எகிப்து, லிபியா மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமான முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்த நபர் மாயமாகியுள்ளதோடு அவர் குறித்த தகவல்களும் போலியானவை என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினர்கள் தயாரிப்பாளர் தம்மை தவறாக வழி நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘குற்றமற்ற முஸ்லிம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியவரின் பெயர் சாம் பசில் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது உண்மையான பெயர் அதுவல்ல என தற்போது தெரியவந்துள்ளது. இந்த திரைப்படம் கடந்த ஆண்டில் 59 நடிகர்கள், திரைக்கு பின்னால் 45 தொழிநுட்பவியலாளர்கள் ஊழியர்களுடன் 2 மணி நேரம் ஓடக்கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இது லொஸ் ஏஞ்சல்சிலுள்ள ஒரு திரையரங்கில் கடந்த ஆண்டு சுமார் காலியான ஆசனங்களுடன் ஒரே ஒரு முறை திரையிடப்பட்டுள்ளது. எனினும் இந்த திரைப்படத்தின் 14 நிமிடங்கள் ஓடும் மாதிரி திரைப்படம் கடந்த ஜூனில் யூடியுப் சமூக இணைதளத்திற்கு சாம்பஸில் என்பவர் அனுப்பியுள்ளார்.
இது மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்ட மோசமான நடிப்புடன் கூடிய திரைப்படம் என விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இதில் முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தந்தையற்றவர், கழுதை, முதல் முஸ்லிம் மிருகம், தன்னினச் சேர்க்கையாளர் என பல மோசமான வார்த்தைகளால் இழிவுபடுத்தப்பட்டுள்ளார்.
எனினும் இந்த திரைப்படத்தை எகிப்தின் அல் நாஸ் தொலைக்காட்சி அரபு மொழி பெயர்ப்புடன் வெளியிட்டதைத் தொடர்ந்து முஸ்லிம் நாடுகளில் திரைப்படத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.
இந்த திரைப்படத்தை தயாரித்த சாம் பசில் என்பவர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் யூதர்களின் நிதியுதவியுடன் 5 மில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இஸ்ரேல் இதனை மறுத்துள்ளது. இவ்வளவு தொகை நிதியுதவி தமது நாட்டில் இருந்து செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த சாம் பசில் என்வர் குறித்து விபரம் தேடியுள்ள ஏ.பி. செய்திச் சேவை அவரது முகவரியில் நகல்லா பஸ்ஸலி நகல்லா என்பவரையே தொடர்பு கொண்டதாகவும் அந்த நபர் இந்த திரைப்படத்தின் முகாமையாளராக செயற்பட்டதாகவும். தாம் பசில் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாம் தவறாக வழிநடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் நடித்த சின்டி லீ கார்சியா, தாம் கடந்த புதன்கிழமை பசிலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் பயந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
“நான் சாமுக்கு தொலைபேசியில் அழைத்து ‘ஏன் இவ்வாறு செய்தீர்கள்’ என கேட்டன்? அதற்கு அவர் ‘ஒருவருக்கு கொருவர் கொன்று கொல்லும் இந்த அடிப்படைவாத இஸ்லாமி யர்களால் நான் வெறுப்படைத் திருக்கிறேன். இது எனது தவறில்லை’ என கூறினார்” என்று அந்த நடிகை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்த லீ கார்சியா கல்கர் என்ற இணைய தளத்திற்கு கூறும்போது, 2000 ஆண்டுகளுக்கு முன்னரான எகிப்து வரலாற்றை சொல்வது என்றும் ஒரு பாலைவன போர் வீரனின் கதை என்றும் தயாரிப்பாளர் தமக்கு கூறியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு தாம் ஆதரவளித்ததாக அல் குர்ஆனை எரித்து பரபரப்பை ஏற்படுத்திய பிளோரிடா மாநில கிறிஸ்தவ மதப் போதகர் டெர்ரி ஜோன்ஸ், இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனை கொண்ட மொற்றி சதக் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பற்றி தமக்கு முழுமையாக தெரியவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை இயக்கிய இணை இயக்குநர் தியோ வான் கொப் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment