Search This Blog

Pages

Friday, September 14, 2012

வாகன மோசடிகளை தடுக்க விசேட இணையத்தள பாதுகாப்பு திட்டம்


car-color-change
நாட்டில் வாகன மோசடி தொடர்வதனை தடுக்கும் முகமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் விசேட இணையதளமொன்று இவ்வாரம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எஸ். எச். ஹரிஸ்சந்திர தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்த இணையத் தளத்தினூடாக குறித்த ஒரு வாகனம் பற்றிய முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக விருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாகனத்தை கொள்வனவு செய்யவுள்ளோர் குறித்த வாகனத்தின் இலக்கத்தை மேற்படி இணையதளத்தில் பதிவு செய்ததும் அந்த வாகனம் தயாரிக்கப்பட்டது முதல் இறக்குமதி செய்யப்பட்ட தினம், அதனைக் கொள்வனவு செய்தவர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் விளக்கமாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். இதற்கென கடனட்டையில் 500 ரூபாவினை கட்டணமாக செலுத்த வேண்டுமெனவும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கூறினார்.
இத்திட்டம் பழைய மற்றும் திருட்டு வாகனங்களை கொள்வனவு செய்து ஏமாற்றமடைவதை தடுப்பதற்கு பேருதவியாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு மேலதிகமாக புதிய வாகனங்கள் அவற்றின் இலக்கங்கள் பற்றிய பல நவீன தவகல்களையும் இந்த இணையதளம் உள்ளடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் வாகனத்தை கொள்வனவு செய்வோர் தாம் விரும்பிய இயக்கத்தைப் பெற்றுக் கொள்ளவும் எதிர்வரும் 30 ஆயிரம் வரையான இலக்கங்களுள் ஒன்றைப் பெற்றுக்கொடுக்கவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வழிசெய்துள்ளது. வாகனப் பிரியர்களுக்காக விசேட கட்டண அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்படுகின்ற போதிலும் அதனால் வாகன மோசடிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த வாகனத்தை கொள்வனவு செய்யும் போது வாகனத்தின் இலக்கத்தை வைத்து அதனை மதிப்பிடுவது தவறு. அதற்குப் பதிலாக வாகனத்திற்குரிய புத்தகத்தைப் பார்வையிட வேண்டும். குறித்த வாகனத்திற்குரிய புத்தகத்தில் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டது முதல் அனைத்து விடயங்களையும் தெரிவித்துக்கொள்ள முடியும். இல்லையேல் கடனட்டையினூடாக மிகக் குறைந்த கட்டணமாக 500 ரூபாவினை செலுத்தி குறித்த வாகனத்தின் உண்மைத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.
வாகன மோசடியை தடுக்கும் முகமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை வகுத்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் தற்போது வாகன கொள்வனவின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டங்கள் கடந்த சில காலமாக வாகன மோசடி குறைவடைவதற்கும் பேருதவியாக இருந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment