தன் மீது விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஈராக் துணை ஜனாதிபதி தாரிக் அல் ஹாஷ்மி நிராகரித்துள்ளார்.
ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின் அமெரிக்காவின் உதவியுடன் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது.
கடந்த 2006ஆம் ஆண்டு தாரிக் அல் ஹாஷ்மி துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்று, கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் துணை ஜனாதிபதியாக தெரிவானார்.
துணை ஜனாதிபதி பதவியில் இருந்த தாரிக் அல் ஹாஷ்மி, 26 சம்பவங்களில் 46 பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் அவரை ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி பாக்தாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் துருக்கி சென்ற ஹாஷ்மி மீண்டும் நாடு திரும்பவில்லை. இதற்கிடையே ஹாஷ்மி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
துருக்கியின் அங்காரா நகரில் இது குறித்து ஹாஷ்மி கூறுகையில், ஈராக்கில் என் மீதான வழக்கு நியாயப்படி நடக்குமானால் நான் நாடு திரும்ப தயாராக உள்ளேன். அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மேற்பார்வையில் போதிய பாதுகாப்புடன் இந்த வழக்கு நடந்தால் நீதிமன்றத்தில் ஆஜராவேன். மற்றபடி நான் ஈராக் திரும்பும் திட்டமில்லை.
ஈராக்கில் தற்போதுள்ள அரசியலமைப்பு சட்டப்படி எனக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே நீதிபதிகளை பாக்தாத்துக்கு அனுப்பி என்னை விசாரிக்கச் செய்யும் படி ஐ.நா.விடம் கோர உள்ளேன்.
ஐ.நா நீதிபதிகள் அளிக்கும் எந்தவிதமான தீர்ப்பையும் ஏற்கத் தயாராக உள்ளேன். என் வாழ்க்கையை பற்றி நான் கவலைப்படவில்லை. என் நாட்டு மக்களைப் பற்றியும், ஈராக் - துருக்கி இடையிலான உறவு குறித்தும் தான் கவலைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு மாத காலத்துக்குள் பாக்தாத் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, ஹாஷ்மிக்கு ஈராக் நீதித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஹாஷ்மியை ஈராக்கிடம் ஒப்படைக்கும் திட்டமில்லை என துருக்கி வெளிவிவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment