Search This Blog

Pages

Wednesday, September 12, 2012

மீண்டுமொரு வரலாற்றுத் தவறை முஸ்லிம் காங்கிரஸ் செய்துவிடக் கூடாது!


pmgg
முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மத(மார்க்க)ரீதியான அச்சுறுத்தல்கள்,அரசாங்கத்தின் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள்,முஸ்லிம்களின் அரசியல் பலத்தை கிழக்கில் படிப்படியாகக் குறைத்து அம்மாகாண வளங்களைச் சுரண்டுவதற்காக மேற்கொள்ளப்படும் அரச உதவியுடனான சிங்களக் குடியேற்றங்கள், யுத்த முடிவின் பின்னர் மீள்குடியேற்ற புனர்வாழ்வு விடயங்களில் முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகின்றமை, அவசியமில்லாத இராணுவப் பிரசன்னங்களும் கெடுபிடிகளும், முஸ்லிம்களின் தனித்துவக் கலாசாரப் பண்புகளை சிதைக்கின்ற வகையான நடவடிக்கைகள், முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார நடவடிக்கைகளை நசுக்குகின்ற இனவாதிகளின் நடவடிக்கைகளையும் அதனைக் கண்டு கொள்ளாதிருக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடும் போன்ற பாரதூரமான, நியாயமான காரணங்களுக்காகவே இத்தேர்தலில் முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை நிராகரித்திருக்கின்றனர்.
ஆகவே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவினை அரசாங்கத்துக்கு வழங்குவதாக இருந்தால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உத்தரவாதப்படுத்துவதன் அடிப்படையில் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்க வேண்டும். என்று  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அந்த அறிக்கையை இங்கு தறுகிறோம் :
முஸ்லிம்களுக்காகப் பேச வேண்டிய தருணத்தில் அவர்களைக் கைவிட்டு விடுகின்ற மற்றுமொரு வரலாற்றுத் தவறை முஸ்லிம் காங்கிரஸ் செய்துவிடக் கூடாது!
PMGG ஊடகப் பிரிவு: கிழக்கு மாகாணத்திலும் நாமே ஆட்சியமைப்போம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடித்துச் சொல்லியிருப்பதில் இருந்து, ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் ஆதரவு அரசாங்கத்திற்கே கிடைக்கும் என்பது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
கடந்த 08ம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ.ல.மு.காங்கிரஸானது அரசாங்கத்தின் காட்டமான விமர்சனங்களுக்கு மத்தியிலும், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட சக முஸ்லிம் கட்சித் தலைவர்களின் அடாவடித்தனங்கள் மற்றும் அவதூறுகளுக்கு மத்தியிலும் தாக்குப் பிடித்து கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைப் பெருவாரியாகப் பெற்று ஈற்றில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக மாறியுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீ.ல.மு.காவை தம்முடன் இணைந்து மாகாண அரசை ஸ்தாபிக்க முன்வருமாறு அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பரஸ்பரம் அழைப்பு விடுத்து வருகின்றனர். அத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மு.கா.வுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இது, மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மு.காவுக்கு கிடைத்திருக்கும் அரியதொரு பேரம் பேசும் வலுவாகும். இதனை மு.கா. தலைமையும் அதன் அரசியல் அதியுயர்பீடமும் எவ்வாறு கையாண்டு முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தையும், உரிமைகளையும் இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டும் என்பதில் அனைத்துத் தரப்பினருமே அக்கறை கொண்டிருக்கின்றனர்.ஸ்ரீ.ல.மு.கா. 2008ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல், பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், 2010ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் போன்ற தேர்தல்களில் எல்லாம் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. அப்போதெல்லாம் அக்கட்சிக்கு இத்தகைய ஒரு பேரம் பேசும் வலு கிடைத்திருக்கவில்லை.
அரசாங்கம் 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்ற முயன்றபோது அதற்கு ஸ்ரீ.ல.மு.கா.வின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது அரசாங்கத்துடன் பேரம் பேசி முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் நம் நாட்டின் ஏனைய பொதுப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான முதலாவது சந்தர்ப்பம் மு.கா.வுக்கு கிடைத்திருந்தது.ஆயினும், மு.கா. தலைமை முஸ்லிம் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டு முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி அரசுடன் பேசித் தீர்வினைப் பெற முயற்சிக்காமல் கட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி 18வது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்ற வழி வகுத்தார்.
இத்திருத்தச் சட்டமூலம் நிறைவேறியதன் மூலம் இந்நாட்டில் நல்லாட்சி நிர்வாகத்திற்காக எஞ்சியிருந்த ஒரு சில அத்திவாரங்களும் இல்லாமலானது. மாத்திரமின்றி அந்த 18வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் கிடைத்திருக்கும் மிதமிஞ்சிய அதிகாரமே நம் சமூகம் எதிர்கொள்கின்ற பல்வறு பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் அடிப்படைக் காரணமாக மாறியிருக்கின்றன.
இம்முறை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட வேளை அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற முறையில் ஆதரவு வழங்கி அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டிருந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுக்கு அரசாங்கத்துடன் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகள்
குறித்து பேரம் பேசுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தது.
ஆயினும் அதுபற்றியெல்லாம் அரசாங்கத்துடன் பேசாமல் வெறுமனே தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீடுகள் குறித்தே மு.கா. அரச தரப்புடன் இறுதி நேரம் வரை பேசியது. இறுதியில் அம்பாறை மாவட்டத்தில் தாம் எதிர்பார்த்த ஆசன ஒதுக்கீடு கிடைக்காது போனதால் இத்தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிட்டது. இவ்வாறு மு.கா. தனித்துப் போட்டியிட்ட போதிலும் தமது கட்சி அரசாங்கத்திற்கு விசுவாசமாகவே செயற்படும் என்று மு.கா. தலைவர் தெளிவாகக் கூறியிருந்தார். அரசாங்கமும் அவ்வாறே மு.கா. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்று கூறி வந்தது.
என்றாலும் தேர்தல் வெற்றிக்காகவும், அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்துள்ள கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை ஒன்று திரட்டிப் பெற வேண்டும் என்பதற்காகவும் மு.கா.வின் பிரச்சார மேடைகள் அரசுக்கு விரோதமான தோற்றப்பாட்டைக் கொண்டிருந்தன. மு.கா. தவிசாளர் தனது பிரதியமைச்சுப் பதவியைக்கூட ராஜினாமாச் செய்து முஸ்லிம்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொடுப்பதற்குத் துணிந்திருந்தார். அரசாங்கமும் ‘தேர்தலுக்குப் பின்னர் மு.கா.வின் ஆதரவைக் கோர மாட்டோம்’ என்றெல்லாம் ஊடக அறிக்கைகளை விட்டு மு.கா.வின் வசீகரத்தை மறைமுகமாக முஸ்லிம்கள் மத்தியில் உயர்த்தியது.
இதனால் சமூகப்பற்று மிகைத்த முஸ்லிம்கள் நீண்ட காலத்திற்குப் பின்னர் மரச் சின்னத்துடன் வந்த மு.கா. வை நம்பி தமது வாக்குகளை அளித்து கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்று நிறுத்தியிருக்கின்றனர். கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிந்திய காலத்தில் தன்னை நம்பி இருக்கும் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியல் பலத்தைப் பாவிக்கக் கூடிய மூன்றாவது சந்தர்ப்பம் தற்போது முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது.
கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆட்சியமைத்தாலும், எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியமைத்தாலும் அதனை அமைத்த பங்கும் பொறுப்பும் முஸ்லிம் காங்கிரசுக்கே உரித்தாகின்ற தவிர்க்க முடியாத நிலை தற்போது தோன்றி இருக்கின்றது. எனவே மு.கா. தன்மீது முஸ்லிம் சமூகம் சுமத்தியுள்ள சமூகப் பொறுப்பின் பெறுமானத்தை இந்தச் சந்தர்ப்பத்திலாவது நன்குணர்ந்து தீர்மானத்திற்கு வரவேண்டியது அவசியமாகும்.
என்ன விலை கொடுத்தாவது கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைத்துக் கொள்ள வேண்டிய நிலையும், சூழ்நிலை நிர்ப்பந்தமும் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதன் மூலம் கிழக்கு மாகாண சிறுபான்மை மக்களும் தனது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்கி இருக்கிறார்கள் என்கிற போலியான நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு வெளிக்காட்ட வேண்டிய கண்டிப்பான தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது.
உண்மையில் கிழக்கு மாகாணத்தின் தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கொள்கைகளையும், வேலைத் திட்டங்களையும் இத்தேர்தலில் தெளிவாகவே நிராகரித்திருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவேதான் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவையும், அரசாங்கத்தின் போக்கை கடுமையாகக் கண்டித்து தேர்தல் பிரச்சாரம் செய்த முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம்களும் பெருவாரியாக ஆதரித்திருக்கின்றனர்.
இந்த இடத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையானோர் அரசாங்கத்தின் கொள்கைகளை நிராகரித்தது ஏன்? முஸ்லிம் காங்கிரசுக்கு ஏன் அதிகப்படியான ஆதரவினை வழங்கினார்கள்? என்பதனை முஸ்லிம் காங்கிரஸ் இறுதி வரை மறந்து விடக்கூடாது.
எனவே முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மதரீதியான அச்சுறுத்தல்கள், அரசாங்கத்தின் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள், முஸ்லிம்களின் அரசியல் பலத்தை கிழக்கில் படிப்படியாகக் குறைத்து அம்மாகாண வளங்களைச் சுரண்டுவதற்காக மேற்கொள்ளப்படும் அரச உதவியுடனான சிங்களக் குடியேற்றங்கள், யுத்த முடிவின் பின்னர் மீள்குடியேற்ற புனர்வாழ்வு விடயங்களில் முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகின்றமை, அவசியமில்லாத இராணுவப் பிரசன்னங்களும் கெடுபிடிகளும், முஸ்லிம்களின் தனித்துவக் கலாசாரப் பண்புகளை சிதைக்கின்ற வகையான நடவடிக்கைகள், முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார நடவடிக்கைகளை நசுக்குகின்ற இனவாதிகளின் நடவடிக்கைகளையும் அதனைக் கண்டு கொள்ளாதிருக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடும் போன்ற பாரதூரமான, நியாயமான காரணங்களுக்காகவே இத்தேர்தலில் முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை நிராகரித்திருக்கின்றனர்.
ஆகவே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவினை அரசாங்கத்துக்கு வழங்குவதாக இருந்தால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உத்தரவாதப்படுத்துவதன் அடிப்படையில் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்க வேண்டும்.
மேலும் இனப்பிரச்சினைக்கான விரைவான அரசியல் தீர்வொன்றினை நோக்கி அரசாங்கத்தை நகர்த்துவதற்கான சகல அழுத்தங்களையும் சர்வதேச சமூகம் தற்போது தீவிரமாகக் கொடுத்து வருகின்றது. இந்நிலையில் அரசியல் தீர்வொன்று வருகின்றபோது அதில் முஸ்லிம்களுக்கான பங்கு என்ன? என்பது பற்றிய எவ்வித தெளிவான நிலைப்பாடுகளும் இல்லாத நிலையிலேயே அரசாங்கமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.
முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வென்பது ஒரு புறம் இருக்க, அந்தத் தீர்வை நோக்கிய பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம்களின் உரிய அந்தஸ்தை உத்தரவாதப்படுத்துவதற்குக் கூட முஸ்லிம் காங்கிரஸினால் இதுவரை முடியவில்லை என்பதும் இங்கு நாம் மறந்துவிடக் கூடாத உண்மையாகும். எனவேதான் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவைக் கோருகின்ற அரசாங்கத் தரப்பு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்ட தெளிவான, வெளிப்படையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு முடிவுக்கு வரவேண்டிய சந்தர்ப்பமாக முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் மாகாண சபை அதிகாரக் கட்டமைப்பு என்பது எந்த நோக்கத்துக்காக இந்த நாட்டில் உருவாக்கப்பட்டதோ அதனை நிறைவு செய்வதாக இதுவரை கிழக்கு மாகாண சபை இயங்கவில்லை என்பது மற்றுமொரு முக்கியமான விடயமாகும்.
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் தமது பூர்வீக வாழ்விடங்களான வட, கிழக்கில் தமது நாளாந்த விவகாரங்களை தாமே கையாண்டு தமக்கான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் வகையிலேயே 13வது திருத்தச் சட்டத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கல் ஒன்றின் மூலம் இந்த நாட்டில் மாகாண சபைகளை நிறுவும் முறைமை கொண்டு வரப்பட்டது.
ஆயினும் இந்த 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வினை நடைமுறைப்படுத்தவோ அல்லது மாகாண சபை அதிகாரத்தின் மூலம் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட நீண்ட காலப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கோ அரசாங்கம் இதுவரை சந்தர்ப்பம் வழங்கவில்லை.தனது முகவராக ஆளுநர் என்பவரை நியமித்து அதன் மூலம் மாகாண சபைக்கு சட்டபூர்வமாகக் கிடைத்திருக்கும் அதிகாரங்களைப் பறித்தெடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத்தான் இத்தனை காலமாக இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலைமையை இல்லாதொழித்து மாகாண சபைக்கு 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைத்திருக்கும் அதிகாரங்களை மக்களுக்காகப் பயன்படுத்துவதனை உறுதி செய்ய வேண்டியதும் முஸ்லிம் காங்கிரஸினுடைய தலையாய கடமையாகும்.இவ்வாறு மக்கள் ஆணை மூலமாகக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை மிகவும் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ளாமல் தமது வழமையான வழிமுறையில் அமைச்சுப் பதவிகளுக்காகவும், இன்னும் சில சலுகைகளுக்காகவும் அரசாங்கம் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணை போகக் கூடாது.
முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எதனையும் உறுதிப்படுத்தாத நிலையில் அரசாங்கம் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணை போகுமாக இருந்தால் அக்கட்சி, மீண்டுமொருமுறை அக்கட்சியை நம்பி வாக்களித்த முஸ்லிம் சமூகத்தை நடுத்தெருவில் கைவிட்டுச் சென்ற மற்றுமொரு அரசியல் துரோகமாகவே அது வரலாற்றில் பதிவாகும் என்பதையும் இத்தருணத்தில் நாம் வலியுறுத்தித் தெரிவிக்கின்றோம்.

No comments:

Post a Comment