Search This Blog

Pages

Saturday, September 8, 2012

பாரிய அசம்பாவிதங்களின்றி தேர்தல் வாக்களிப்பு

election2012
மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் இதுவரை பாரிய இடையூறுகள் எதுவுமின்றி வாக்களிப்பு இடம்பெறுவதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்னாயக்க தெரிவித்தார்.
நண்பகல் 12 மணிவரை அம்பாறையில் 30 சதவீதமானோரும், மட்டக்களப்பில் 20 சதவீதமானோரும் திருகோணமலையில் 20 சதவீதமானோரும் வாக்களித்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரத்தில் 25 சதவீதமானோரும் பொலன்னறுவையில் 35 சதவீதமானோரும் இரத்தினபுரியில் 25 சதவீதமானோரும் கேகாலையில் 23 சதவீதமானோரும் வாக்களித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாகாணங்களிலும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 தேவைப்படின் தேர்தல் பாதுகாப்பின் நிமிர்த்தம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களை அச்சுறுத்தல், சார்பாக வாக்களிப்பதற்கு அழுத்தம் கொடுத்தல், பதாகைகள், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், அவற்றை காட்சிப்படுத்தல், வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றிச்செல்லல் ஆகிய விடயங்கள் குறிப்பாக தேர்தல் தின சட்ட மீறல்களாக கருதப்படவுள்ளன.
இத்தகைய தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைதுசெய்வதற்கான பணிப்புரை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் வாகனங்கள் கைப்பற்றப்படும் பட்சத்தில் அவற்றின் சாரதியும் கைதுசெய்யப்படுவதுடன், நிதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைகள் மற்றும் அமைதியின்மை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் தேவைக்கேற்ப அதிகாரத்தை பிரயோகிக்கவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன மேலும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment