கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. இன்று மாலை 3 மணிவரையில் அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 50% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்திருந்தது.
பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி சிறுசிறு சம்பவங்களுடன் தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தேர்தல்கள் செயலகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் இரு அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் சட்டங்களை மீறிய இருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா மற்றும் ஹொரவபொத்ததான ஆகிய பகுதிகளில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி வாக்கினை அளிக்க முயற்சித்த ஒருவர் கிண்ணியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவர் ஹொரவபொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன
No comments:
Post a Comment