுகின்றமை தான் நிபுணர்களின் இந்தளவு கரிசனைக்கு காரணம்.
மத்தியகிழக்கைப் பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களில் வேறுவகையான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பதிக்கப்பட்ட சிலரும் சிகிச்சைப் பெற்றிருக்கிறார்கள்.
அப்படியான ஒருவர் லண்டனில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில் உயிரிழந்தார்.
அவருக்கு ஏற்பட்ட நோய் பற்றியும் இப்போது ஆராயப்பட்டுவருகிறது. அவரது நோய்க்கும் இப்போது லண்டனில் இருக்கும் கட்டார் வாசியை தாக்கிய வைரஸுக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா என்றும் தேடப்படுகிறது.
பிரிட்டனில் அதுதவிர வேறு எந்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளும் இதுவரை கவனத்துக்குவரவில்லை.
2002-இல் மனிதர்களின் சுவாசத் தொகுதியை கடுமையாக தாக்கிய சார்ஸ் வைரஸ் உலகம் முழுவதும் பரவி மரணபயத்தை உண்டுபண்ணியது.
ஹாங்காங்கிலிருந்து 30க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி கிட்டத்தட்ட 800 பேரைக்கொன்ற இந்தநோய் முழுமையாக ஒழிக்கப்படாவிட்டாலும் அது பரவுவது 2003-இல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.
சுவாசத்தொகுதியை தாக்குகின்ற மற்ற வைரஸுகளைப் போலவே இந்த சார்ஸ் தொற்றும் மனிதர்களின் உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் மூலமே, குறிப்பாக தும்மல் மற்றும் இருமல் மூலமே மற்றவர்களுக்குத் தொற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment