முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்பட முன்னோட்டத்தை அகற்றுமாறு யூடியுப் இணையத்தளத்திற்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
ஏற்கனவே வெள்ளை மாளிகை விடுத்த கோரிக்கையை யூடியுப் இணையத்தளத்தின் உரிமை நிறுவனமான கூகிள் நிராகரித்த நிலையில் பல நாடுகளிலும் அந்த இணையத்தளம் முடக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த திரைப்படத்தை அகற்றாத பட்சத்தில் யூடியுப் இணையத் தளம் முழுமையாக முடக்கப்படும் என சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. இந்த திரைப்படத்தை அகற்றுமாறு சவூதி மன்னர் அப்துல்லா கூகிள் நிறுவனத்திடம் கோரியுள்ளார். கூகிள் அதனை செய்ய தவறினால் யூடியுப் இணையத்தளம் சவூதியில் முழுமையாக முடக்கப்படும் என சவூதியின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய அரசும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை அகற்றுமாறு யூடியுபிடம் கோரியுள்ளது. இந்த திரைப்படம் தீவிரவாத போக்குடையதா என்பது குறித்து ரஷ்யா நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது. அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் ரஷ்யாவில் யூடியுப் இணையதளம் முழுமையாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே யூடியுப் இணையத்தளம் சூடான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் முடக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், யெமன் ஆகிய நாடுகளில் இந்த திரைப்படம் இணைக்கப்பட்டுள்ள அனைத்து இணையத்தளங்களையும் முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மலேஷியா, இந்தோனேஷியா, லிபியா, எகிப்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த திரைப்படத்தை யூடியுப் இணையத்தளமே முடக்கியுள்ளது.
எனினும் சர்ச்சைக்குரிய திரைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பது நிறுவன கொள்கைக்கு இணங்கியதாக உள்ளதாகக் கூறியே யூடியுப் அதனை அகற்ற மறுத்து வருகிறது.
No comments:
Post a Comment