ஹஜ் செய்வதற்கு சென்ற சுமார் 400 நைஜீரிய பெண்களை சவூதி நிர்வாகம் தடுத்து வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை ஜித்தா நகரை சென்றடைந்த ஹாஜிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நெருங்கிய ஆண் துணை (மஹ்ரம்) இன்றி ஹஜ் கடமைக்கு வந்த 398 நைஜீரிய நாட்டு பெண்கள் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் நைஜீரியாவுக்கு நாடு கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுத்து வைக்கப்படவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படுவதாக நைஜீரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் பயணத்திற்கு முன்னர் இது தொடர்பில் அறிவிக்காத நிலையில் இவ்வாறு பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு நைஜீரிய ஹஜ் குழுவுக்கான தலைவர் முஹம்ம சாத் கண்டனம் வெளியிட்டுள்ளார். “ஹஜ் குழுவின் தலைவர் என்ற வகையில் சவூதி எம்மிடமான பேச்சுவார்த்தையின் போது இது குறித்து எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இது எமக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.
இதேவேளை புனித ஹஜ் கட மைகளை நிறைவேற் றுவதற்காக செல்லும் இலங்கை ஹாஜிகளின் குழுவின் முதல் விமானம் இன்று புதன்கிழமை (26) இங்கிருந்து புறப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார்.
சுமார் 200 இற்கும் மேற்பட்ட ஹஜ்ஜாஜிகள் சவுதியா எஸ்.வி. 789 என்ற விமானத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு கொழும்பிலிருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தை நோக்கி சென்றடையவுள்ளனர்.
இலங்கைக்கென நிர்ணயிக்கப்பட்ட கோட்டா அடிப்படையிலேயே இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும், இதற்கமைய இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 2800 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏனைய ஹாஜிகள் தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் மக்கா செல்லவுள்ளனர். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் வரை இலங்கையிலிருந்து ஹாஜிகளை ஏற்றிச் செல்லும் விமான சேவைகள் இடம்பெறுமெனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment