ஈரானின் அணுச் செறிவாக்கல் நிலையங்கள், முக்கிய அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் இணையக் கட்டமைப்புகள் மற்றும் கணனிகள் அடிக்கடி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றமை நாம் அறிந்த விடயமே.
இத்தாக்குதல்களின் போது அதன் முக்கிய இராணுவ மற்றும் இராஜதந்திர தகவல்கள் இணையம் மூலமாகத் திருடப்பட்டன.
குறிப்பாக ஸ்டக்ஸ்நெட் மற்றும் பிளேம் என்றறியப்பட்ட வைரஸ்கள் ஈரானுக்கு பெரும் தலையிடியாக மாறின. இவ் வைரஸ்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலினாலேயே உருவாக்கப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்றது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையமூடான தாக்குதலைக் கருத்தில் கொண்டு நாட்டின் முக்கியமான அமைச்சரவை மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான உலகளாவிய இணையத்தொடர்பை நிறுத்துவதென முடிவு செய்தது.
உலகளாவிய இணையத்துக்குப் பதிலாக தமது நாட்டிற்கென பிரத்தியேகமாக உள்வலையமைப்புகளை (intranet) உருவாக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டது.
தற்போது ஈரானின் உள்வலையமைப்புகளை உருவாக்கும் பணியானது நிறைவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தற்போது அவ் இணையமானது செயற்படத்தொடங்கியுள்ளதாகவும், அது வெற்றிகரமாக செயற்பட்டுவருவதாகவும் அமெரிக்க பல்கலைக்கழகமொன்று மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
ஈரானின் கருத்துச் சுதந்திரத்துக்குத் தடையேற்படுத்தும் நோக்கத்துடனேயே இதனை மேற்கொண்டுள்ளதாக சமூக அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரானில் பேஸ்புக் மற்றும் யூடியூப் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது ஜீமெயிலையும் ஈரான் தடைசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment