கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தெரிவான தமது கட்சி உறுப்பினர்கள் சிலர் மாகாணசபையில் ஆட்சி அமைக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அடையாளம் தெரியாத சிலரினால் வற்புறுத்தப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின்படி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைப்பதற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடமிருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை .
குறிப்பாக மாகாணசபைக்கு தெரிவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் சிலரை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு வற்புறுத்தி சில நபர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான தமது கட்சியை சேர்ந்த 6 உறுப்பினர்களில் 4 பேர் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தலைமை வேட்பாளராக போட்டியிட்ட கே.துரைராஜசிங்கம் கூறுகின்றார்.
இதன் காரணமாக, தெரிவான உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சறுத்தல குறித்து தேர்தல் ஆணையாளருக்கு தான் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அக்கடிதத்தில் சகல உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்
பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு தான் இதனை கொண்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் தனக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் என்றும் கே.துரைராஜசிங்கம் கூறுகின்றார்.
அரசாங்கத்திற்கு அதரவு வழங்குமாறு அழுத்தம் கொடுக்கும் நபர்கள் யார் என்று குறிப்பிட்டு கூற முடியாதுவிட்டாலும் ,அரசாங்கத்தின உயர் மட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட தரகர்கள் அல்லது முகவர்களாக இருக்கலாம் என தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட உறுப்பினர்கள் தமது பாதுகாப்பு கருதி தமது வீடுகளில் தங்கியிருக்க முடியாத நிலையில் அச்சமடைந்தவர்களாக வேறு இடங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக நாடொன்றில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருத வேண்டியுள்ளது என்றும் கிழக்கு மாகாண சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவான கே.துரைராஜசிங்கம் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment