ஐ.நா., பொது சபையில் துவக்க நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக எழுந்த புரட்சி, அரசை மாற்றச் செய்தது. இது எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் தான், எகிப்தில் நடந்த புரட்சியை ஆதரித்தோம். இதேபோல், ஏமன், லிபியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்களை ஆதரித்தோம்.
சர்வாதிகாரியை விட மக்கள் வலிமையானவர்கள். எனவே தான், சிரியாவிலும், அதிபர் ஆசாத்தை பதவி விலக வற்புறுத்துகிறோம். இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட வீடியோ படம், பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் முஸ்லிம்களை மட்டுமல்ல, அமெரிக்காவையும் அவமானப்படுத்தியுள்ளது.
எனவே, இந்த வீடியோ வெளியானதில், அமெரிக்காவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. மத சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் தனி மனித சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டமும், எங்களிடம் உள்ளது. இதனால் தான், இந்த வீடியோவை எங்களால் தடை செய்ய முடியவில்லை. இந்த வீடியோவை கண்டித்து, அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டது, பொது சொத்துகளை சேதப்படுத்தியது போன்ற செயல்களை நியாயப்படுத்த முடியாது. அமெரிக்கக் கொடிகளை கொளுத்துவதால், குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஏற்படுத்தி விட முடியாது. ஓட்டல்களை தாக்குவதால், வயிறு நிரம்பி விடாது. தூதரகங்களை அடித்து நொறுக்குவதால், வேலை வாய்ப்பு உருவாகி விடாது. எனவே, மனித உரிமைகளை பாதுகாப்பதில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள் தான். இதனால், மக்களின் வாழ்க்கைத்தரம் வளர்ச்சியடையாமல் உள்ளது. “சகிப்பின்மை கூட ஒரு வகையில் பயங்கரவாதம் தான். இது ஜனநாயகத்துக்கு தடையானது’ என, காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் நாடு பொறுப்பற்ற, வன்முறைக் கொள்கைகளை கடைபிடிக்கிறது. பழம்பெருமை வாய்ந்த ஈரான் நாட்டு மக்கள், அண்டை நாடுகளை போல அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர். அணுசக்தியை, அமைதி பணிக்கு பயன்படுத்தும் நாடுகளை மதிக்கிறோம். ஈரான் நாடு அணு ஆயுதத்தை தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனால், வளைகுடா பகுதியில் அணு ஆயுத போட்டி ஏற்படும். இந்தியா உள்ளிட்ட ஒவ்வொரு நாடும், கடின பாதையை கடந்து வந்துள்ளன. எனவே, அனைத்து நாட்டு மக்களின் உரிமைகளை மதிக்கிறோம். இவ்வாறு ஒபாமா பேசினார்.
No comments:
Post a Comment