அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் புதிய இடமல்ல. பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு தெரியாத சந்து பொந்தெல்லாம் சி.ஐ.ஏ.வுக்கு தெரியும் என்பார்கள். அது ஓரளவு நிஜம்தான். சந்து பொந்து மாத்திரமல்ல அங்குள்ள சின்ன சின்ன நடமாட்டங்கள், செயற்பாடுகள் கூட தெரியும்.
காரணம், அமெரிக்காவுக்கு எதிரான செயல்பாடுகளில் குறிப்பிட்ட சதவீதம் பாகிஸ்தானுக்குள் வைத்தே திட்டமிடப்படுகின்றன என்ற விஷயம், சி.ஐ.ஏ.வுக்கு தெரியும்.
இதனால், சி.ஐ.ஏ.வின் ஆட்கள் ஏதோ வானத்திலிருந்து பூமிக்கு வந்தவர்கள் என்பதல்ல. சரியான டெக்னாலஜியை, சரியான இடத்தில் உபயோகிக்கிறார்கள். அவ்வளவு தான் விவகாரம்.
இன்றைய தேதியில், சி.ஐ.ஏ.வால் பாகிஸ்தான் முழுவதும் சாமர்த்தியமாக பின்னப்பட்டிருக்கும் உளவு வலைப் பின்னலின் முக்கிய பொருள் என்ன தெரியுமா? வேறு என்ன – செல்போன்தான்.
சி.ஐ.ஏ. தற்போது பாகிஸ்தானில் உளவு விமான தாக்குதல்களை நடத்துகிறது அல்லவா? தீவிரவாத அமைப்பு தளபதிகளை குறிவைத்து உளவு விமானத்தில் இருந்து அடித்து வீழ்த்துகிறார்கள் அல்லவா? அதற்கு குறிப்பிட்ட தளபதி எங்கே உள்ளார் என்ற உளவுத் தகவல் திரட்டப்பட வேண்டும் அல்லவா?
அந்த உளவு பார்த்தலில் செல்போனுக்கு இருக்கும் செல்வாக்கே தனி.
என்ன செல்வாக்கு? “நாலு பேரை உளவு பார்த்து, கிடைத்த தகவல்களை செல்போன் மூலமாக மேலதிகாரிக்கு தெரிவிப்பது” என்று நினைத்தீர்கள் என்றால், உங்கள் நினைப்புக்கு பாஸ் மார்க் கூட கிடைக்காது. இது வேறு விவகாரம் – செல்போன்களின் சிக்னல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட நபரின் இருப்பிடத்தை கண்டு பிடிப்பது. அத்துடன் அதே தொழில் நுட்பத்தை வைத்து ஆளை அழிப்பது.
அமெரிக்கா இந்தத் தொழில் நுட்பத்தைப் பல நாடுகளில் – தங்கள் சொந்த நாடு உட்பட – பயன்படுத்துகிறது என்றாலும் முழு வீச்சுடன் பயன்படுத்தும் இடம், தற்போது பாகிஸ்தான்.
இதற்கு இரண்டு வசதியான காரணங்கள்.
முதலாவது, பாகிஸ்தானில் செல்போன் இணைப்பு வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குள் சி.ஐ.ஏ.-வால் ஊடுருவ முடியும்.
பாகிஸ்தான் போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்குள் செல்போன்கள் பிரபல்யமானபோது, பெரிய எழுச்சி ஏற்பட்டது. திடீர் வளர்ச்சிக்கு உபயோகிக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை அமெரிக்க தொழில்நுட்பங்கள். அந்த அமெரிக்க தொழில்நுட்பத்தை கொடுக்கும்போதே, சில ட்ரேசிங் எலிமென்ட்ஸ் அதனுடன் ஒட்டி வரும்.
வேண்டுமானால், அதை இப்படி சொல்லலாம். பாகிஸ்தானில் செல்போன் இணைப்பு வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களான Mobilink, Telenor, Ufone, Zong (முன்னாள் Paktel), மற்றும் Warid ஆகிய நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர் தகவல்களை சி.ஐ.ஏ.வால் ஏதோ ஒரு வகையில் பெற முடியும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
அமெரிக்க படைகள் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் செய்ய தொடங்கும் முன்னரே ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து விட்டன. இருந்த போதிலும் பின்லேடன் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது அமெரிக்கர்களிடம் அகப்படவில்லை.
என்ன காரணம்?
அமெரிக்கத் தரப்பிடம் வந்து சேர்ந்த உளவுத் தகவல்கள் போதுமானதாக இருக்கவில்லை. அதற்கு பல காரணங்களுண்டு. அவற்றில் முக்கியமானது – சி.ஐ.ஏ.வுக்கு தற்போது பாகிஸ்தானில் கிடைத்திருக்கும் செல்போன் ட்ராக்கிங் வசதி அல்லது தொழில்நுட்பம் இவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த காலத்தில் இருக்கவில்லை.
அப்போதிருந்த தொழில்நுட்பம் வேறு, இப்போது இருப்பது அதைவிட துல்லியமானது.
ஈராக்கை எடுத்துக் கொண்டால், சதாம் கைது செய்யப்படும் முன்னர் சதாமின் முக்கிய சகாக்கள், குடும்பத்தினர் என்று பலரது நகர்வுகளை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்தது அவர்கள் உபயோகித்த செல்போன்கள் தான். அதன் மூலம் சிலர் இருக்கும் இடத்தை சர்வ சாதாரணமாக கண்டுபிடித்து கைது செய்தது அமெரிக்க ராணுவம். வேறு சிலரை கண்டும் காணாமலும் விட்டனர் – அவர்கள் வேறு எங்கெல்லாம் நகர்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு!
ஆப்கானிஸ்தானில் இது வேலை செய்யவில்லை.
பின்லேடனுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்கள் என்று இவர்கள் தெரிந்து வைத்திருந்த இலக்கங்கள் பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தன என்று சர்வதேச உளவு வட்டாரத்தில் கூறப்பட்டது. சரி. இலக்கங்கள் தெரிந்திருந்தும் ஏன் பின்லேடனை ஆப்கானிஸ்தானுக்குள் மடக்க முடிந்திருக்கவில்லை?
அந்த நாட்களில் ஆப்கானிஸ்தானிலிருந்த சூழ்நிலை இப்போது பாகிஸ்தானில் இருப்பது போலவும் இருக்கவில்லை. இப்போது இவர்கள் கையில் இருக்கும் தொழில்நுட்பமும், அப்போது இருக்கவில்லை. பின்லேடனும் ஆப்கானிஸ்தானில் இவர்களிடம் அகப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் பின்லேடனை கொல்லும் முயற்சியில், தொழில்நுட்பத்தால் தோற்ற அமெரிக்கா, பின்நாட்களில் பாகிஸ்தானில் அதே பின்லேடனை கொன்றது, தொழில்நுட்பத்தால்தான்.
No comments:
Post a Comment