ஓய்வு வழங்கப்பட்ட எகிப்து இராணுவ கவுன்சில் தலைவர் பீல்ட் மார்ஷல் ஹுஸைன் தன்தாவி மற்றும் இராணுவ துணைத் தளபதி சமி அனான் மீது 30 குற்றச்சாட்டு மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு இடம் பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஒடுக்க முற்பட்டதாகவே இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.
இதில் அனான் தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் முதல் ஈட்டி கட்டிடம் ஒன்றை வாங்கி இருப்பதாகவும் மேலதிகமாக குற்றச்சாட்டொன்று சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு மனுக்களை அரச வழக்கறிஞர் அப்துல் மெகைட் மஹ்மூத், இராணுவ சட்டநடவடிக்கை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அந்த அலுவலகம் தீர்மானிக்க வுள்ளது.
இதன்படி இந்த மனுக்கள் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் எகிப்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்குப் பின்னர் முதல்முறையாக சக்திவாய்ந்த இராணுவ கெளன்ஸில் உறுப்பினர்கள் மீது விசாரணை நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தன்தாவி, ஹொஸ்னி முபாரக் அரசில் இரண்டு தசாப்தங்களாக பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டதோடு முபாரக் அரசு கவிழ்ந்த பின் இடைக்கால அரசை முன்னெடுத்த இராணுவ கவுன்ஸிலின் தலைவராகவும் செயற்பட்டார்.
இதேபோன்று அனான் ஆயுதப் படைகளின் முன்னாள் பிரதான அதிகாரியாக செயற்பட்டதோடு 20 ஜெனரல்களை கொண்ட இராணுவ கவுன்சிலில் தன்தாவிக்கு அடுத்தவராகவும் இருந்தார். எனினும் எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி மொஹமட் முர்சி மேற்படி இருவருக்கும் ஓய்வு வழங்கினார்.
No comments:
Post a Comment