Search This Blog

Pages

Tuesday, September 11, 2012

முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கவுள்ள அரசியல் அதிகாரம் சகோதரர் ஜெமீலுக்கே வழங்கப்பட வேண்டும்-ஏ.ஏ.பஷீர்


jameel-88
-அஸ்லம் எஸ்.மௌலானா-
கிழக்கு மாகாண சபை ஆட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கவுள்ள அரசியல் அதிகாரம் கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் விசுவாசமிக்க சகோதரர் ஜெமீலுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மீண்டும் வெற்றியீட்டிய அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர்  ஏ.எம்.ஜெமீலை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் அம்பாறை கச்சேரியில் இருந்து வருகை தந்த ஏ.எம்.ஜெமீல், காரைதீவு – மாளிகைக்காடு சந்தியில் இருந்து பெரும் திரளான மக்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, சாய்ந்தமருதில் அமைந்துள்ள அவரது இல்லம் வரை பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வாகனப் பவனி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் உரையாற்றினர்.
அங்கு கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் பேசுகையில் மேலும் கூறியதாவது;
“எமது சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தின் வேட்பாளராக போட்டியிட்ட ஜெமீல், இப்பிரதேசத்தில் அரங்கேற்றப்பட்ட பல்வேறு சதிகளையும் நயவஞ்சக செயற்பாடுகளையும் முறியடித்தே இந்த வெற்றியை அடைந்துள்ளார். எமக்கு மாற்றுக் கட்சியினரால் இருந்த பிரச்சனைகளை விட எமது கட்சிக்குள்ளேதான் குத்து வெட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் எமது மக்கள் சகோதரர் ஜெமீலின் சமூக நோக்கு, கட்சிப் பற்று, தலைமைத்துவ விசுவாசம், அவரது கடந்த கால சேவைகள், சமூக ரீதியான தியாகங்கள், மாகாண சபையில் தனக்கான தனிப்பட்ட சலுகைகளையும் சொகுசுகளையும் உதறித் தள்ளி விட்டு அர்ப்பணிப்புடன் சமூகத்திற்காக குரல் எழுப்பிய துணிச்சல் மிக்க நடவடிக்கைகள் என்பவற்றை கருத்திற் கொண்டு அவருக்கு அதிகப்படியான வாக்குகளை அளித்து நன்றிக் கடன் செலுத்தியுள்ளனர்.
இந்த அடிப்படையில்தான் அம்பாறை மாவட்டம் பூராவும் நன்கு அறியப்பட்ட எமது வேட்பாளர் ஜெமீலுக்கு எல்லா ஊர்களிலும் மக்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் மக்கள் இவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருப்பதுடன் எதிர்காலத்தில் உரிமைகளுடன் கூடிய அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பினையையும் பொறுப்பையும் சுமத்தியுள்ளனர்.
கடந்த மாகாண சபையில் நமது முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் இருந்தது. ஆனால் இம்முறை மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது. எத்தரப்புடன் இணைந்து ஆட்சி அமைத்தாலும் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கின்ற முதலமைச்சர் பதவியோ அமைச்சு அந்தஸ்தோ எதுவானாலும் அது நமது பிரதிநிதி ஜெமீல் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏனெனில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் எமது கட்சி சார்பில் முன்னர் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகித்தோரில் ஜெமீல் மாத்திரமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பதால் மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் முழுமையான அறிவும் அனுபவமும் இவரிடம் மாத்திரமே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது என்று நாம் திடமாக நம்புகின்றோம்.
கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்த போதிலும் இந்த சமூகத்திற்கும் மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் தன்னால் இயன்ற சேவைகளை இவர் செய்துள்ளார் என்பதை யாவரும் அறிவோம். அதனால் தான் முன்னர் மாகாண சபையில் அங்கம் வகித்த அனைவரையும் நிராகரித்துள்ள இம்மாவட்ட மக்கள் ஜெமீலை மாத்திரம் மீண்டும் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதற்கு இங்கு கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் சான்று பகர்வீர்கள்.
அதேவேளை கல்முனைத் தொகுதியில் நமது கட்சி சார்பாக பலர் போட்டியிட்ட போதிலும் முழுத் தொகுதிக்கும் பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுகின்ற துடிப்பு மிக்க இளைஞன் ஜெமீல் மாத்திரம்தான் அனைவரதும் நம்பிக்கையை பெற்று ஒரேயொரு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆகையினால் நீண்ட காலமாக அபிவிருத்தியில் பின் தங்கி இருக்கின்ற நமது கல்முனைத் தொகுதியைக் கட்டி எழுப்புவதற்கு அறிவு, ஆற்றல், ஆளுமை, அனுபவம் என்பவற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஜெமீலுக்கு கிழக்கின் அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் பிரார்த்திக்கின்றோம்.
எமது சகோதரர் ஜெமீல் உள்நாட்டில் மட்டுமல்ல ஈரான், மலேசியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் நன்கு அறியப்பட்டு அந்நாடுகளின் செல்வாக்கையும் பெற்ற ஒருவர் என்பதோடு கடந்த காலங்களில் எமது தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்டார், குவைத், ஈரான் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்த போதெல்லாம் அவரால் அழைத்துச் செல்லப்பட்டு அந்நாடுகளின் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஒரேயொரு மாகாண சபை உறுப்பினர் இந்த ஜெமீல் மாத்திரமே என்பது அனைவருக்கும் தெரிந்த உணமையாகும். அது நமது தலைவரின் தூர நோக்கான சிந்தனையாக இருந்திருக்கிறது.
ஆகையினால் பதவி, பணத்துக்கு சோரம் போகாமல் இந்த மண்ணுக்கும் கட்சிக்கும் சமூகத்திற்கும் ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டார் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ள – இந்த முஸ்லிம் சமூகத்தின் காவலன் – நமது மகன் ஜெமீல் மாத்திரம்தான் எமது தேசியத் தலைவரின் வழி காட்டலில் கிழக்கை ஆள்வதற்கு தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.
எனவே மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ள இக்கூட்டத்தில் கிழக்கின் ஆட்சியில் நமது கட்சிக்கு கிடைக்கவுள்ள அரசியல் அதிகாரம் இந்த இளம் தளபதிக்கு வழங்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment