அமெரிக்க உளவு விமானங்கள் பென்காசி நகருக்கு மேலாக பறக்க தொடங்கியுள்ளதை அடுத்து, லிபியா தனது வான் பரப்பை மூடியுள்ளது. பென்காசி நகருக்கு மேல் வர்த்தக விமானங்கள் ஏதும் பறப்பதற்கு தடை விதித்துள்ளது. பென்காசி விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவு விமானங்கள் பென்காசி நகருக்கு மேலாக பறப்பது, அங்குள்ள மக்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக லிபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க உளவு விமானங்கள், அமெரிக்க தூதரகத்தை தாக்கியவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கின்றனவா, அல்லது, அவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்க தயாராகின்றனவா என்பது தெரியவில்லை.
அதேநேரத்தில், பென்காசி பகுதியில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாத அமைப்பினர், எந்த நிமிடத்திலும், அமெரிக்க உளவு விமானத்தை நோக்கி விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அப்படியொரு நிலைமை ஏற்பட்டு, அமெரிக்க விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டால், அதன்பின் நடப்பவை ‘விரும்பத் தகாத விதத்தில் இருக்கும் என்பதை லிபிய அரசு உணர்ந்துள்ளது.
பென்காசிக்கு மேலுள்ள வான்பரப்பை லிபிய அரசு மூடியதன் காரணமே, தரையில் இருந்து அமெரிக்க உளவு விமானங்களை நோக்கி குறிவைக்கப்படும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஏதும், வர்த்தக விமானங்களை வீழ்த்திவிடக் கூடாது என்பதற்காகதான்.
இதிலிருந்து, விமான எதிர்ப்பு பீரங்கிகள் வெடிக்கலாம் என்று லிபிய அரசு எதிர்பார்க்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். நிலைமை இறுக்கமாகவே உள்ளது!
No comments:
Post a Comment