கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலை காணப்படுகின்றது. இத்தேர்தல் முடிவில் இரு போனஸ் ஆசனங்களுடன் மூன்று மாவட்டங்களிலும் 14 ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அறுதிப் பெருன்பான்மை இல்லாமையால் அதனால் தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு, 19 ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், ஆளும்கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்குமா அல்லது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐதேகவின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிக் கட்சியாகவே இருந்துவருகின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் பொறுப்புவாய்ந்த அமைச்சு ஒன்றையும் மு.கா. பெற்றுள்ளது.
எனவே UPFA, SLMC ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் நிலையே அதிகளவாக காணப்படுகின்றது.
இதேவேளை, கிழக்கில் தனது ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற அவா இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இல்லாமலில்லை. இதனை உறுதிப்படுத்துமுகமாக சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ்சை தொடர்புகொள்ள முயற்சிப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டிணையுமோ அந்தக் கட்சியே ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன்மூலம் கிழக்கு மாகாண தேர்தலில் தீர்மான சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகிறது. ஆக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் பங்காளிக் கட்சியாக இருக்கின்றதென்ற உண்மை வெளிப்படையானதே.
No comments:
Post a Comment