இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் பலஸ்தீன பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அங்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை 57 வீதமாக அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இதில் காசா பகுதியில் வேலையில்லா தோர் வீதம் உலகில் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காசாவில் வேலையில்லாத இளைஞர் ஒருவர் கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. வின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிபுணர் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பலஸ்தீன பொருளாதார அபிவிருத்தி தொடர்பான நீண்டகால எதிர்பார்ப்புகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு ஐ.நா. நிபுணர் குழு பலவிடயங்களை காரணமாக குறிப்பிட்டுள்ளது.
இதில் ஓர் அமைப்பின் மீது கட்டுப்பாடுகளை விதித்தது, நிவாரண உதவிகளுக்கான கட்டுப்பாடுகள், தனியார் துறை செயலிழப்பு மற்றும் தொடரும் பொது வரி தொடர்பான சிக்கல் ஆகிய காரணிகள் குறிப்பிடத்தக்கவை. இது தவிர, வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு அங்கு மேலும் வறுமையை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜுனில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் பலஸ்தீனில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியது. கடந்த 2011 இல் பலஸ்தீனில் 222,000 பேர் வேலையில்லாமல் இருப்பதாகவும் அதில் 70 வீதமானவர்கள் 30 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதில் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதியில் 80 வீதமானவர்களுக்கு மேற்பட்டோர் சர்வதேச உதவியிலேயே தங்கியுள்ளனர். அதில் 40 வீதத்திற்கு மேற்பட்டோர் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என கூறப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுப்படி பலஸ்தீனில் 57 வீதமானோர் வேலையின்றி உள்ளனர். அதில் காசா பகுதியில் 45.7 வீதமானவர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் விதித்திருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளே இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என ஐ. நா. நிபுணர் குழு குற்றம்சாட் டியுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பலஸ்தீன உற்பத்தி தளங்களை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக விவசாயத்துறை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் மேற்குக் கரையில் 46 வீதமான நிலப்பகுதிகளில் பொருளாதார உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 82 வீதமான நிலநீர் பகுதி பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று காசாவில் பயிரிடக்கூடிய பாதி அளவான நிலம் மற்றும் 85 வீதமான மீன் பிடி வளமுள்ள பகுதி பயன்படுத்தப்பட முடியாத நிலையில் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்திற்கு பார்வையாளர் அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதற்கு ஆதரவளிக்க வுள்ளதாக அரபு லீக் அமைப்பு அறிவித்துள்ளது.
அரபு லீக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நேற்று முன்தினம் கெய்ரோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் வைத்தே ஐ. நா. சபையில் அங்கத்துவம் அல்லாத நாட்டுக்கான அந்தஸ்தை வழங்குவதற்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டது.
ஐ. நா. சபையில் முழு அங்கத்துவத்தை பெறுவதற்கு பாதுகாப்புச் சபையின் ஆதரவை பெறுவதில் சிக்கல் இருப்பதால் பார்வையாளர் அந்தஸ்த்துக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டதாக அரபு லீக் அமைப்பின் செயலாளர் நாயகம் நபில் அல் அரபி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பரில் பலஸ்தீனம் ஐ.நா. வில் முழு அங்கத்துவத்தை பெற விண்ணப்பித்தது. எனினும் இதற்கு எதிராக பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாக அமெரிக்கா எச்சரித்ததைத் தொடர்ந்து அந்த விண்ணப்பம் பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அங்கத்துவம் இல்லாத நாட்டுக்கான அந்தஸ்தை பெறுவதற்கு பலஸ்தீனம் விண்ணப்பிக்க உள்ளதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment